பட்டியலின-பழங்குடியின மக்களுக்கான துணைத் திட்டத்திற்கு சட்டமன்றத்தில் தனிச்சட்டம் இயற்றவும், தனி பட்ஜெட் நிறைவேற்றவும் கோரி பத்திரிக்கையாளர் சந்திப்பு

பட்டியலின-பழங்குடியின மக்களுக்கான துணைத் திட்டத்திற்கு சட்டமன்றத்தில் தனிச்சட்டம் இயற்றவும், தனி பட்ஜெட் நிறைவேற்றவும் கோரி விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சியின் சார்பில் பத்திரிக்கையாளர் சந்திப்பு, 07-09-2021 அன்று சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் நடைபெற்றது. இதில் விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சியின் தலைவர் தோழர் குடந்தை அரசன் அவர்களுடன் மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி பத்திரிக்கையாளர்களை சந்தித்தார்.

பத்திரிக்கையாளர் அறிக்கை:

பட்டியலின பழங்குடியின துணைத் திட்டம்சமூகத்தால் ஒடுக்கப்பட்ட பட்டியலின மக்களுக்காக மத்திய மாநில அரசால் உருவாக்கப்பட்ட பட்டியலின பழங்குடியின துணைத் திட்டம் நிதியை கொண்டு கல்வியின் மூலமாக இம்மக்களை சமூக பிரிவினையிலிருந்தும், பொருளாதார இக்கட்டிலிருந்தும் மீளச் செய்து தேசிய நீரோட்டத்தில் சேர்க்கும் வண்ணம் திட்டங்கள் தீட்டி செயல்படுத்துவது மட்டுமின்றி, சமுதாயத்தில் நலிவுற்ற இம்மக்களின் சமூக பொருளாதார நிலையை துரிதமாக மேம்படுத்தும் நோக்கங்களுடனும், இத்திட்டங்கள் அமைந்துள்ளன. பட்டியலின மக்களுக்கான மேம்பாட்டில் மத்திய அரசு கூடுதல் கவனத்தை செலுத்த 1979-ல் திட்டக் குழுவின் பரிந்துரையின் பேரில் சிறப்பு உட்கூறுத் திட்டத்தை அமல்படுத்தியது.

தற்போது பட்டியலின துணைத் திட்டம் (SCSP) பழங்குடியின துணைத் திட்டம் (TSP) என்ற பெயரை 2018ஆம் ஆண்டு மத்திய அரசு நிதி ஆயோக் கூட்டத்தில் எடுத்த முடிவின்படி பட்டியலின மேம்பாட்டு செயல் திட்டம் (Development Action Plan for Scheduled Caste) மற்றும் பழங்குடியின மேம்பாடு செயல் திட்டம் (Development Action Plan for Scheduled Tribe) என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

மாநிலத்தின் மொத்த மக்கள்தொகையில் பட்டியல் சாதியினர் 20.01 சதவீதமும் பழங்குடியினர் 1.10 சதவீதமும் உள்ளனர். ஒவ்வொரு ஆண்டுக்கான நிதி திட்ட ஒதுக்கீட்டில் சிறப்பு உட்கூறு திட்டத்தின் பங்கு 21% சதவிகிதத்திற்கு குறையாமல் துணைத் திட்ட நிதி ஒதுக்கப்படவேண்டும்.

பட்டியலின துணை திட்டத்தின் கீழ் மாநில அரசு ஒதுக்கீடு செய்யும் நிதியினை 45 துறைத் தலைவர்களைக் கொண்ட 19 செயலாக்கத் துறைகளும் தங்களின் முறையான திட்டங்களோடு பட்டியலினத்தவர்களின் நலனுக்கான தனியாக அவர்களின் மேம்பாட்டிற்காக தமிழ்நாட்டில் 19 துறைகளில் திட்டங்கள் ஒதுக்கீடு செய்து குறியீடு நிர்ணயித்து திட்டங்களை நிறைவேற்றி வருகின்றன. பழங்குடி நலனுக்காக 43 துறைத் தலைவர்களைக் கொண்ட 17 செயலாக்கத் துறைகளால் பழங்குடியினர் துணைத் திட்டங்கள் தயாரிக்கப்பட்டு நிறைவேற்றப்படுகின்றன.

தற்போதைய நடப்பாண்டு பட்ஜெட்டின் கீழ் பட்டியிலின மக்களுக்காக அரசு 19 துறைகளில் வெவ்வேறு திட்டத்தின் கீழ் ரூபாய் 14,696 கோடியும், பழங்குடியினருக்கு ரூபாய் 1,306 ஆயிரம் கோடியும் ஒதுக்கியுள்ளது.

அரசு தன்னுடைய பொது திட்டங்களை செயல்படுத்துவதற்கு ஆதிதிராவிடர்களுக்கு என ஒதுக்கப்படும் நிதியின் பெரும்பகுதியை எடுத்துகொள்கிறது.

ஆதிதிராவிடர் நலத்துறையால செயல்படுத்தப்படும் திட்டங்களில், கல்வி உதவித்தொகை திட்டம் முக்கிய பங்கு வகிக்கின்றது. இத்திட்டம் மட்டுமின்றி, சமூக மேம்பாட்டு திட்டங்களில் ஒரு பாகமாக, வீட்டு மனைப் பட்டாக்கள் வழங்குதல், வீடுகள் கட்டித் தருதல் மற்றும் அடிப்படை வசதிகளான சாலைகள் அமைத்தல், தெருவிளக்கு வசதி செய்தல், குடிநீர், மயானம் மற்றும் மயான பாதை அமைத்தல், இல்லத் திருமணங்கள் நடத்துவதற்க்கும், சமுதாய விழாக்கள், கூட்டங்கள் நடத்துவதற்கும் சமுதாயக் கூடங்கள் கட்டித் தருதல் போன்ற திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகின்றனமலைப்பகுதிகளில் அழிவின் விளிம்பிலுள்ள பழங்குடியினர்களுக்கு பாரம்பரிய வீடு கட்டித் தருதல், கறவை மாடுகள் வழங்குதல், குடிநீர் வசதி மற்றும் தெருவிளக்குகள் போன்றவை அமைத்தல் ஆகிய திட்டங்களை பழங்குடி மக்களுக்கு தீட்டி செயல்படுத்துகிறது.

பட்டியலின துணைத் திட்டத்தை சிறப்பான முறையில் செயல்படுத்த கீழ்கண்ட ஆலோசனைகளை அரசிடம் அளிக்கின்றோம்:

• ஐந்தாண்டு திட்டங்களில் பட்டியலினத்தவருக்கும் மற்றவருக்கும் உள்ள வளர்ச்சி இடைவெளியை சரிசெய்யப்படவேண்டும் என்று அரசு கூறுகிறது. அவ்வாறு தமிழ்நாட்டில் செயல்படுத்தும் அனைத்து திட்டங்களிலும் வழங்கப்படும் மானியத்தொகையில் பட்டியலினத்தருக்கு வழங்கப்படும் மானியத்தொகையும் மற்றவருக்கு வழங்கப்படும் மானியத்தொகையும் ஒரே விகித்ததிலேயே வழங்கப்படுகிறது. பட்டியலினத்தவருக்கு வழங்கப்படும் மானியத்தொகை சலுகைகள் அவர்கள் வளர்ச்சி அடையக்கூடிய வகையில் வழங்கவேண்டும்.

• சிறப்பு உட்கூறு திட்டத்தினை சட்டமன்றத்தில் தனி சட்டம் இயற்றப்பட்டு அதற்கான விதிகளை உருவாக்கி நிறைவேற்ற வேண்டும்.

• சிறப்பு உட்கூறு திட்டத்தை செயல்படுத்துவதற்கு அதற்கென்று நிதி ஒதுக்கப்படும் அனைத்து துறைகளில் இருந்து நிபுணத்துவம் வாய்ந்த அதிகாரிகளை நியமித்து குழுக்கள் உருவாக்கப்படவேண்டும். அவர்களின் ஆலோசனையின் பேரில் புதிய திட்டங்கள் உருவாக்கப்படவேண்டும்.

• திட்டங்கள் உரிய காலத்தில் நிறைவேற்றப்படும் வகையிலும் நிதி பெருமளவில் அரசிடம் நிதி திருப்பி அளிக்கப்படாத வகையிலும் அல்லது நடைமுறை படுத்துபவர்கள் மூலமாக செலவிடாமல் அல்லது நிதி பற்றாக்குறையாலும் பட்டியலினத்தவர்களுக்கு திட்டங்கள் நிறைவேற்றப்படுவது திறம்பட கண்காணிக்கப்பட வேண்டும்.

• இத்திட்டம் சிறப்பாக நடைபெறுவதற்கு மாநில, மாவட்ட கண்காணிப்புக் குழு அமைக்கப்படவேண்டும். இத்திட்டத்தின் செயல்பாடு குறித்து அனைத்து துறையின் ஒருங்கிணைக்கும் அதிகாரியோடு (Nodal officer) காலாண்டுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு செயல்படுத்தவேண்டும்.

• இத்திட்டத்திற்கு ஆண்டறிக்கை (Annual report) ஆண்டு துவங்குவதற்கு ஆறு மாதத்திற்கு முன்னரே பட்டியல் சாதி பயனாளிகளுக்கு பயன் தரும் வகையில் செயல்படுத்த அனைத்து துறைகளும் சிறப்பு உட்கூறு திட்டம் குறித்த ஆண்டு அறிக்கை அளிக்கவேண்டும்.

• அரசாணை 92ன் கீழ் வழங்கப்படும் மொத்த தொகையில் போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை 10 சதவீதத்திற்கும் குறைவான தொகையே கலை மற்றும் அறிவியல் பயிலும் இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்களுக்கு சென்றைகிறது.

. கலை மற்றும் அறிவியல் பயிலும் மாணவர்களுக்கு போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை உயர்த்தி வழங்கப்படவேண்டும்.

• அரசாணை 92ன் கீழ் நிகர்நிலை பல்கலைகழகங்களில் (Deemed university) பயிலும் பட்டியலின மாணவர்களுக்கு போஸ்ட் மெட்ரிக் கல்வித்தொகை வழங்கப்படவேண்டும்.

• அயல்நாடு சென்று உயர்கல்விப் பயில வழங்கப்படும் உதவித்தொகை நடப்பாண்டில் பட்டியலின பழங்குடியின் மாணவர்களுக்கு குறைந்தபட்சம் 100 பேருக்கு வழங்கப்படவேண்டும். இதற்கான ஆண்டு வருமான வரம்பினை ருபாய் பத்து இலட்சமாக உயர்த்தவேண்டும்.

• தாட்கோவில் பட்டியலினத்தவருக்கு வழங்கப்படும் மானியத்தொகை 50 சதவீதமாக உயர்த்தப்படவேண்டும்.

• தரிசு நில மேம்பாட்டில் கீழ் நிலமற்ற ஏழை பட்டியலின விவசாயிகளுக்கு 2 ஏக்கர் நிலம் வழங்குவதற்கு ஆணை பிறப்பிக்கவேண்டும்.

• ஆதிதிராவிர் நல பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகளில் தரமான உணவு, உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி கொடுக்கவேண்டும். நல விடுதிகளுக்கான மாணவர் சேர்க்கை ஆன்லைன் மூலம் செயல்படுத்தவேண்டும்.

• அண்டை மாநிலங்களில் ஆதிதிராவிட பள்ளி மற்றும் கல்லூரி மாணவர் விடுதியில் தங்கி பயிலும் மாணவர்களுக்கு மாத உணவு கட்டணம் முறையே ரூபாய் 1500 மற்றும் ரூபாய் 2000 என்று உயர்த்தி வழங்கப்படவேண்டும்.

• வருவாய் துறையால் அரசு நிலங்களை கையகப்படுத்தி வீட்டு மனையில்லாத ஏழை பட்டியலினத்தவருக்கு இலவசமாக வீட்டு மனைகள் வழங்கப்படவேண்டும்

• தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட ஒன்றரை லட்சம் பழங்குடியின போலி சாதி சான்றிதழ் பெற்றுள்ளனர் இதனை தடுக்கும் வகையில் சான்றிதழ் வழங்குவதற்கு சட்டம் இயற்றப்படவேண்டும்.

• வேலைவாய்ப்பில்லாத பழங்குடியின இளைஞர்களுக்கு அவர்கள் வசிக்கும் பகுதியில் திறன் மேம்பாடு பயிற்சி வழங்கப்படவேண்டும்.

• பழங்குடியினர் அதிகம் வசிக்கும் மாவட்டமான சேலம் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் கல்வியியல் கல்லூரி (B.Ed college) துணைத் திட்ட நிதியிலிருந்து பழங்குடியினருக்காக தொடங்கப்படவேண்டும்.

• பழங்குடியின பயன்பெறும் வகையில் விவசாயத்தில் திட்டம் வகுக்கப்படவேண்டும். பழங்குடியினர் செய்யும் விவசாயமான காய்கறி, பழம் மற்றும் பூ போன்ற தோட்ட பயிர்களுக்கு அதிகப்படியான நிதிகள் ஒதுக்கப்படவேண்டும்

மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி பத்திரிக்கையாளர்களிடையே உரையாடிய காணொளி.

Leave a Reply