தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை மூடக்கோரி அமைதி வழியில் நடந்த போராட்டத்தில் அரச பயங்கரவாதத்தால் உயிரிழந்த 15 தமிழர்களுக்கு வீரவணக்கம்!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை மூடக்கோரி அமைதி வழியில் நடந்த போராட்டத்தில் அரச பயங்கரவாதத்தால் உயிரிழந்த 15 தமிழர்களுக்கு வீரவணக்கம்! – மே பதினேழு இயக்கம்

தூத்துக்குடி நகரத்தில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலை அனில் அகர்வால் குஜராத் பனியா முதலாளியின் வேதாந்தா என்ற இங்கிலாந்து நாட்டு நிறுவனத்தின் கிளை நிறுவனம். 1994ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் நிறுவப்பட்ட இந்நிறுவனம் தொடர்ச்சியாக, தூத்துக்குடி மக்களின் கடுமையான உடல் மற்றும் சுற்றுப்புற பாதிப்புக்கு காரணமாய் இருந்து வந்திருக்கிறது. 1996 முதல் 2001 ஆம் ஆண்டு வரை தொடர்ச்சியாக தூத்துக்குடி சுற்று வாழும் மக்களின் கடுமையான புகார்களுக்கு மத்தியில், 1998ஆம் ஆண்டு தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனத்தால் ‘விதிமுறைகளுக்கு புறம்பாக இந்த ஆலை கட்டப்பட்டதாக’ அறிக்கையும் கொடுக்கப்பட்டது. இருப்பினும் ஆலையின் உடைய கழிவுகளின் பாதிப்பு தொடர்ந்து தூத்துக்குடி பகுதி வாழ் மக்களை சிரமப்படுத்த 2010ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தால் ஆலைக்கு தடை விதிக்கப்பட்டது. இந்த தடையை நீக்குவதற்காக உச்ச நீதிமன்றம் சென்ற ஸ்டெர்லைட் நிறுவனம் 100 கோடி ரூபாய் அபராதம் செலுத்தி தடையை நீக்கிக் கொண்டது. இருப்பினும் நிறுவனத்தால் ஏற்பட்ட கடுமையான பாதிப்புகளை தொடர்ந்து தூத்துக்குடி மக்கள் 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தங்கள் அமைதிவழிப் போராட்டத்தை தொடங்கினர்.

நூறு நாட்களாக நடைபெற்ற இப் போராட்டத்தில் தூத்துக்குடி மக்களும், தூத்துக்குடி முற்போக்கு இயக்கங்களும் தன்னெழுச்சியாக கலந்து கொள்ளவே ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு நெருக்கடிகள் அதிகமாக தொடங்கின. இதைத் தொடர்ந்து 100 வது நாளில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுப்பது என்று முடிவு செய்த போராட்டக்காரர்கள் அமைதியான ஊர்வலமாய் சென்று கொண்டிருந்தனர்.

அப்பொழுது அந்த ஊர்வலத்தில் திட்டமிட்டு கலவரங்களை செய்து காவல்துறையினர் துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த துப்பாக்கி சூட்டில் 19 வயதே ஆன தங்கை ஸ்னோலின் உட்பட கந்தையா, சண்முகம், கார்த்திக், கிளாஸ்டன், ரஞ்சித் குமார், செல்வசேகர், தமிழரசன், அந்தோணி செல்வராஜ், மணிராஜ், காளியப்பன், ஜெயராமன், ஜான்சி, வினிதா உள்ளிட்ட 15 தமிழர்கள் உயிரிழந்தனர். தங்கை ஸ்னோலின் வாயில் குண்டு பாய்ந்து உயிரிழந்திருந்தார். இந்த படுகொலைகள் தமிழ்நாட்டு மக்களிடையே கடுமையான கோபத்தையும் அதிர்ச்சியையும் மூடியிருந்தன.

ஆனால் அப்போது ஆட்சியில் இருந்த எடப்பாடி அரசு வேதாந்தா நிறுவனத்தின் மீதோ, துப்பாக்கிச்சூடு நடத்திய காவல் துறையின் மீதோ, துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிட்ட அதிகாரியின் மீதோ நடவடிக்கை எடுக்காமல் போராடிய போராட்டக்காரர்கள் மீது வழக்குத் தொடுப்பது என்றும், இதுபற்றி வெளியே பேசும் அரசியல் தலைவர்கள் மீது ஒடுக்குமுறையை ஏவுவது என்றும் தனது பாஜக கட்சியின் மீதான விசுவாசத்தை நிரூபித்துக் கொண்டிருந்தது.

தற்போதைய பண்ருட்டி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும், தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவருமான தோழர் வேல்முருகன் அவர்கள் தூத்துக்குடி பகுதியில் படுகொலை செய்யப்பட்ட குடும்பத்தினரிடம் ஆறுதல் கூற சென்றதற்காக தமிழக அரசால் கைது செய்யப்பட்டு கடுமையான உடல்நிலை சீர்கேட்டிற்கு உள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இக்கொலைகள் பற்றிய உண்மைகளை வெளியே கொண்டுவர செயல்திட்டம் வகுத்து பத்திரிகையாளர் மன்றத்தில் “தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு அரசு மற்றும் காவி பயங்கரவாத கும்பல்களால் திட்டமிட்டு நடத்தப்பட்ட படுகொலை” என்று நிரூபித்த சூழியல் போராளி தோழர் முகிலன் அவர்கள் மறுநாளே கடத்தப்பட்டார். மீண்டும் அவர் ஆந்திரப் பகுதியில் ஒரு தொடர்வண்டி நிலையத்தில் கிடைத்த பொழுது கடத்தியவர்களை பற்றி எந்தவித விசாரணையும் தொடங்காமல் அவர் மீது பொய் வழக்கு போட்டு கைது செய்வதிலேயே எடப்பாடி முனைப்பு காட்டியது.

இப் படுகொலைகளை பற்றிய உண்மையை ஐ.நா மன்றத்தில் எடுத்துரைத்த மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் ஒரு குற்றவாளியைப் போல் நடத்தப்பட்டு பெங்களூர் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். அதைத்தொடர்ந்து கடுமையான தனிமைச் சிறையில் அவரை அடைத்த எடப்பாடி அரசு பல்வேறு இன்னல்களையும், உடல் உபாதைகளையும் உருவாக்கியது.

இவ்வளவு கொடுமைகளையும் ஒரு பன்னாட்டு நிறுவனத்தை நடத்திவரும் குஜராத் பனியா முதலாளியான அனில் அகர்வால் என்ற தனிமனிதனின் கொள்ளைக்காக அன்றைய தமிழக அரசு செய்தது. இந்த வேதாந்தா நிறுவனம் மத்தியில் ஆளுகின்ற பாரதிய ஜனதா அரசுக்கு கோடிக்கணக்கில் நிதி கொடுத்து அப்பட்டமாய் வெளியே தெரிந்தது. அது மட்டும் அல்லாமல் ஆஸ்திரேலியா நாட்டின் நிலக்கரி சுரங்கங்களை குத்தகைக்கு எடுக்க இதே அனில் அகர்வாலின் வேதாந்தா நிறுவனத்திற்கு பிரதமர் மோடியே தூது சென்று அப்பணியை முடித்துத் தந்தார். இதை எதிர்த்து “வேதாந்தா நிறுவனமே வெளியேறு” என்று ஆஸ்திரேலிய மக்கள் பெரும் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்தியா, ஆஸ்திரேலியா என்று அல்லாமல் உலகின் பல்வேறு நாடுகளிலும் வேதாந்தா நிறுவனம் அந்நாட்டு வளங்களை சுரண்டி, சுற்றுசூழலை சீரழித்து வருகிறது. இந்நிறுவனத்தின் முதலாளியான அனில் அகர்வால் தற்போது குடியுரிமை பெற்று இருக்கும் இங்கிலாந்து நாட்டிலேயே இந்நிறுவனத்தின் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை, வரி ஏய்ப்பு வழக்குகளும் போடப்பட்டிருக்கின்றன. ஆனாலும் பாரதிய ஜனதா கட்சியின் நெருங்கிய நண்பராக விளங்கும் இவருக்கு ஆதரவாக 15 தமிழர்களை சுட்டு படுகொலை செய்து தன் ஆட்சியை காப்பாற்றிக் கொண்டார் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி. எல்லாவற்றுக்கும் மேலாக சில நாட்களுக்கு முன்பு கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு “தூத்துக்குடியில் வேன் மீது ஏறி நின்று யாரும் துப்பாக்கிச் சூடு நடத்தவில்லை. வேன் மீது ஏறி நின்று துப்பாக்கிச் சூடு நடத்தியதாக சொல்லப்படுவது ஒரு கற்பனைக் கதையே” என்று சட்டமன்றத்திலேயே பதில் கூறினார்.

தற்பொழுது கொரோனா நோய்த்தொற்று நேரத்தில் ஏற்பட்டுள்ள ஆக்சிஜன் தட்டுப்பாட்டை காரணம் காட்டி மத்திய மாநில அரசுகளின் உதவியோடும், நீதிமன்றத்தின் உதவியோடும் “ஆக்சிசன் தயாரித்துத் தருகிறோம்” என்ற நாடகத்தை ஆடி தனது ஆலையை மீண்டும் தற்காலிகமாக திறந்துள்ளது ஸ்டெர்லைட் நிறுவனம்.

இப்படி அதிகார வர்க்கத்தின் உதவியோடும், கட்சிகளுக்கு நிதி கொடுத்தும் தமிழர்களின் வளங்களைத் திருடி தூத்துக்குடி சுற்றுச்சூழலையும், அங்கு வசிக்கும் மக்களின் உடல் நலத்தையும் சீர்கேடு அடையச் செய்யும் வேதாந்தா நிறுவனம் மீண்டும் இம்மண்ணில் செயல்படத் தொடங்கினால் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 15 தமிழர்களின் ஈகத்திற்கு பொருளே இல்லாமல் போய்விடும்.

பாஜக-அதிமுக மற்றும் அரசு எந்திரம் நடத்திய தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு படுகொலையில் உயிரிழந்த 15 தமிழர்களுக்கு மே பதினேழு இயக்கம் வீரவணக்கத்தை செலுத்துவதோடு இத்தகைய அரச பயங்கரவாதம் மீண்டும் நடைபெறாமல் இருக்க தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனத்தை நிரந்தரமாக இடித்து தரைமட்டம் ஆக்குவதே ஒரே தீர்வு என்று சூளுரைக்கிறது. துப்பாக்கிச்சூட்டிற்கு உத்திரவிட அதிகாரிகள் கண்டறியப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என மே பதினேழு இயக்கம் கோரிக்கை விடுக்கிறது.

மே பதினேழு இயக்கம்
9884864010, 9444327010

Leave a Reply