ஈகியர் இம்மானுவேல் சேகரனார் அவர்கள் நினைவுநாள் (11.09.1957)

- in சாதி, வீரவணக்கம்

ஈகியர் இம்மானுவேல் சேகரனார் அவர்கள் நினைவுநாள் (11.09.1957)

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகில் உள்ள செல்லூரில் பிறந்த ஐயா இம்மானுவேல் சேகரனார் இராணுவத்தில் பணியாற்றியவர். தனது 18-வது வயதில் ஆங்கிலேயரை எதிர்த்து களமாடி 3 மாதம் சிறைதண்டனை பெற்றார். ஆதிக்க சாதிய மனநிலை பரவி இருந்த தனது பகுதியில் சாதிய தீண்டாமைகளை கண்டித்து தனது சமூகநீதி போராட்டத்தை முன்னெடுத்தார். குறிப்பாக தேநீர் கடைகளில் பட்டியல் சமூக மக்களுக்கு இழைக்கப்பட்ட தீண்டாமையான ‘இரட்டை குவளை முறை’ போன்ற காட்டுமிராண்டித்தனத்தை எதிர்த்து களமாடினார். அதற்காக தீண்டாமை ஒழிப்பு மாநாடுகளை நடத்தினார்.

1950-ம் ஆண்டு ‘ஒடுக்கப்பட்டோர்களின் விடுதலை இயக்கம்’ என்ற அமைப்பை தொடங்கி பட்டியல் சமூக மக்கள் உயர்வுக்காக போராடினார். அதேநேரம் அரசியல் அதிகாரம் என்பது பட்டியல் சமூக மக்களுக்கு எவ்வளவு இன்றியமையாதது என்பதை புரிந்துகொண்டு தேர்தல் அரசியலிலும் ஈடுபட்டார்.

1957-ஆம் ஆண்டு ஐயா இம்மானுவேல் சேகரனார் அவர்கள் படுகொலை செய்யப்பட்ட தருணம் பெரும் அதிர்ச்சியை கொடுத்தது. சாதி ஒழிப்பு போராளியாகவும், தீண்டாமைக்கு எதிரான வலிமிகுந்த போராட்டங்களை முன்னெடுத்த தலைவராகவும் அறியப்பட்ட ஐயா இம்மானுவேல் சேகரனார் அவர்களின் ஈகம் வரலாற்றில் என்றும் மறக்க இயலாமல் போனது.

ஐயா இம்மானுவேல் சேகரனார் அவர்கள் படுகொலையைத் தொடர்ந்து நடைபெற்ற முதுகுளத்தூர் கலவரம் தொடங்கி, பரமக்குடி துப்பாக்கி சூடு வரை, அதன் பின்னணியில் சாதிய வெறியும், அரச பயங்கரவாதமும் அப்பட்டமாக நம் கண்முன்னே தெரிகிறது. 2011ஆம் ஆண்டு அதிமுக அரசின் காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஐயா இம்மானுவேல் சேகரனார் அவர்கள் நினைவிடத்திற்கு மரியாதை செலுத்த வந்த பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த 6 அப்பாவி மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். ஏறத்தாழ இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் மீது பொய் வழக்குகள் போடப்பட்டு கைது செய்யப்பட்டனர்.

அன்றைய முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்கள் பரமக்குடி துப்பாக்கிச்சூடு படுகொலைக்கு காரணம் பட்டியல் சமூக மக்களே என்பதுபோல் சட்டசபையில் பேசியது மட்டுமல்லாமல், அவரது ஆட்சியில் அமைக்கப்பட்ட நீதிபதி சம்பத் கமிஷன் காவல்துறையின் இந்த காட்டுமிராண்டித்தனத்தை பாராட்டிப் பேசியது. “போலீசார் அளவற்ற பொறுமையை கடைபிடித்தனர். அவர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தாமல் இருந்திருந்தால் அப்பகுதியில் பேரழிவு ஏற்பட்டு இருக்கும். கலவரத்தில் இறங்கியவர்கள் எல்லை மீறி நடந்துகொண்டனர், அவர்களது செயல்கள் மன்னிக்கக்கூடியதே அல்ல. அத்தகையதொரு சூழலில் காவல்துறையினர் நடந்துகொண்ட மெச்சத்தக்க முறையை கமிஷன் பாராட்டுகிறது” என்று குறிப்பிட்டது.

அரச பயங்கரவாதம் தொடர்ச்சியாக தமிழ்நாட்டில் பலிகொண்ட அப்பாவி மக்களின் எண்ணிக்கை எண்ணிலடங்காது. சமூகத்தில் நிலவி வரும் சாதிய-வர்க்க முரண்களுக்கிடையே இடையே அரசு, காவல்துறை மற்றும் சாதியவாதிகள் குளிர் காய்ந்து கொள்வதும், தேவைப்பட்டால் அப்பாவி மக்களை பலி கொடுப்பதும் வாடிக்கையாகி வருகிறது.

சாதி-வர்க்கம் ஒழிந்த சமூகமே இத்தகைய அரச பயங்கரவாதங்களிலிருந்தும், சாதிய படுகொலைகளிலிருந்தும் நம்மை காத்து நிற்கும் என்கின்ற உயரிய சமூகநீதி கருத்தை மனதில் ஏற்று ஈகியர் இமானுவேல் சேகரனார் அவர்களுக்கும், அவரது நினைவுநாளில் அரச பயங்கரவாதத்தால் உயிரிழந்த 6 பட்டியல் சமூக மக்களுக்கும் மே பதினேழு இயக்கம் வீரவணக்கம் செலுத்துகிறது.

மே பதினேழு இயக்கம்
9884864010, 9444327010

Leave a Reply