தமிழீழ ஏதிலியர்களுக்கான திமுக அரசின் நலத்திட்ட அறிவிப்புகளை வரவேற்கிறோம்! இரட்டை குடியுரிமை வழங்கவும், சிறப்பு முகாம்களை இழுத்து மூடவும், ’ஈழத்தமிழர்’ என்ற தேசிய அடையாளத்துடன் அழைக்கப்பட வேண்டுமென கோருகிறோம்!

தமிழீழ ஏதிலியர்களுக்கான திமுக அரசின் நலத்திட்ட அறிவிப்புகளை வரவேற்கிறோம்! இரட்டை குடியுரிமை வழங்கவும், சிறப்பு முகாம்களை இழுத்து மூடவும், ’ஈழத்தமிழர்’ என்ற தேசிய அடையாளத்துடன் அழைக்கப்பட வேண்டுமென கோருகிறோம்!
– மே பதினேழு இயக்கம்

தமிழ்நாட்டில் உள்ள தமிழீழ அகதிகளின் வாழ்க்கைத்தரம் உயரும் வகையில் சுமார் ரூ.317 கோடி நிதியில் நலத்திட்டங்களை தற்போது நடைபெற்று வரும் தமிழ்நாடு சட்டமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடரில் முதலமைச்சர் மாண்புமிகு திரு மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு, தமிழ்நாட்டின் ஏதிலிகள் (அகதிகள்) முகாம்களிலும் வெளியிலும் வசித்து வரும் தமிழீழ மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தும் என்ற வகையில் இதனை மே பதினேழு இயக்கம் வரவேற்கிறது. இதற்காக மே பதினேழு இயக்கம் வாழ்த்துகளையும், நன்றிகளையும் தெரிவித்துககொள்கிறது. அதேவேளை, சமூகத்தில் அவர்கள் சுயமரியாதையோடு வாழ்வதற்கு இரட்டைக் குடியுரிமை, வேலைவாய்ப்பு, உளவுத்துறையின் தீவிர தொடர் கண்காணிப்புகளிலிருந்து விலக்கு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நடைமுறைப்படுத்தித் தர வேண்டுமென தமிழ்நாடு அரசை மே பதினேழு இயக்கம் வலியுறுத்துகிறது.

தமிழ்நாட்டில் வசித்து வரும் தமிழீழ மக்கள் பயனடையும் வகையில் தமிழ்நாட்டின் முதலமைச்சர் மாண்புமிகு திரு மு.க.ஸ்டாலின் அவர்கள், கடந்த 27-08-2021 அன்று பல்வேறு நலத்திட்ட உதவிகளை சட்டமன்றத்தில் அறிவித்துள்ளார். வேளாண்மை, வேளாண் பொறியியல், பொறியியல், முதுநிலை பட்டப்படிப்பு போன்றவற்றில் மாணவர்களுக்கான படிப்பு மற்றும் விடுதி கட்டணத்தை அரசே ஏற்பது, மாணவர்களின் திறன் மேம்பாட்டிற்கு ரூ.10 கோடி ஒதுக்கீடு, மாணவர்களின் கல்வி உதவித்தொகை உயர்வு, சுயஉதவு குழுக்களுக்கு சூழல் நிதி உதவி, வீடுகள், அடிப்படை வசதிகள் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகள் என தமிழீழத் தமிழர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த ரூ.317.45 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுவது வரவேற்புக்குறியது. இவை நிச்சயம் தற்போதைய சூழ்நிலையிலிருந்து தமிழீழத் தமிழர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

மேலும், அகதிகள் முகாம் என்பதை இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம் என்று பெயர் மாற்றம் செய்வதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் வசிக்கும் தமிழீழத் தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை பெறுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனும் அறிவிப்பு மிக முக்கியமானது, வரவேற்பிற்குரியது.

மேலும் இலங்கை திரும்பவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் தமிழர்கள் மீதான ஒடுக்குமுறைகள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும் சூழலில் விருப்பமில்லாத ஈழத்தமிழர்களை திருப்பி அனுப்பும் முயற்சிகள் கடந்த காலத்தைப் போல திரும்பவும் நிகழும் என கவலைப்படுகிறோம்.

தமிழீழத் தமிழர்கள் தமிழ்நாட்டிற்குள் தஞ்சமடைந்தது, 1948 முதல் இலங்கை தீவில் தமிழர்கள் மீது இலங்கை அரசினால் தொடர்ச்சியாக நடத்தப்படும் இனப்படுகொலையிலிருந்து தம்மை பாதுகாத்துக்கொள்வதற்காகவே. இதில் ஆங்கிலேயர் காலத்தில் ஆங்கிலேயர்களால் மலையகத்தில் குடியேற்றப்பட்ட தமிழ்நாட்டுத் தமிழர்களையும் உள்ளடக்கும். அவர்கள், 1983 ஜூலை கலவரம், 2009 முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை என பல்வேறு காலகட்டங்களில் தமிழ்நாட்டிற்குள் தஞ்சமடைந்துள்ளனர். இலங்கை அரசினால் தமிழீழ மக்கள் மீதான அச்சுறுத்தல் இன்றளவும் நீடிக்கிறது என்பதை ஐ.நா.வின் மனித உரிமை அவையில் சமீபத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைகள் அம்பலப்படுத்துகின்றன. இங்கிலாந்தின் உயர்மட்ட தீர்ப்பாயம் (British Upper Tribunal) இலங்கை திரும்பும் தமிழர்கள் சித்திரவதைக்குள்ளாகின்றனர் என தீர்ப்பை 2021-இல் வழங்கியுள்ளது. மேலும், சர்வதேச உண்மை-நீதிக்கான திட்டம் (International Truth & Justice Project) எனும் சர்வதேச மனித உரிமை அமைப்பு 2015-2018 வரை கிட்டதட்ட 178 தமிழர்கள் சித்திரவதை செய்யப்பட்டதை ஆவணப்படுத்தியுள்ளது. சமீபத்தில் பதவியேற்ற கோத்தபய ராஜபக்சே அரசின் காலகட்டத்தில், இதுவரை 5 கடத்தல்-சித்திரவதைகளுக்காக வழக்குகள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. இவையனைத்தும் வெளியுலகிற்கு தெரியவந்த வழக்குகள் எனும் நிலையில் தமிழீழத்தில் கடுமையான அடக்குமுறைகள் நிலவுவதை இவை அம்பலப்படுத்தும் நிகழ்வுகளாக அமைகின்றன. மேலும் தமிழ்நாட்டின் சிறப்பு முகாமிலிருந்து திருப்பி வலிந்து அனுப்பப்பட்ட பலரின் இன்றைய நிலை தெரிந்து கொள்ளமுடியாத நிலை உள்ளது. அவர்களில் சிலர் காணாமல் போனதும் அறியவந்துள்ளது என்பதை அரசின் கவனத்திற்கு கொண்டு வருகிறோம். இந்நிலையில், தமிழீழம் விடுதலை பெறாமல் தமிழீழ மக்கள் நாடு திரும்புவது இயலாத ஒன்று என்பதே களநிலவரமாக உள்ளது என்பதை தமிழ்நாடு அரசு கவனத்தில் கொள்ள வேண்டுமென வலியுறுத்துகிறோம் .

2009-இல் தமிழீழத்தில் நடைபெற்றது இனப்படுகொலை என்றும், அதற்கு சர்வதேச நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், தமிழீழத்திற்கான பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பதும் உலகத் தமிழர்களின் கோரிக்கையாகும். அதனை அன்றைய எதிர்க்கட்சியான திமுக ஒப்புதலோடு தமிழ்நாடு சட்டமன்றமும் தீர்மானமாக நிறைவேற்றிள்ளது குறிப்பிடத்தக்கது. எனவே, இனப்படுகொலைக்கு நீதியாக பொதுவாக்கெடுப்பு நடத்தப்படும் வரை, தமிழ்நாட்டில் வாழும் தமிழீழத் தமிழர்களுக்கு இந்திய நாட்டின் குடியுரிமையை கூடுதலாக வழங்கி இரட்டைக்குடியுரிமை பெறுவதற்கு தனிச்சட்டம் கொண்டு வரப்பட வேண்டும் என தமிழ்நாடு அரசை மே பதினேழு இயக்கம் வலியுறுத்துகிறது.

அகதிகளுக்காக சர்வதேச உடன்படிக்கையில் இந்தியா கையெழுத்திடாத நிலையில், தஞ்சமடைந்த தமிழீழ மக்களை அகதிகளாகவும் ஏற்றுக்கொள்ள முடியாத நிலையில், தமிழீழ மக்களை சட்டவிரோத குடியேறிகளாகவே இந்திய அரசியலமைப்பு அங்கீகரிக்கிறது. இதுவே தமிழீழ மக்கள் கடும் துயரங்களை சந்திக்க வேண்டிய சூழலுக்கு தள்ளுகிறது. இதனை மாற்றும் வகையில், இரட்டை குடியுரிமையை இந்தியா வழங்கும் வரை, தமிழீழ மக்களை “புலம்பெயர்ந்து வாழும் சட்டபூர்வ வாசிகள் (Migrated Legal Residents)” என்ற தனிப்பிரிவை குடியுரிமை சட்டத்தில் உருவாக்க தமிழ்நாடு அரசு முயற்சிக்க வேண்டுமென மே பதினேழு இயக்கம் வலியுறுத்துகிறது. திபெத்தியர்கள் நலனுக்காக தனிச்சட்டம் இருக்கும் இந்த நாட்டில் தமிழீழத் தமிழர்களுக்கு தனிச்சட்டம் கொண்டு வரப்படுவது சாத்தியமே.

தற்போது தமிழ்நாட்டில், முகாம்களில் சுமார் 60,000 பேரும், முகாம்களுக்கு வெளியே சுமார் 35,000 பேருக்கும் அதிகமானோர் அகதிகளாக வசித்து வருகின்றனர். இரண்டு சிறப்பு முகாம்கள் உட்பட108 முகாம்கள் உள்ளன. இவை அவர்களை சமூகத்திலிருந்து ஒதுக்கி வைக்க காரணிகளாகவே உள்ளன. அதிலும் சிறப்பு முகாம்கள் சிறைச்சாலையை ஒத்த சூழலை கொண்டுள்ளது. இங்கு குற்றப்பரம்பரையினர் போல் நடத்தப்படுகின்றனர். இவை உளவியல்ரீதியாக பாதிப்பை உண்டாக்குகிறது, அவர்களுக்கான கல்வி, வேலைவாய்ப்பில் தடைகளும் ஏற்படுகின்றன. எனவே முகாம்கள் களையப்பட்டு அவர்கள் தமிழ்ச் சமூகத்தோடு கலந்திட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அதற்கு குடியுரிமை பெறுவதும், அதுவரை அவர்களை சட்டப்பூர்வ குடியேறிகளாக அங்கீகரிப்பதுமே தீர்வை வழங்கும்.

மேலும் ஈழத்தமிழர்கள் மீதான கடுமையான உளவுத்துறை மற்றும் காவல்துறையின் செயல்பாடுகள், கட்டுப்பாடுகள் காரணமாக சொல்லொண்ணா துயரத்திற்கு சாமானியர்கள் ஆட்படுகிறார்கள். மறுவாழ்வு முகாம் என மாற்றப்படுவது என்பது காவல்துறையின் கட்டுப்பாட்டில் இருந்து விலக்கப்பட்டால் மட்டுமே சாத்தியம். இல்லாவிடில் பெயரளவிலேயே மாற்றம் என்பது நிகழும் என கவலைகொள்கிறோம். இப்பிரச்சனையை முதலமைச்சர் கவனத்தில் எடுத்து இந்நிலையை மாற்றவேண்டுமென வலியுறுத்துகிறோம்.

தமிழீழ மக்கள் தனித்த தேசிய இனத்தவர்கள். தனித் தமிழீழம் ஒன்றே இலங்கைத் தீவில் ஈழத் தமிழர்கள் வாழ்வதற்கான ஒரே தீர்வு. இதனாலேயே இனப்படுகொலையை சந்தித்துள்ளனர். ’தமிழீழத் தமிழர் (அ) ஈழத்தமிழர்’ என்று அழைப்பதே அவர்களுக்கு நாம் வழங்கும் குறைந்தபட்ச அங்கீகாரம். திமுகவின் மறைந்த முதுபெரும் தலைவர் மரியாதைக்குரிய ஐயா. கலைஞர் மு.கருணாநிதி அவர்களும் கூட ‘ஈழத்தமிழர்’ எனும் பெயரிலேயே அழைத்து வந்தார், இதனடிப்படையிலேயே ‘டெசோ’ எனும் சொற்றொடர் வடிவமைக்கப்பட்டது என்பதை நினைவுகூருகிறோம். ஆகவே, முகாம்கள் அனைத்தும் களையப்படும் வரை, இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம் என்று பெயர் மாற்றம் செய்யப்படுவதை, தமிழீழத் தமிழர் மறுவாழ்வு மையம் என பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகின்றோம்.

அகதிகளாக வசிப்பவர்களில் தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்ட மலையகத் தமிழர்களும் அடக்கம். சாஸ்திரி-சிறீமாவோ, இந்திரா-சிறீமாவோ, ராஜீவ்-ஜெயவர்த்தனே ஒப்பந்தங்கள் அடிப்படையில் இன்னும் 1 லட்சம் மலையகத் தமிழர்கள் தமிழ்நாட்டில் மீள்குடியமர்த்தப்படாமல் உள்ளனர். எனவே, தமிழ்நாட்டில் அகதிகளாக வசிக்கும் மலையகத் தமிழர்களுக்கு உடனடியாக குடியுரிமை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என தமிழ்நாடு அரசை மே பதினேழு இயக்கம் வலியுறுத்துகிறது.

இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையை தீர்மானிப்பதில் மாநிலங்கள் முக்கிய பங்காற்றிட வேண்டும் என்று மே பதினேழு இயக்கம் நீண்டகாலமாக கூறி வருகிறது. அந்தவகையில், இலங்கைக்கான இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையை, உலகத்தமிழர்களின் தேவைகளை வெளிப்படுத்தும் வாய்ப்புள்ள அரசாக விளங்கும் தமிழ்நாடு அரசு தீர்மானிக்க வேண்டும். அது தமிழ்நாட்டில் தஞ்சமடைந்துள்ள தமிழீழ மக்களிடமிருந்து துவங்க வேண்டுமென மே பதினேழு இயக்கம் விரும்புகிறது. மாநில சுயாட்சி கோரும் திமுகவின் தமிழ்நாடு அரசிற்கு இவைகள் அனைத்தும் சாத்தியமே.

தமிழீழத் தமிழர்களின் வாழ்க்கைத்தரம் உயர தமிழ்நாடு அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் தற்போதைய திமுக அரசை நல்லெண்ண அரசாக காட்டும். அதேவேளை, தமிழீழ இனப்படுகொலைக்கான சர்வதேச நீதி விசாரணையை அமைப்பது, பொதுவாக்கெடுப்பு நடத்தப்படுவது, தமிழ்நாட்டில் வசிக்கும் தமிழீழ மக்களுக்கு இரட்டை குடியுரிமை பெற்றுத் தருவது, அதுவரை அவர்களை சட்டப்பூர்வ குடியேறிகளாக அங்கீகரிக்க சட்டமியற்றுவது, முகாம்களை கலைத்து சமூகத்தில் கலந்திட செய்வது, அவர்களை தமிழீழ மக்கள் என சட்டப்பூர்வமாக பெயரிட்டு அழைப்பது, மலையகத் தமிழர்களுக்கு உடனடியாக குடியுரிமை வழங்குவது போன்றவற்றை மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களது தலைமையிலான தமிழ்நாடு அரசு நிறைவேற்றுமெனில், இனப்படுகொலைக்குள்ளான தொப்புள்கொடி உறவுகளை பாதுகாக்கும் வரலாற்று கடமையில் ஒருபடி முன்னேற்றத்தை தமிழ்நாடு தமிழர்களாகிய நாம் எட்டுவோம் என உறுதியாக நம்புகிறோம்.

மே பதினேழு இயக்கம்
9884864010
30/08/2021

Leave a Reply