மாவீரன் முத்துக்குமார் தந்தைக்கு புகழ் வணக்கம்!

மாவீரன் முத்துக்குமார் தந்தைக்கு புகழ் வணக்கம்! – மே பதினேழு இயக்கம்

தமிழீழ இனப்படுகொலையை தடுத்து நிறுத்துவதற்காக தன்னுயிர் ஈந்த மாவீரன் முத்துக்குமார் அவர்களின் தந்தை ஐயா குமரேசன் அவர்கள் வயது மூப்பு காரணமாக, 19-05-2021 புதன் மாலை 8:30 மணியளவில், சென்னை கொளத்தூரில் உள்ள அவரது மகள் வீட்டில் இயற்கை எய்தினார். ஐயா அவர்கள் நீண்டகாலமாக புற்றுநோயால் அவதிப்பட்டு வந்தவர். அவருக்கு மே பதினேழு இயக்கத்தின் சார்பாக புகழ் வணக்கத்தை தெரிவித்து கொள்கிறோம்!

2009-ல் தமிழீழ இனப்படுகொலை உச்சத்தில் இருந்த போது தமிழ்ச் சமூகம் செய்வதறியாது தவித்து வந்த வேளையில், தமிழீழ இனப்படுகொலையை தடுத்து நிறுத்துவதற்காக தன்னுயிரை கொடுத்த மாவீரன் முத்துக்குமார் தமிழ்நாட்டு இளைஞர்கள் மத்தியில் புதிய எழுச்சியை ஊட்டினார். அவரது ஈகம் தமிழீழ ஆதரவாளர்கள் அனைவரையும் ஒன்றிணைய வைத்தது. இப்படியான மாவீரனை பெற்றெடுத்தவர் தான் மறைந்த ஐயா குமரேசன் அவர்கள்.

முத்துக்குமார் இறுதி நிகழ்வில் அவரது ஈகத்தை மூடி மறைப்பதற்கான சூழ்ச்சிகளை நடந்த போது, முத்துக்குமார் தன்னுடைய இறுதி கடிதத்தில் தன் உடலை ஆயுதமாக பயன்படுத்தி போரை தடுத்து நிறுத்துங்கள் என்று தமிழ் சமூகத்திற்கு இளைஞர்களுக்கு அறைகூவல் விடுத்ததை குறிப்பிட்டு, முத்துக்குமார் தமிழ் சமூகத்தின் சொத்து, அவன் இறுதியாக சொன்ன வாசகம் போரை தடுத்து நிறுத்த வேண்டும் என்பதே, முத்துக்குமார் என்ன சொன்னாரோ அதைச் செய்யுங்கள் என்று முத்துக்குமாரின் உடலை தமிழ் சமூகத்திற்கு போராட கொடுத்தவர் முத்துக்குமாரின் தந்தை குமரேசன் அவர்கள்.

ஐயா குமரேசன் அவர்கள் தமிழீழ அரசியலில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். வில்லிவாக்கம் மொழிப்போர் ஈகியர் நினைவு நாள் பொதுக்கூட்டம், கொளத்தூர் முத்துக்குமார் நினைவு பொதுக்கூட்டம் உட்பட மே பதினேழு இயக்கம் முன்னெடுத்த தமிழீழ அரசியல் போராட்டங்களில் தவறாது கலந்துகொண்டவர். மே பதினேழு இயக்கம் சார்பாக ஆண்டுதோறும் ஒருங்கிணைக்கப்படும் தமிழீழ இனப்படுகொலைக்கான நினைவேந்தல் நிகழ்வுகளில் தன்னெழுச்சியோடு பங்கேற்று வந்துள்ளார். அவர் எந்த இடத்திலும் தமிழின உணர்வாளர்களிடம் எவ்வகையான உதவிகளையும் ஏற்க மறுத்து வாழ்ந்த பெருமகனார்.

முத்துக்குமாரின் தியாகம் தமிழர்களின் அரசியலில் மிகப்பெரிய மாற்றத்தை உண்டாக காரணமாக இருந்தது என்பது தமிழ் சமூகம் மறந்துவிடாது. மாவீரன் முத்துக்குமாரின் தந்தை அன்று முத்துக்குமாரின் அரசியலை தமிழர்களுக்கு கொடையாக கொடுத்தார் என்பதையும் தமிழ்ச் சமூகம் மறந்து விடாது.

ஐயா குமரேசன் அவர்களின் மறைவு, தமிழீழ அரசியல் போராட்டதிற்கு ஓர் இழப்பாகும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்திற்கும், தோழர்களுக்கும் மே பதினேழு இயக்கம் ஆழந்த இரங்கல்களை தெரிவித்து கொள்கிறது.

மே பதினேழு இயக்கம்
9884864010 | 9444327010

Leave a Reply