புரட்சியாளர் ஃபிரெட்ரிக் எங்கெல்ஸ் நினைவுநாள் (5.8.1895)

புரட்சியாளர் ஃபிரெட்ரிக் எங்கெல்ஸ் நினைவுநாள் (5.8.1895)

“வர்க்கங்கள் ஒழிக்கப்பட வேண்டுமென்று நாம் விரும்புகிறோம். இதை நிறைவேற்றுகின்ற வழி எது? பாட்டாளி வர்க்கத்தின் அரசியல் ஆதிக்கம் ஒன்றே வழியாகும்.”

உலகளாவிய தொழிலாளர் வர்க்கத்தின் விடுதலையை உறுதி செய்ய அரசியல் அதிகாரத்தை கைப்பற்றுவதே ஒரே வழி என்று முழங்கிய புரட்சியாளர் ஃபிரெட்ரிக் எங்கெல்ஸ் அவர்களின் வரிகள்தாம் இவை.

புரட்சியாளர் மாமேதை கார்ல் மார்க்ஸ் அவர்களின் உற்ற நண்பரும், பொதுவுடைமை பொருளியல் தத்துவ அறிஞருமான புரட்சியாளர் மாமேதை ஃபிரெட்ரிக் எங்கெல்ஸ் அவர்கள் எழுதிய, ‘குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம்’ என்ற நூல் மார்க்சிய அரசியலின் முதல் படிநிலை அறிவுக் களஞ்சியமாய் விளங்குகிறது.

முதலாளிய பொருளாதார உலகின் அடிவாரத்தை அசைத்துப்பார்த்த கார்ல் மார்க்ஸ் அவர்களின் ‘மூலதனம்’ என்ற நூல் வெளியாவதற்கு பெரும் உறுதுணையாக இருந்தவர் ஏங்கல்ஸ் என்றால் அது மிகையில்லை. மாமேதை மார்க்ஸ் அவர்கள் மறைவுக்குப் பின் ‘மூலதனத்தின்’ மற்ற தொகுதிகளை தொகுத்து வெளியிட்டதும் ஏங்கல்ஸ் அவர்களே. மூலதனத்தை பற்றி கூறும் பொது மாமேதை ஏங்கல்ஸ் கீழ் வருமாறு குறிப்பிட்டார்.

“முதலாளிகளும், தொழிலாளிகளும் நிலவி வந்துள்ள இவ்வுலகில் இது காலம் வரை தோன்றியுள்ள நூல்களில், நம் முன் உள்ள இந்த நூல் (மூலதனம்) போன்று தொழிலாளிகளுக்கு இந்தளவு முக்கியத்துவம் வாய்ந்த நூல் எதுவும் தோன்றியதில்லை.”

சர்வதேச உழைப்பாளர் சங்கத்தின் பல்வேறு முன்னெடுப்புகளுக்கு காரணமாக இருந்தவரும், சர்வதேச உழைப்பாளர் தினம் கொண்டாடப்பட பெரும் முன்னெடுப்புகளை செய்தவரும் மாமேதை ஏங்கல்ஸ் அவர்களேயாவர்.

மாமேதை மார்க்ஸ் அவர்களுடன் இயங்கிய காரணத்திற்காக மாமேதை ஏங்கல்ஸ் அவர்களும் கடுமையான அடக்கு முறையை சந்தித்தார். ஆனாலும் தான் முன்னெடுத்த தத்துவத்தையும், தன் தோழரையும் எந்த நிலையிலும் சமரசம் செய்யாமல் செயலாற்றிய மாமேதை ஏங்கல்ஸ், அதிகாரவர்க்கத்தின் அடக்கு முறைகள் குறித்து கீழ் கண்டவாறு குறிப்பிட்டார்.

“அரசியல் சுதந்திரங்கள், கூட்டம் நடத்துவதற்கு சுதந்திரம், சங்கம் அமைப்பதற்கு சுதந்திரம், பத்திரிக்கைச் சுதந்திரம் – இவை நம்முடைய ஆயுதங்கள். இவற்றை நம்மிடமிருந்து பறிக்க யாராவது முயற்சி செய்யும் பொழுது நம் கைகளை கட்டிக் கொண்டு ஒதுங்கி நிற்க முடியுமா?”

‘கற்பனாவாத பொதுவுடைமைவாதிகளை’ கடுமையாக சாடிய மாமேதை ஏங்கல்ஸ் அவர்கள்களின் சர்வதேச முன்னெடுப்புகள் ஒவ்வொரு மார்க்சியவாதிகளும் கற்க வேண்டிய அறிச்சுவடியாகும். தன் கடைசி மூச்சிவரை மாமேதை மார்க்ஸ் அவர்களின் இன்னொரு பிம்பமாய் வாழ்ந்திருந்த மாமேதை ஏங்கல்ஸ் அவர்களின் நினைவுநாளில் மே பதினேழு இயக்கம் வீரவணக்கம் செலுத்துகிறது.

மே பதினேழு இயக்கம்
9884864010, 9444327010

Leave a Reply