பழங்குடியின மக்களுக்காக போராடிய மனித உரிமைகள் செயற்பாட்டாளர் ஸ்டேன் சாமி அவர்களுக்கு வீரவணக்கம்!

பழங்குடியின மக்களுக்காக போராடிய மனித உரிமைகள் செயற்பாட்டாளர் ஸ்டேன் சாமி அவர்களுக்கு வீரவணக்கம்!

ஜார்கண்ட் மாநில பழங்குடியின மக்களின் உரிமைகளுக்காக போராடிய தமிழ்நாட்டை சேர்ந்தவரும், மனித உரிமைகள் செயல்பாட்டாளருமான ஸ்டேன் சுவாமி அவர்கள், நீதிமன்ற காவலில் இருந்த நிலையில், மருத்துவமனையில் உடல்நிலை மோசமடைந்து இன்று (05-07-2021), தனது 84 வயதில் காலமானார். நீதிமன்றத்தின் மனிதத்தன்மையற்ற செயலால் உயிரிழந்த ஸ்டேன் சுவாமி அவர்களுக்கு மே பதினேழு இயக்கத்தின் சார்பாக வீரவணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறோம்.

திருச்சியை சேர்ந்த அருட்தந்தை ஸ்டேன் லூர்து சாமி அவர்கள் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த பழங்குடி மக்களின் உரிமைகளுக்காக போராடி வந்தவர். கடந்த 2018 புத்தாண்டு அன்று மராட்டிய மாநிலம் பீமா கோரேகான் நினைவிடத்தில் நடைபெற்ற வன்முறையை தூண்டியதாக UAPA வழக்கில் 2020 அக்டோபர் 30 அன்று தேசிய புலனாய்வு முகமையால் (NIA) கைது செய்யப்பட்டார். இதுவே பீமா கோரேகான் அல்லது எல்கர் பரிஷாத் வழக்கு எனப்படுகிறது.

மிகவும் வயதான நிலையில் நோயினால் பாதிக்கப்பட்டிருந்த அவர் சிறையில் கடுங்காவலில் அடைக்கப்பட்டார். குற்றத்துடன் நேரடித் தொடர்பு ஏதும் இல்லாத நிலையிலும் அவருக்கு தொடர்ச்சியாக பிணை மறுக்கப்பட்டு வந்தது. மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு நோய்க்கு சிகிச்சை மேற்கொள்ள கேட்ட போது நீதிமன்றம் மறுத்துவிட்டது. பார்க்கின்சன் என்னும் நரம்பு மண்டல நோயால் அவதிப்பட்ட அவர், கை நடுக்கம் காரணமாக தண்ணீர் அருந்த உறிஞ்சு குழல் கேட்ட போது, அரசின் கருத்தை கேட்க 4 வாரம் அவகாசம் வழங்கி நீதிமன்றம் உறிஞ்சு குழல் வழங்கக் கூட மறுத்தது.

கடும் வலியினூடாக அவதிப்பட்டு வந்த அவரது உடல்நிலை மோசமடைந்த நிலையில் நேற்று செயற்கை சுவாச சுவாச கருவி பொருத்தப்படு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டது. மும்பை உயர்நீதிமன்றத்தில் இன்று அவரது பிணை வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது அவர் இறந்துவிட்டதாக நீதிபதியிடம் தெரிவிக்கப்பட்டது. முதுமையிலும், நோயுற்ற நிலையிலும் தனக்கான சிறிய தேவைகளுக்காகவும் நீதிமன்றத்திடம் கடுமையாக போராடிய வேண்டிய சூழலை ஸ்டேன் சாமி அவர்களுக்கு அரசும், நீதிமன்றமும் உருவாக்கியது. இந்தியாவின் மிக வயதான சிறைவாசியாக இருந்தவர் ஸ்டேன் சாமி அவர்கள்.

பழங்குடி மக்களின் வாழ்வாதாரத்தை காக்கும் பொருட்டு, இயற்கை வளங்களை சூறையாட அரசின் நிழலில் நுழைந்த கார்பரேட் நிறுவனங்களுக்கு எதிராக கடுமையான போராட்டங்களை முன்னெடுத்தவர். பழங்குடி மக்களுக்காக தன் வாழ்வையே அற்பணித்தவர். மக்களை காக்க அரசுக்கு எதிராக போராடியவர்களை அர்பன் நக்சல்கள் என பெயரிட்டு பொய்யான வழக்கில் கைது செய்தது. அதில் ஸ்டேன் சாமி அவர்களும் ஒருவர். வயதான நிலையிலும், நோய்வாய்ப்பட்ட நிலையிலும் விரும்பிய சிகிச்சை பெற மறுக்கப்பட்டு, நீதிமன்ற காவலிலேயே மரணமடைந்துள்ளார்.

என்ஐஏ மற்றும் நீதிமன்றத்தின் மானசாட்சியற்ற, மனிதத்தன்மையற்ற செயலின் காரணமாகவே ஸ்டேன் சாமி அவர்கள் உயிரிழந்துள்ளார். இது அப்பட்டமான அரசப் படுகொலை. ஸ்டேன் சாமி அவர்களுக்கு நீதி வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஸ்டேன் சாமி அவர்களை போன்றே பீமா கோரேகான் வழக்கில் பொய்யாக குற்றஞ்சாட்டபட்டு சிறையில் வாடும் அனைவரையும் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும். அரசியல் செயற்பாட்டாளர்கள் மீதான அரசியல் பலிவாங்கலில் அரசு ஈடுபடுவதை எதிர்த்து ஜனநாயக முற்போக்கு சக்திகள் அனைத்தும் குரல் கொடுக்க வேண்டும். அரசியல் செயற்பாட்டாளர்களை காக்க வேண்டிய கடமை நம் அனைவருக்கும் உள்ளது என்பதை உணர்ந்து அனைத்து ஜனநாயக முற்போக்கு அமைப்புகள் ஒன்றிணைந்து செயல்பட மே பதினேழு இயக்கம் அறைகூவல் விடுக்கிறது.

மே பதினேழு இயக்கம்
9884864010

Leave a Reply