தமிழ்நாடு அரசே! ஸ்டெர்லைட் ஆலை தொடர்ந்து இயங்க அனுமதிக்காமல் ஆலையை இழுத்து மூடு!

தமிழ்நாடு அரசே! ஸ்டெர்லைட் ஆலை தொடர்ந்து இயங்க அனுமதிக்காமல் ஆலையை இழுத்து மூடு! – மே பதினேழு இயக்கம்

நச்சு காற்றை வெளியிட்டதால் மூடப்பட்டிருந்த தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை, கொரானா இரண்டாம் அலையில் நாடு முழுவதும் ஏற்பட்ட ஆக்ஸிஜன் பற்றாக்குறையால், கடந்த ஏப்ரல் 27 அன்று உச்சநீதிமன்றத்தின் அனுமதியுடன் ஆக்ஸிஜன் உற்பத்திக்காக திறக்கப்பட்டது. வரும் ஜூலை 31 அன்று அதன் தற்காலிக இயக்க காலம் முடிவடையும் நிலையில், அதனை மேலும் 6 மாதம் நீட்டிக்க தற்போது உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. இடைப்பட்ட காலத்தில் ஆக்ஸிஜன் உற்பத்தியில் தமிழ்நாடு தன்நிறைவை அடைந்துவிட்ட நிலையில், மக்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கும், மக்களின் விருப்பமின்றி செயல்படும் ஸ்டெர்லைட் ஆலை தொடர்ந்து இயங்க அனுமதி மறுத்து, ஆலையை நிரந்தமாக இழுத்து மூட வேண்டும் என தமிழ்நாடு அரசை மே பதினேழு இயக்கம் வலியுறுத்துகிறது.

வேதாந்தா நிறுவனத்தின் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை சுற்றுச்சூழல் விதிமுறைகளை மீறியதால் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பட்டு வாரியத்தின் தடையாலும், மக்களின் பாதுகாப்பு கருதி தமிழ்நாடு அரசின் தடையாலும் மூடப்பட்டிருந்தன. வேதானதா பலமுறை முறையிட்டும் உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் ஸ்டெர்லைட் ஆலை இயங்க அனுமதி மறுத்துவிட்டன. 13 பேரின் தியாகத்திற்கு பிறகு சில ஆண்டுகளாக மூடிக்கிடந்த நிலையில், கொரோனா பெருந்தொற்றின் இரண்டாம் அலையில் ஏற்பட்ட கடுமையான ஆக்ஸிஜன் பற்றாக்குறை என்னும் சூழலை பயன்படுத்தி இலவசமாக ஆக்ஸிஜன் உற்பத்தி செய்து தருகிறோம், ஆலையை இயக்க அனுமதி வேண்டும் என்று ஸ்டெர்லைட் நிர்வாகம் அரசிடம் கேட்டது. அரசு மறுக்க, உச்சநீதிமன்றம் சென்றது வேதாந்தா நிறுவனம். இதனிடையே பெரிய தேர்தல் கட்சிகளை மட்டும் வைத்து அனைத்துக்கட்சி கூட்டி ஆக்ஸிஜன் உற்பத்தி செய்ய மட்டும் அனுமதிக்க முடிவு செய்து தமிழ்நாடு அரசு நீதிமன்றத்தில் தெரிவித்தது. அதனடிப்படையில் ஜூலை 31 வரை ஆக்ஸிஜன் உற்பத்திக்காக மட்டும்’ஆலையை இயக்க ஏப்ரல் 27 அன்று நீதிமன்றம் அனுமதித்தது.

கடந்தாண்டு கொரோனா பெருந்தொற்று துவங்கியது முதல் இந்தாண்டு இரண்டாம் அலை உருவாகும் வரை ஏறக்குறைய 10 மாத காலம் கிடைத்திருந்தும், தேர்தல்களை நடத்த முனைந்த மோடி அரசு பெருந்தொற்றை சமாளிக்க சரிவர முன்னேற்பாடுகள் செய்யாததால் இரண்டாம் அலையில் மிக மோசமான நெருக்கடியை நாடு சந்தித்தது. தமிழ்நாட்டிற்கு சேர வேண்டிய ஆக்சிஜனை மற்ற மாநிலங்களுக்கு திரும்பி விட்டு தமிழ்நாட்டில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு ஏற்படக்கூடிய சூழலை மோடி அரசு உண்டாக்கியது. இச்சூழலை பயன்படுத்தி நாள்தோறும் 1050 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்து தருவதாக கூறி திறக்கப்பட்ட ஸ்டெர்லைட் ஆலை தொழில்நுட்ப கோளாறு காரணமாக நிறுத்தப்பட்டது. மீண்டும் மே 19 முதல் இயங்கி வருகிறது. ஆனால் சுமார் 1000 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யவே 30 நாட்களுக்கு மேலாக எடுத்துக்கொண்டது. அதாவது சராசரியாக நாளொன்றுக்கு 31 மெட்ரிக் டன் மட்டுமே உற்பத்தி செய்கிறது. இது தமிழ்நாடு அரசையும், நீதிமன்றத்தையும், மக்களையும் ஏமாற்றிய செயலாகும்.

தமிழ்நாட்டில் பெருந்தொற்றின் உச்சத்தில், அதாவது நோய்த்தொற்று எண்ணிக்கை 46,000 என்று இருந்த போது ஆக்ஸிஜன் தேவையானது 820 டன் என்ற அளவிற்கு இருந்தது. பிற நாட்களில் 120-200 டன் மட்டுமே தேவைப்படுகிறது. இதில் 480 டன் ஆக்ஸிஜன் தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டது. அப்போது சேமிப்பு கொள்ளளவு 900 டன் என்று இருந்தது, தற்போது 4000 டன் என உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், அரசு மருத்துவமனைகள் அனைத்திலும் ஆக்ஸிஜன் உற்பத்தி எந்திரம் மற்றும் சேமிப்பு கொள்கலன்கள் நிறுவப்பட்டுள்ளன. பெரிய தனியார் மருத்துவமனைகளிலும் அதே நிலை தான். வெளிமாநிலங்களிலிருந்து ஆக்ஸிஜன் பெறுவதும் நிறுத்தப்பட்டுவிட்டது. எனில், தமிழ்நாட்டின் தேவையை பூர்த்தி செய்துகொள்ளும், உச்சபட்ச நிலையையும் சமாளிக்கக்கூடைய அளவிற்கு தமிழ்நாட்டின் கட்டமைப்பு தன்நிறைவை அடைந்துள்ளது. ஆகவே ஸ்டெர்லைட் ஆலையில் தயாரிக்கப்படும் 31 டன் ஆக்ஸிஜன் நிறுத்தப்படுவதால் எவ்வித தாக்கமும் ஏற்படப்போவதில்லை.

ஸ்டெர்லைட் ஆலை தமிழ்நாட்டின் அவமானச் சின்னம். அது அப்புறப்படுத்தப்பட வேண்டும் என மே பதினேழு இயக்கம் தொடர்ந்து கூறி வருகிறது. அதே போல், ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்பட்டால் மீண்டும் மூடப்படுவது கேள்விக்குறியாகும் என்றும், நற்பெயர் பெற்று நிரந்தரமாக தாமிர உருக்காலையை திறக்க முயற்சிக்கும் என முன்னரே எச்சரித்தோம். அதற்கேற்றாற்போல், தூத்துக்குடி, காயல்பட்டினம், திருச்செந்தூர் போன்ற ஊர்களில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு உதவிகள் வழங்குவதையும், கட்டமைப்பை மேம்படுத்துவதையும் பல கோடிகளில் செய்து வருகிறது. இது போன்ற செயல்களை காட்டி, தற்போது காலநீட்டிப்பு கேட்கும் ஸ்டெர்லைட் ஆலை, தாமிர உருக்காலையை மீண்டும் திறக்க அடுத்து நீதிமன்றத்தில் முறையிடும். எனவே ஸ்டெர்லைட் ஆலையின் செயல்பாடு இந்த இடத்திலேயே நிறுத்தப்பட வேண்டும்.

ஸ்டெர்லைட் ஆலை மூடப்படுவதால் தமிழ்நாட்டிற்கு இழப்பேதும் இல்லை. மாறாக, அது திறக்கப்பட்டால் பாதிக்கப்பட போவது தமிழர்களே. 4 மாதங்களுக்குள் மூடப்படும் என்று உறுதியளித்த திமுக அரசு, அதற்கான நடவடிக்கையை உடனே மேற்கொள்ள வேண்டும். ஸ்டெர்லைட் ஆலை தொடர்ந்து செயல்பட அனுமதிப்பது தமிழர்களுக்கு இழைக்கும் துரோகமாகும். எனவே ஸ்டெர்லைட் ஆலை திறப்பதற்கு கடுமையான எதிர்ப்பை உச்ச நீதிமன்றத்தில் திமுக அரசு பதிவு செய்ய வேண்டும் என மே பதினேழு இயக்கம் வலியுறுத்துகிறது. மேலும், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடப்படுவதை உறுதி செய்து அங்கிருந்து அப்புறப்படுத்த நடவடிக்கை மேற்கொள்வதே படுகொலை செய்யப்பட்ட 13 பேருக்கு வழங்கும் நீதியாக இருக்கும்.

மே பதினேழு இயக்கம்
9884864010

Leave a Reply