தொடரும் நீட் மரணங்கள்! தமிழ்நாட்டு மாணவர்களை காக்க அணியமாவோம்!

- in அறிக்கைகள்​, நீட்

சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த கூழையூர் கிராமத்தை சேர்ந்த, நீட் தேர்வுக்காக தயாராகிக் கொண்டிருந்த தனுஷ் என்ற மாணவர் செப் 12 அன்றும், அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே நீட் தேர்வு எழுதி முடித்த கனிமொழி என்ற மாணவி செப் 14 அன்றும் நீட் தேர்வு தோல்வி பயம் காரணமாக தன்னுயிரை மாய்த்துள்ளனர். நீட் தேர்வு காரணமாக மாணவர்கள் ஆண்டுதோறும் தொடர்ச்சியாக உயிரை விட்டு வரும் நிலையில், தமிழ்நாட்டின் ஆட்சி மாற்றம் இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கும் என்று எதிர்பாக்கப்பட்ட நிலையில், மாணவர் தனுஷ் மற்றும் மாணவி கனிமொழி ஆகியோரின் மரணம் அதிர்ச்சியளிக்கக் கூடியதாக உள்ளது. நீட் தேர்வு தற்போது சமூக பிரச்சனையாக உருவெடுத்துள்ளதை அரசு உணர்ந்து, நீட் தேர்வை ரத்து செய்வதில் உள்ள சிக்கல்களை மக்களிடையே கூறி, அதனை ரத்து செய்வதற்காக மேற்கொள்ளப்படும் முன்னெடுப்புகளை நாட்டு மக்களிடையே தெளிவுபடுத்த வேண்டும்.

நீட் தேர்வை ரத்து செய்வது என்பது நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பிரதான கோரிக்கையாக இருந்தது. நீட் தேர்வை ரத்து செய்வது என்பது சாமானிய மக்கள் புரிந்து கொள்ள முடியாத, மாநில அரசின் அதிகாரத்திற்கு உட்படாத அரசியலமைப்பு சிக்கல். இதை திமுக மக்கள் மன்றத்தில் தெளிவுபடுத்தவுமில்லை. தமது ஆட்சி அதிகாரத்திற்குட்பட்டதான புரிதலையே மக்களிடம் கொடுத்து வந்தது. 2021 ஆண்டிற்கான நீட் தேர்வு அறிவிப்பு வெளியான காலத்திலேயே இதற்கான எதிர்ப்பு நடவடிக்கைகள் தீவிரமடைந்திருக்கவேண்டும். மோடி அரசு பள்ளிக்கல்வி தேர்வை இரத்து செய்வதும், ஆனால் நீட் தேர்வை நடத்துவமான பாஜகவின் நயவஞ்சகத்தை எதிர்த்த நடவடிக்கையை திமுக அரசு துவக்காததன் விளைவுகளை அப்பாவி மாணவர்கள் எதிர்கொள்கிறார்கள். அதே போல், ஏ.கே.ராஜன் அறிக்கை மீது இரண்டு மாத காலம் நடவடிக்கை எடுக்காதது என திமுக அரசின் செயல்கள் இன்றைய சூழலுக்கு காரணமாகியுள்ளது. இதற்கு திமுக அரசு பதிலளிக்க வேண்டும். முந்தைய அதிமுக அரசு ஆண்டுதோறும் கடைசி நேரம் வரை நம்பிக்கையளித்து கைவிட்டது போன்ற சூழல் ஆட்சிமாற்றத்திற்கு பிறகும் எழுந்துள்ளது. இரண்டு மாதத்திற்கு முன்னரே நீட் தேர்வை இரத்து செய்வதற்கான சட்டம் கொண்டுவரப்பட்டிருந்தால், தமிழ்நாட்டு மக்களுக்கு பதிலளிக்க வேண்டிய நிலையில் ஒன்றிய பாஜக அரசு தள்ளப்பட்டிருக்கும். இன்று ஒன்றிய அரசு எவ்வித நெருக்கடியுமின்றி மேலும் ஓராண்டுகாலம் எடுத்துக்கொண்டு நீட் தேர்வு எதிர்ப்பை மட்டுப்படுத்தும் வேலையில் இறங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அதே போல், நீட் தேர்வை ரத்து செய்யும் மசோதா தாக்கலின் போது அதிமுகவின் வெளிநடப்பு தமிழின விரோதமானது.

மாணவர் தனுஷ் மற்றும் மாணவி கனிமொழி ஆகியோரின் மரணம், நீட் தேர்வை ரத்து செய்யப்பட வேண்டியதன் அவசரத்தேவையை மீண்டும் உணர்த்தி சென்றிருக்கிறது. தனுஷ் ஏற்கனவே இரண்டு முறை நீட் தேர்வில் முயற்சித்து, தற்போது மூன்றாவது முறையும் தோற்றுவிடுவோமா என்ற பயத்தில் உயிரை விட்டுள்ளார். நீட் தேர்வு பயிற்சிக்கென இரண்டு-மூன்று ஆண்டுகளையும், அதற்கான பொருளாதார செலவினத்தையும் சந்திக்கக் கூடியவர்கள் மட்டுமே நீட் தேர்வில் அதிகளவில் போட்டியிடுகின்றனர். இவர்களோடு போட்டியிடும் நடுத்தர-ஏழை-எளிய மக்களுக்கு ஏற்படும் மன அழுத்தமும், இக்கட்டான குடும்ப சூழலிலும் பயிற்சி மேற்கொள்ள பெற்றோர் முயற்சிப்பதும், அழுத்தங்களுக்கிடையே ஏற்படும் தோல்வியின் பயமும் மாணவர்களை தற்கொலை எண்ணத்திற்கு தள்ளுகிறது.

ஆண்டுதோறும் தமிழ்நாடு அரசு மாணவர்களுக்கு வழங்கும் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்ற உறுதிமொழியும், அந்த எதிர்பார்ப்பினூடாக நீட் தேர்விற்கு போட்டியிடுவதும் மாணவர்களின் மனநிலையை பாதிக்கின்றன. அதிமுக அரசு செய்து வந்த துரோகத்தை வீழ்த்த வேண்டுமென தமிழ்நாடு விரும்பியது. திமுகவும் தனது தேர்தல் அறிக்கையில் முதல் சட்டமன்ற கூட்டத்தொடரிலேயே நீட் தேர்வு ரத்து செய்யப்படுவதற்கு முயற்சிக்கும் என்று கூறியிருந்தது. அந்த அடிப்படையிலேயே தமிழ்நாட்டு மக்கள் திமுகவிற்கு வாக்களித்து ஆட்சியில் அமர்த்தி உள்ளனர். இருந்தும், நடப்பாண்டில் நீட் தேர்வு தடுத்து நிறுத்தப்படாதது, தமிழ்நாட்டு மக்களுக்கு ஏமாற்றத்தையே அளித்துள்ளது.

திமுக ஆட்சிக்கு வந்ததும், கடந்த ஜூன் 10 அன்று ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் அவர்கள் தலைமையில் நீட் தேர்வு குறித்த ஆணையம் அமைக்கப்பட்ட போதே, திமுக ஆட்சி மீது நம்பிக்கை ஏற்பட்டது. ஆனால், ஏ.கே.ராஜன் ஆணையம் இரண்டு மாதங்களுக்கு முன்னால் ஜூலை 14 அன்று அறிக்கையை சமர்ப்பித்த பின்னரும், நீட் தேர்வு தேர்வு தேதி அறிவிக்கப்பட்ட போதும், திமுக அரசு போதிய நடவடிக்கைகள் எடுக்காதது ஏமாற்றத்தையே அளித்தது. திமுக அரசின் இந்த தாமதம் இப்பிரச்சனை இன்று தீவிரமாக காரணமாகியுள்ளது. ஏ.கே.ராஜன் அறிக்கை முயற்சி இந்த காலதாமதத்தால் கண்துடைப்பாகவே பார்க்கப்படும். உச்சபட்சமாக, மாணவர் தனுஷ் இறந்த அதிர்ச்சி நீங்காத நிலையிலும், நீட் தேர்வு நடத்தி முடிக்கப்பட்ட பிறகு, பட்ஜெட் கூட்டத்தொடரின் இறுதி நாளில் திமுக அரசு நீட் தேர்வுக்கு எதிரான சட்ட முன்வரைவை சட்டமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. அதற்கு அதிமுக ஆதரவளித்தாலும், நீட் தேர்வு ரத்து குறித்து முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ள கருத்துக்கள், அதிமுகவின் தமிழினவிரோத அரசியலை அம்பலப்படுத்தியுள்ளது. இதனை மே பதினேழு இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது.

நீட் தேர்வை ரத்து செய்வதற்கான முந்தைய சட்டங்கள் ஒன்றிய அரசினால் நிராகரிக்கப்பட்டுள்ளன. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பும் இறுதி செய்யப்பட்டுவிட்டது. சட்டமன்ற தீர்மானங்கள், சிறப்பு சட்டங்கள், நீதிமன்ற சட்ட போராட்டங்கள் என அனைத்து வழிகளையும் முந்தைய அதிமுக அரசு அடைத்துவிட்ட நிலையில், திமுக அரசு அதே வழியில் மீண்டும் முதலிலிருந்து துவங்குவது போல் தெரிகிறது. அதிகாரமற்ற சட்டமன்ற தீர்மானங்களால் ஆகப்போவது எதுவுமில்லை. நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு கோரும் புதிய சட்ட முன்வரைவு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டாலும், அது குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறுவதில் தான் முழுமையடையும். முந்தைய அரசு இதில் கபடநாடகமாடியதே அதிமுகவின் வீழ்ச்சிக்கு காரணமாக அமைந்தது.

பொதுப்பட்டியலுக்கான அதிகார வரிசையில், இந்திய அரசியலமைப்பு சட்டம் நாடாளுமன்ற அதிகாரத்தையே முதன்மைப்படுத்துகிறது. எனில், கல்வியை மாநிலப் பட்டியலுக்கு கொண்டுவருவதற்கான முயற்சிகளை தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டும். தமிழ்நாடு அரசு தமிழ்நாட்டு மக்களுக்கான உரிமையை பெறுவதற்கு ஒன்றிய அரசின் தயவை நாட வேண்டியுள்ளது ஜனநாயகத்தின் கேலிக்குரிய விடயமாகும்.இது விவாதமாக்கப்படுவதும், மாநில அரசின் அதிகாரமே அம்மாநில மக்களுக்கான உரிமையை இறுதி செய்யும் என்பதும் நிலைநிறுத்தப்பட வேண்டும். கோடிக்கணக்கானோர் வீதியில் இறங்காமல் இந்த உரிமை சாத்தியமில்லை.

இந்திய பார்ப்பனிய அதிகார வர்க்கம் தமிழர் நலனுக்கு எதிரானது என்பது இந்திய சுதந்திரத்திற்கு முன்பிருந்தே அறிந்த ஒன்று. இதனை தந்தை பெரியார் நேரடியாகவே கூறியுள்ளார். மாநில சுயாட்சியை வெல்லாமல் இந்த நிலை மாறாது என்பதை திமுகவின் முதுபெரும் மறைந்த தலைவர்கள் முன்பே உணர்த்தியுள்ளார்கள். அந்த உரிமையை வெல்வதற்குரிய வேலைத்திட்டத்தை முன்வைக்காமல் இந்த உரிமைக்கான போராட்டம் துவங்காது. இந்த உரிமை சட்டமன்றத்தில் வெல்லப்படக்கூடிய ஒன்று அல்ல. மக்கள் மன்றத்திற்கு கொண்டு செல்லப்பட வேண்டும். அவ்வாறான போராட்ட சூழல் இப்பிரச்சனையில் பாஜகவின் சூழ்ச்சிகரமான தமிழின விரோதத்தை வீழ்த்தும். தமிழ்நாட்டின் ஜனநாயக, முற்போக்கு கட்சிகள், இயக்கங்கள், அமைப்புகள் பாஜகவின் கொடுங்கோல் நீட்டிற்கு எதிரான சனநாயக போராட்டத்திற்கு மக்களை அணியப்படுத்த வேண்டுமென மே பதினேழு இயக்கம் அறைகூவல் விடுக்கிறது. அத்தகைய முன்னெடுப்புகளுக்கு பின்னால் தமிழ்நாட்டு மக்கள் அணி திரள்வார்கள். இதுவே ஒன்றிய அரசின் பாசிசத்தை எதிர்க்கும் வலிமையை தமிழ்நாட்டிற்கு அளிக்கும்.

இந்திய மோடி அரசின் கார்ப்பரேட் நலனுக்கான நீட் தேர்வு முறை என்பது தனியாருக்கும், பணக்காரர்களுக்கும்,உயர்சாதிகளுக்கும் மருத்துவக்கல்வியை தாரை வார்க்கும் நயவஞ்சக தேர்வு முறை. கல்வியை பொதுப்பட்டியலில் இருந்து ஒன்றிய அரசின் பட்டியலுக்கு கொண்டு சென்றது மாநிலங்கள் இழந்த அடிப்படை உரிமை. மோடி அரசு தொடர்ந்து நீட் தேர்வின் மூலமாக சாமானிய மக்களை, தமிழ்த்தேசிய மக்களை வஞ்சித்து வருகிறது. உயர்கல்வித் தேர்வுகளை கொரோனோ தொற்று எனும் காரணத்தினால் ரத்து செய்த மோடி அரசு, நீட் தேர்வை இரத்து செய்யாததன் காரணத்தின் பின்னணி கார்ப்பரேட் மற்றும் பயிற்சி நிறுவனங்களின் நலனும் உள்ளடங்கி உள்ளது. அப்பட்டமாக இந்நிலை அறிந்த பின்னர் நீட் தேர்வு ரத்து என்பது நீண்ட நெடிய போராட்டமாகவே இந்த உரிமை மீட்பு இருக்க இயலும்.

நீட் தேர்வு இரத்தும், கல்வி உரிமையை மீட்டெடுத்தலும் இல்லாமல் மாநில உரிமை முழுமையடையாது. மாநில அரசுகளுக்கு, சட்டமன்றத்திற்கு நீட் தேர்வை இரத்து செய்யும் உரிமை கிடையாது. வல்லமை பொருந்திய முதலமைச்சராக ஒருவர் வந்தாலும் இதைச் செய்ய இயலாது, மீறினால் தமிழர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சனநாயக அரசை, இந்திய அரசு தமிழர்களின் ஒப்புதல் இல்லாமலேயே கலைத்துவிடவும் முடியும் எனும் அளவிற்கு ஒன்றிய அரசிற்கு கீழ்படிந்து நடக்கும் நிலையில் மாநிலங்கள் உள்ளன. இப்படியாக மாவட்ட நிர்வாக அதிகாரமளவிற்கு குறைக்கப்பட்ட அதிகாரத்துடன் உள்ள மாநில ஆட்சியை வைத்துக் கொண்டு தமிழர்களின் நலன்களை காக்க இயலாது என்பதை வெளிப்படையாக அறிவித்து, மக்களை குழப்பாமல், திசை திருப்பாமல் உண்மை நிலையை மக்களுக்கு சொல்ல வேண்டும்.

தற்போதுள்ள மாநில உரிமைகள் முழுமையற்றவை என்பதை அறிஞர்.அண்ணா முதல் பல திமுகவின் முன்னோடிகளே ஆதாரப்பூர்வமாக ஆவணப்படுத்தி இருக்கிறார்கள். இந்த மாநில ஆட்சி அதிகாரம் என்பது தமிழர்களை சுரண்டுவதற்காக பார்ப்பனர்கள் உருவாக்கிய கட்டமைப்பு என தந்தை பெரியார் அப்பட்டமாக, குழப்பத்திற்கிடமில்லாமல் அறிவித்தவர். ஈழத்தந்தை செல்வா ஈழ மக்களுக்கு உதவி செய்ய தமிழக தமிழர்களின் உதவியை கேட்ட பொழுது தந்தை பெரியார் சொன்ன ‘ஒரு அடிமை மற்றொரு அடிமைக்கு எப்படி உதவி செய்ய இயலும்’ என்னும் வாசகம் இந்த அரசியலை மிகக் கூர்மையாக எடுத்துரைக்கிறது.

கல்வி-நீட், ஜிஎஸ்டி, மின்சாரம், சுகாதாரம், உணவு, குடியுரிமை, மீனவர் உரிமைக்கான வெளியுறவு போன்ற பல அடிப்படை உரிமைகள் இந்திய ஒன்றிய அரசிடம் குவிந்து கிடக்கிறது. இதற்கு எதிரான போராட்டங்களையே தமிழ்நாடு கடந்த 10 ஆண்டுகளில் கண்டது. இந்த உரிமைகளை அதிமுக அரசு ஒன்றிய மோடி அரசிடம் பலிகொடுத்து அடிபணிந்தது என்பதாலேயே அதன் ஆட்சி அகற்றப்பட்டது. இந்த கோரிக்கைகளை, உரிமைகளை மாநில ஆட்சியினால், முதல்வர்களால், அமைச்சர்களால், சட்டமன்றத்தால் மட்டுமே வெல்ல இயலாது. அதிகார எல்லைகள் குறுக்கப்பட்ட நிலையிலேயே மாநிலங்கள் வாழ்கின்றன. இந்த உண்மையை மக்களிடம் தெரிவிக்காமல் தேர்தல் அரசியல் வழியாகவும், மாநில அதிகாரத்தை, முதலமைச்சர் பதவியை அடைந்தால் முழுத்தீர்வு கிடைக்குமென்பதை அதிமுக, திமுக போன்ற ஆண்ட, ஆளும் கட்சிகள் உருவாக்கும் மாயப்பிம்பத்தை ஒன்றிய அரசு ஒவ்வொரு நெருக்கடியிலும் உடைக்கிறது என்பதை நாம் உணரவேண்டும்.

மாநில அரசோடு, தேர்தல் சாராத மக்கள் இயக்கங்களும், சாமானிய மக்களும் அணி திரட்டப்பட்டால் மட்டுமே இந்த உரிமைகளை வென்றிட முடியும். முதல்வரானால் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டி தமிழினத்தை நிமிரச் செய்யலாம் என்று அதிகாரத்தினை நோக்கி நகரும் அனைத்து கட்சிகளும் பேசுகின்றன. இது எவ்வகையிலும் முழுமையான உண்மையல்ல என்பதை நீட், ஏழு தமிழர் விடுதலை, மீனவர் படுகொலை, ஜிஎஸ்டி வரி பங்களிப்பு, குடியுரிமைச் சட்டம், மின்சாரச் சட்டம் போன்றவை தெள்ளத்தெளிவாக எடுத்துக்காட்டி உள்ளது. இப்பிரச்சனைகளை வெல்ல மக்களை ஒன்றுதிரட்ட வேண்டும். ‘ஏறுதழுவல்’ போராட்டம் போல மக்கள் சனநாயக வழிகளில் திரளாமல், இப்பிரச்சனைகளை தீர்க்க இயலாது. நீட் உள்ளிட்ட மாநில உரிமைகளை மீட்க தமிழர்கள் ஒன்றிணைந்து போராட்டங்களை மேற்கொள்ள அணியமாவோம். இப்போராட்டத்திற்கு கட்சி, இயக்கம், சாதி-மத எல்லை கடந்து ஒன்றிணைந்து எழுவதே தீர்வினை நமக்களிக்கும்.

மே பதினேழு இயக்கம்
9884864010
14/09/2021

Leave a Reply