சென்னையின் பூர்வகுடி மக்களின் விருப்பமின்றி அவர்களை அப்புறப்படுத்தப்படும் வன்முறை நடவடிக்கை

சென்னையின் குடிசைவாசிகள் உட்பட எளிய மக்களை அப்புறப்படுத்துவது நீண்ட நாட்களாக நடைபெறும் வன்முறை. மக்கள் விருப்பமின்றி வன்முறையாக இது பல பகுதிகளில் நடைமுறைப்படுத்தப்படுகிறது. சென்னை வெள்ளத்தை பயன்படுத்தி இவர்களை கேட்பாரின்றி அகற்றுவது தீவிரமானது. 90களில் சென்னை நகர விரிவாக்கம் முறைப்படுத்தல் எனும் பெயரில் பணக்காரர்கள் ஆக்கிரமிப்புகள் சட்டப்பூர்வமாக்கப்பட்டது, பூர்வகுடி மக்கள் சட்டப் பாதுகாப்பின்றி விடப்பட்டார்கள். இம்மக்களுக்கான வசதியான, ஒழுங்கமைக்கப்பட்ட குடியிருப்புகள் தேவைப்படுகின்றன.

எவரும் கூவம், அடையாறு கரையோரங்களில் விருப்பத்துடன் குடியிருக்க முயலவில்லை. மாறாக சுத்தமான, வசதிகளுடன், பாதுகாப்பான அதேநேரம் தங்கள் வாழ்வாதாரத்திற்கு ஏற்ற அண்மைய இடத்தில் குடிபெயர விரும்பினார்கள். இதையே உச்சநீதிமன்ற தீர்ப்புகளும், ஐ.நாவின் சாசனங்களும் சொல்லுகின்றன. வாழிடங்களிலிருந்து 3 கி.மீ சிறு தொலைவிற்குள் குடியமர்த்தப்பட வேண்டுமெனும் விதிமுறைகள் திட்டமிட்டு மீறப்பட்டன. சென்னையின் மையப்பகுதியில் நிலங்கள் இருந்தும், குடியேற்றம் மறுக்கப்பட்டது.

அடிப்படை வசதிகள்-வேலைவாய்ப்புகள் அற்ற, பள்ளி-மருத்துவமனையற்ற குடியிருப்புகள் சென்னைக்கு வெளியே 20-30 கி.மி தொலைவில் உருவாக்கப்பட்டன. செம்மஞ்சேரி, பெரும்பாக்கம், கண்ணகி-எழில் நகர் போன்றவை இம்மக்களை குவித்துவைக்கும் குடோன்களாக மாற்றப்பட்டன. இப்பகுதி இளைஞர்கள் கல்வி எட்டாக்கனியானது, வேலைவாய்ப்புகளற்று போனார்கள். இப்பகுதி காவல்நிலையங்கள் பெரும்பாலான அப்பாவி இளைஞர்கள்மீது பொய்வழக்குகளை பதிவு செய்வதை எதிர்த்து போராட்டங்கள் நடந்திருக்கின்றன.

2000 வருடத்திலிருந்து இதுவரை 5 லட்சத்திற்கும் அதிகமான எளிய மக்கள் இங்கே வீசியெறியப்பட்டார்கள். இக்குடியிறுப்புகள் மனிதர்கள் வாழும் தகுதியற்றவை. பெண்களுக்கான பாதுகாப்பற்றவை. சிறை அறைகளை விட கீழ்த்தரமானவை. கட்டிட ஒழுங்கற்றவை. உயரக்கட்டிடங்களில் லிப்ட் வசதிகளற்றவை. சுகாதாரமற்றவை.

தாங்கள் முன் வசித்த இடங்களிலேயே இவர்களுக்கான வேலைவாய்ப்புகள் இருக்கின்றன. அன்றாட போக்குவரத்து செலவுகளை இந்த எளிய கூலி தரும் வேலைகள் நிறைவு செய்யாது. ஆண்-பெண், கணவன்-மனைவி இருவரும் வேலைக்கு செல்லவேண்டிய் நெருக்கடியில் குழந்தைகள் தனியாக பாதுகாப்பின்றி வளர வேண்டியவையாகின்றன.

நான் புழல் சிறையிலிருந்த 4 மாதத்தில் இப்பகுதியிலிருந்து சாமானிய நிகழ்வுகளுக்கு கூட குற்றவாளியாக்கப்பட்டு சிறையில் அடைக்கப்படும் இளைஞர்களை ஒவ்வொரு நாளும் சந்தித்திருக்கின்றேன். குற்றபரம்பரையாக இவர்கள் தங்களது பழைய இடங்களில் நடத்தப்பட்டதில்லை, குற்றவழக்கு வாங்கியவர்களும் இல்லை.

இந்த மனிதநேயமற்ற, சட்டவிரோத குடியேற்றம் பற்றிய விரிவான வெளிப்படையான விவாதம் தேவை. பாதிக்கப்பட்சவர்கள் கோரிக்கைகள் பங்கேற்கும் கொள்கை வடிவமைப்பு மிகமுக்கியமாக உடனே வேண்டும்.

கடந்த 10 வருடங்களில் பல போராட்டங்களில் மே17 இயக்கம் பங்கெடுத்துள்ளது. இம்மக்களோடு ஒன்றாக நின்றிருக்கிறோம், சட்டபோராட்டங்களில் பங்காற்றியிருக்கிறோம். ஆக்கிரமிப்பு அகற்றம் என்பதாக மட்டுமே இதை பார்ப்பது வன்முறையானது. ‘குடியமர்த்தல்’ குறித்தான கொள்கையையே கேள்வி எழுப்புகிறோம்.

ஆக்கிரமிப்பு அகற்றம் எனில் பெரும்முதலீடுகள் ஏன் அப்புறப்படுத்தப்படவில்லை? இந்த திட்டங்கள் அடிப்படையில் குடிசைகளை நீக்கும் நோக்கம் கொண்டவையென்பதை NHAIஇன் 2008 கூவம் மீட்டெடுத்தல் திட்டத்தின் ஆலோசனை நிறுவனமான வில்பர்-ஸ்மித் வெளிப்படையாக அறிக்கை வெளியிட்டது.

கடந்தகால திமுக-பின்பான அதிமுக அரசு இக்கொள்கைகளை எதிர்க்கவில்லை. மாறாக நடைமுறைப்படுத்தினர். இக்கொள்கைகளை எதிர்த்து ஐயா.நல்லகண்ணு, தோழர்.திருமா போன்ற மூத்த கம்யூனிச-அம்பேத்கரிய-பெரியாரிய தோழர்கள் தொடர் போராட்டங்களை நடத்தியுமுள்ளனர். இவையனைத்தையும் தொகுத்து குடியேற்ற வழிமுறைகளை உருவாக்குவதே நாகரீக செயல்திட்டத்திற்கான திறவுகோள். கடந்தகால அரசுகள் கைகொண்ட வழிமுறைகள் அல்ல.

– தோழர் திருமுருகன் காந்தி

ஒருங்கிணைப்பாளர், மே 17 இயக்கம்

Leave a Reply