‘திவான் பகதூர்’ ஐயா இரட்டைமலை சீனிவாசன் அவர்கள் பிறந்தநாளில் மே பதினேழு இயக்கம் புகழ்வணக்கம் செலுத்துகிறது – 07.07.1989

‘திவான் பகதூர்’ ஐயா இரட்டைமலை சீனிவாசன் அவர்கள் பிறந்தநாளில் மே பதினேழு இயக்கம் புகழ்வணக்கம் செலுத்துகிறது – 07.07.1989

இந்திய விடுதலைக்கு தாழ்த்தப்பட்டோர் விடுதலையே முன் நிபந்தனை” என்று முழங்கிய, மதுராந்தகத்திற்கு அருகில் உள்ள சோழியாளத்தில் பிறந்த ஐயா இரட்டைமலை சீனிவாசன் அவர்கள் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக களமாடி சமூகநீதி உரிமைகளுக்காக போராடியவர். பண்டிதர் அயோத்திதாசர், அண்ணல் அம்பேத்கர் அவர்களுடன் இணைந்து போராடிய ஐயா இரட்டைமலை சீனிவாசன் அவர்கள் சாதி கொடுமைகளுக்கு எதிராகவும், பட்டியல் சமூக மக்களின் உரிமைகளுக்காகவும் ஓங்கி குரலெழுப்பியவர்.

1891 ம் ஆண்டு பறையர் மகாஜன சபை என்ற அமைப்பையும், பிற்காலத்தில் ஆதி திராவிட மகாசபை என்ற அமைப்பையும் நிறுவினார். அவருடைய ‘ஆதி திராவிட மகாசபை’ அமைப்பின் முன்னெடுப்பே 1892-1933 ஆகிய காலகட்டங்களில் ஆங்கிலேயர்கள் பட்டியலின மக்களுக்கு நிலம் பகிர்ந்தளிக்க காரணமாய் இருந்தது.

நவம்பர் 12, 1930 நடைபெற்ற லண்டன் வட்டமேசை மாநாட்டில் பட்டியல் சமூக மக்களின் சார்பில் அண்ணல் அம்பேத்கர் மற்றும் ஐயா இரட்டைமலை சீனிவாசன் கலந்து கொண்டனர். அங்கு அவருக்கு கை குலுக்க வந்த அரசர் ஐந்தாம் ஜார்ஜிடம் “நான் இந்தியாவில் தீண்டப்படாத மக்கள் சமுதாயத்தில் இருந்து வந்தவன்” என்று கூறி இந்தியாவில் நடந்துவரும் தீண்டாமைக் கொடுமையை உணர்த்தினார். அந்நேரத்தில் சட்டமன்ற நியமன உறுப்பினராக (1923-1938) ஐயா இரட்டைமலை சீனிவாசன் அவர்கள் பொறுப்பேற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மாநாட்டில் அண்ணல் அம்பேத்கரும், ஐயா இரட்டைமலை சீனிவாசன் அவர்களும் பட்டியல் சமூக மக்கள் ‘இந்துக்கள்’ இல்லை என்று அறிவித்தனர். மேலும் தங்களை “சாதி இந்து அல்லாதோர்”, “இந்து எதிர்ப்பாளர்கள்”, “இந்து மத வழிபாட்டு எதிர்ப்பாளர்கள்” என்றே அழைக்க வேண்டும் என்று கூறினார்.

அந்த காலகட்டத்தில் பொது சாலைகளில் நடப்பதற்கும், பொது கிணற்றை பயன்படுத்துவதற்கும், பொது இடங்களை பயன்படுத்துவதற்கும் இருந்த தீண்டாமை கொடுமையை தடுக்கும் தீர்மானத்தை (1924) இயற்றினார். அந்த தீர்மானம் அடுத்த ஆண்டே அரசாணையாக வந்தது.

ஒடுக்கப்பட்ட மக்களின் கல்வி உரிமைக்காக ‘தாழ்த்தப்பட்டோர் கல்வி கழகத்தை’ உருவாக்கினார். அவரின் தொடர் முயற்சியால் பட்டியல் சமூகத்திற்கு கல்வி கற்று தர கோரும் அரசாணை 1893 இல் ஆங்கிலேய அரசால் வெளியிடப்பட்டது. ஐயா இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் சமூகபணிகளை பாராட்டி ஆங்கிலேய அரசு 1926 ம் ஆண்டு ‘இராவ் சாகிப்’ பட்டத்தையும், 1930 ம் ஆண்டு ‘இராவ் பகதூர்’ பட்டத்தையும், 1936 ம் ஆண்டு ‘திவான் பகதூர்’ பட்டத்தையும் வழங்கியது.

இவ்வாறு ஒடுப்பபட்ட மக்களின் பிறப்புரிமைகளுக்காக போராடிய மாமனிதர் ‘திவான் பகதூர்’ ஐயா இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் பிறந்தநாளில் மே பதினேழு இயக்கம் தனது புகழ் வணக்கத்தை செலுத்துகிறது.

மே பதினேழு இயக்கம்
9884864010, 9444327010

Leave a Reply