தமிழீழ இனப்படுகொலைக்கான நினைவுச் சின்னத்தை தமிழ்நாட்டில் எழுப்பிடுவோம்! தமிழீழம் காக்க கட்சி, சாதி, மதம் கடந்து ஒன்றுபடுவோம்!

தமிழீழ இனப்படுகொலைக்கான நினைவுச் சின்னத்தை தமிழ்நாட்டில் எழுப்பிடுவோம்! தமிழீழம் காக்க கட்சி, சாதி, மதம் கடந்து ஒன்றுபடுவோம்! – மே பதினேழு இயக்கம்

தமிழர்களின் தாகமான தமிழீழ தாயகத்தை அடையும் நோக்கில் போராடிய தமிழர்களை இனப்படுகொலை செய்தது இலங்கை, இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து, சீனா உள்ளிட்ட நாடுகள். இனப்படுகொலை நடத்தப்பட்டு 12 ஆண்டுகள் ஆன பின்பும் தமிழர்களுக்கான நீதி கானல்நீராகவே உள்ளது. ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் தமிழர்களுக்கான நீதி என கொண்டுவரப்பட்ட தீர்மானங்கள், இனப்படுகொலையாளர்களை காப்பாற்றும் முயற்சியாகவே நீடிக்கிறது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் கீழ் இயங்கிய தமிழீழ அரசாங்கம், மிக சிறப்பான, முற்போக்கான ஜனநாயக ஆட்சியை வழங்கியது. பிராந்திய (புவிசார்) அரசியல் நலனுக்காக தெற்காசிய அரசியலில் ஆதிக்கம் செலுத்தி வந்த ஏகாதிபத்தியத்திய நாடுகள் விடுதலைப் புலிகளின் நடைமுறை அரசிற்கு எதிராக இருந்தன. தமிழர்களுக்கு எதிரான சிங்கள பௌத்த பேரினவாதமும், ஆரிய இனப்பகையும் இதன் பின்னணியில் இயங்கின என்றால் மிகையாகாது. திரிகோணமலை போன்ற ராணுவம் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியை தனது ஆளுகைக்குள் கொண்டு வர முயன்ற அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற மேற்குல நாடுகளின் ஏகாதிபத்தியமும், தெற்காசிய பிராந்திய அரசியலில் கோலோச்ச விரும்புகின்ற சீனாவின் விரிவாதிக்கமும் தமிழர்களுக்கு எதிராக இணைந்து 2009இல் மாபெரும் இனப்படுகொலையை நடத்தி முடித்தன.

தமிழீழ மக்கள் தங்கள் சுயநிர்ணய உரிமைக்காக இன்றளவும் போராடி வருகிறார்கள். அம்மக்களோடு இணைந்து அந்த ஜனநாயக கோரிக்கையை வென்றெடுப்பது நமது கடமையாகும். இதற்கான போராட்டம் தலைமுறைகள் கடந்து 70 ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வருகிறது. பல தலைமுறைகளின் கனவை ஜனநாயக வழியில் நிறைவேற்ற உறுதியேற்போம்.

2009-க்கு பிறகு ஒவ்வோர் ஆண்டும் மே மாதம் மூன்றாம் ஞாயிற்றுக்கிழமை மாலையில் தமிழர் கடலான சென்னை மெரினா கடற்கரையின் கண்ணகி சிலை பின்புறம் தமிழீழ இனப்படுகொலைக்கான நினைவேந்தல் மே பதினேழு இயக்கம் சார்பாக ஒருங்கிணைக்கப்பட்டு வந்தது. 2017-இல் திரு. எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் ஆட்சியில் நினைவேந்தல் நடத்த தடை விதிக்கப்பட்டது. தடையை மீறி நினைவேந்தல் நடத்தியதற்காக 17 தோழர்களை கைது செய்ததோடு, தோழர் திருமுருகன் காந்தி மற்றும் தமிழர் விடியல் கட்சியின் டைசன், இளமாறன், அருண்குமார் ஆகியோர் மீது குண்டர் சட்டத்தில் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்கப்பட்டனர்.

2018, 2019 ஆண்டுகளில் நினைவேந்தல் நடத்துவதற்கான ஜனநாயக போராட்டத்தினை மே பதினேழு இயக்கம் முன்னெடுத்தது. இந்த கோரிக்கையை வலுப்படுத்துவதற்காக 2018 போராட்டத்தில் பங்கெடுத்து முன்னணி பாத்திரம் வகித்ததற்காக மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான ஐயா வைகோ மற்றும் மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி மீது வழக்குகள் ஏவப்பட்டன. 2019-இல் நினைவேந்தல் நடத்த அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், சேப்பாக்கத்தில் நடத்தியதற்காக தோழர் திருமுருகன் காந்தி உள்ளிட்ட தோழர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டன. சென்ற ஆண்டு 2020 கொரானா நோய் பெருந்தொற்று காலத்தில், பொதுவெளியில் கூட முடியாத சூழலில், தமிழ்நாடு முழுவதும் குடும்பத்தினருடன் மெழுகுவர்த்தி ஏந்தி, விளக்கேற்றி நினைவேந்தல் நடந்தேறியது.

அந்த வகையில், இந்தாண்டு கொரானா நோய்த்தொற்று மிகத்தீவிரமடைந்துள்ள நிலையில், கடந்த ஆண்டை போல் வீடுகளில் இருந்தபடியே, இன்று, மே 18 செவ்வாய் மாலை 6:30 மணியளவில், தமிழீழ விடுதலைப் போரில் உயிர்நீத்தவர்களை நினைவுகூரும் விதமாக ஒவ்வோர் வீட்டிலும் மெழுகுவர்த்தி ஏந்தி, விளக்கேற்றி, பதாகைகள் ஏந்தி தமிழீழ இனப்படுகொலைக்கான 12ம் ஆண்டு நினைவேந்தலை நடத்திடுவோம் என மே பதினேழு இயக்கம் அறைகூவல் விடுக்கிறது.

மேலும், புதிதாக பொறுப்பேற்றிருக்கக்கூடிய தமிழ்நாடு அரசு, தமிழினப்படுகொலைக்கு நினைவெந்தும் விதமாக உலகத் தமிழர்களின் தாய்மண்ணான தமிழ்நாட்டில் சென்னை மெரினா கடற்கரையில் நினைவு சின்னம் எழுப்ப வேண்டுமென கோரிக்கை வைக்கின்றோம். மேலும், இனப்படுகொலையில் பலியானவர்களுக்கான நினைவேந்தலை இந்த கடற்கரையில் ஆண்டுதோறும் அரசே முன்னின்று நடத்திட வேண்டும். இந்த கோரிக்கையை 2011 முதல் மிக நீண்ட காலமாக மே பதினேழு இயக்கம் முன்வைத்து வருகிறது என்பதை இச்சமயத்தில் நினைவு கூற விரும்புகின்றோம்.

தமிழினத்தின் வரலாற்றில் நீக்க இயலா கறையுடன் உறைந்து போயிருக்கின்ற இந்த துயர நிகழ்வை கட்சி, சாதி, மதம், எல்லை கடந்து தமிழினம் நினைவு கூற வேண்டும். இதே ஒற்றுமையுடன் தமிழினப்படுகொலைக்கான சுதந்திரமான சர்வதேச விசாரணையும், தமிழீழ விடுதலைக்கான பொதுவாக்கெடுப்பையும் நடத்த வேண்டும் என்ற ஜனநாயக கோரிக்கையை நாம் நிறைவேற்றுவோம். 2013ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட மேற்கண்ட தீர்மானங்களை நினைவுபடுத்துவதோடு, தமிழ்நாட்டு மக்களுடைய ஏகோபித்த கோரிக்கையை இந்திய அளவில் நிறைவேற்ற அனைவரும் ஒன்றுபட வேண்டுமென மே பதினேழு இயக்கம் கோரிக்கையை முன்வைக்கிறது.

புதிதாக பொறுப்பேற்றிருக்கக்கூடிய தமிழ்நாடு அரசின் மாண்புமிகு முதலமைச்சர் திரு. ஸ்டாலின் அவர்களும், அமைச்சர் பெருமக்களும் மற்றும் அனைத்து கட்சி சட்டமன்ற உறுப்பினர்களும் தமிழ்நாட்டில் நினைவுச் சின்னம் எழுப்பவும், நினைவேந்தல் நடத்துவதற்கும் உரிய உரிமையை நிலைநாட்டுவதோடு இந்நிகழ்வை முன்னேற்பாடுகளை ஒருமித்து முன்னெடுக்க வேண்டுமென மே பதினேழு இயக்கம் வேண்டுகோள் வைக்கிறது.

தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்!

நாம் வெல்வோம்!

மே பதினேழு இயக்கம்
9884864010, 9444327010

Leave a Reply