தமிழிசை அறிஞர் ‘இராவ் சாகிப்’ ஆபிரகாம் பண்டிதர் பிறந்தநாள் – 2.8.2021

தமிழிசை அறிஞர் ‘இராவ் சாகிப்’ ஆபிரகாம் பண்டிதர் பிறந்தநாள் – 2.8.2021

“தென் இசை (கருநாடக இசை) கலைக்கு அடிப்படை தமிழிசையே”

ஆரிய பார்ப்பனியமாக்கபட்ட இசைக் கலையை மீட்டெடுக்க தன் வாழ்நாள் முழுவதும் ஆய்வு செய்து அரும்பணி செய்திட்ட தமிழிசை அறிஞர் ‘இராவ் சாகிப்’ ஆபிரகாம் பண்டிதர் அவர்கள் கூறியவையே இவை.

1859ம் ஆண்டு பிறந்த ஆபிரகாம் பண்டிதர் அவர்கள் இளமையில் ஆசிரியப்பணிக்கு படித்தவர். மேலும் சித்த மருத்துவ முறையில் நன்கு தேர்ச்சி பெற்றவர். ஆனால் சிறுவயது முதல் இசையின்பால் கொண்ட பெரும் ஆர்வத்தால் முறையாக இசை பயின்றார். இசையில் தேர்ச்சி பெற்ற பின் அவரது ஆர்வம் இசைபற்றிய ஆய்விலே திரும்பியது.

தமிழ் இசைக்கலைஞர்கள் கூட தெலுங்கு மற்றும் சமஸ்கிருத கீர்த்தனைகளில் பாடுவதை கண்டு வருந்தியவர், கருநாடக இசையின் மூலத்தை ஆய முற்பட்டார். அதன் முடிவாக ‘தமிழிசையே மூல இசை’ என்ற முடிவுக்கு வந்தார்.

மேலும் தெலுங்கு மற்றும் சமஸ்கிருத கீர்த்தனைகளுக்கு பதிலாக தமிழில் பாடல்களை இயற்றினார். அதுமட்டுமல்லாமல் சமஸ்கிருத சொற்களால் விளக்கப்பட்ட இசை குறிப்புகளை தமிழ்ச் சொற்களால் நிரப்பினார். பண்டிதருடைய பாடல்களை அன்றைய பல இசையாளுமைகள் ஏற்றுக் கொண்டு தங்கள் மாணவர்களுக்கு பயிற்றுவித்தனர்.

தமிழிசையை மேலும் பரப்ப இசை மாநாடுகளை நடத்த முடிவு செய்தார். அதன் அடிப்படையில் 1912 முதல் 1916 ம் ஆண்டு வரையிலான ஐந்து ஆண்டுகளில் ‘சங்கீத வித்தியா மகாஜன சங்கம்’ என்ற பெயரில் 7 இசை மாநாடுகளை நிகழ்த்தினார்.

மேலும் 1917ம் ஆண்டு அவருடைய இசை ஆய்வின் முடிவுகளை ‘கருணாமிர்த சாகரம் – முதல் புத்தகம்’ என்னும் இசை நூலாக தமிழிசை பாடும் நல்லுலக்கிற்கு பதிப்பித்தார். 1946ம் ஆண்டு அவருடைய ‘கருணாமிர்த சாகரம் – இரண்டாம் புத்தகம்’ என்னும் இசை நூலையும் பதிப்பித்தார்.

இசை மட்டுமல்லாமல் வேளாண் மற்றும் சித்த மருத்துவத்திலும் பல பணிகளை செய்தார். அதற்காக 1909 வேளாண்துறை மற்றும் சித்த மருத்துவத்துறையில் ஆற்றிய அரும்பணிகளை பாராட்டி ‘இராவ் சாகேப்’ என்ற விருது தரப்பட்டது.

அவர் மட்டுமல்லாமல் அவரது குடும்பம் முழுவதும் தமிழிசை ஆய்வுகளில் ஈடுபட்டு அவரின் பணியை தொடர்ந்தது.

நமக்கு மிக நெருங்கிய காலகட்டத்தில் பண்டிதர் அவர்கள் ஒரு மாபெரும் தர்க்கத்தை ஏற்படுத்தியும், இன்னும் தமிழிசை உயர்வடையாமல், இசை உலகு பார்ப்பனர்களின் ஆதிக்கத்தால் வியாபாரமாக்கப்பட்டு, மண்ணின் இசைக் கலைகள் முடக்கப்பட்டு வருகிறது. தமிழிசை அறிஞர் ‘இராவ் சாகிப்’ ஆபிரகாம் பண்டிதர் பிறந்தநாளான இன்று இந்த நிலை மாற உறுதி கொள்வோம்.

தமிழிசை யாராச்சித் தந்தை யெனவே
இமிழ்கடல் ஞாலம் இயம்ப – அமிழ்துநிகர்
பன்மருந்தை நல்கிய பண்டிதன் ஆபிரகாம்
தன்மருங்கு நிற்க தழைத்து.

– ‘திராவிட மொழிநூல் ஞாயிறு’ தேவநேய பாவாணர்

மே பதினேழு இயக்கம்
9884864010,

Leave a Reply