தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தொடங்கப்பட்ட நாள் (5.5.1976)

- in ஈழ விடுதலை

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தொடங்கப்பட்ட நாள் (5.5.1976)

“தமிழீழ தனியரசே தமிழ் மக்களின் இறுதியான தீர்வாக அமையும் என உறுதியாக நம்பி நாம் எமது இலட்சியப் போரை தொடர்வோம். விடுதலைக்காக எத்தகைய துன்பங்களையும் சுமக்க தயாராகும் தேசமே இறுதியில் விடுதலையை வென்றெடுக்கும் என்ற அசையாத நம்பிக்கையுடன் நாம் போராடுவோம்.”

1998-ஆம் ஆண்டு மாவீரர் உரையில் தமிழீழ தேசியத் தலைவர் தோழர் பிரபாகரன் அவர்கள் கூறிய வரிகள் தான் இவை. ஈழத்தமிழர்களின் பெரும் துயரத்திலிருந்தும், சிங்கள இனவெறி அரசின் கோரப்பிடியிலிருந்தும் அவர்களுக்கான நிரந்தர விடுதலை அளிக்கக் கூடியது இறையாண்மை கொண்ட, விடுதலை பெற்ற தனித் தமிழீழமே என்று உறுதிபட அறிவித்த விடுதலை இயக்கமான தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தொடங்கப்பட்ட நாள் இன்று.

தமிழீழ உரிமைப்போர் என்பது விடுதலைப் புலிகள் இயக்கம் தொடங்கப்பட்ட பின்பு தொடங்கவில்லை. ஆங்கில ஆட்சியில் இருந்து இந்தியா இலங்கை உட்பட்ட பகுதிகள் விடுதலை பெற்ற காலத்திலேயே தமிழர்களுக்கான வரலாற்று உரிமையை சிங்கள அதிகார வர்க்கம் மறுத்து தான் வந்திருக்கிறது. தந்தை செல்வா அவர்களின் தலைமையில் நடைபெற்ற பல்லாண்டு கால அமைதிவழிப் போராட்டங்கள் ஒவ்வொன்றும் துரோகத்தையும், ஏமாற்றத்தையும் கொண்டு வந்து சேர்ப்பதை கண்டு மனம் வெதும்பிய தமிழீழ தேசியத் தலைவர் தோழர் பிரபாகரன் அவர்கள் தன்னுடன் இருந்த மிகக் குறைந்த, அதே நேரத்தில் தமிழீழ விடுதலையில் சமரசமற்ற நிற்கக்கூடிய நண்பர்களை வைத்து தொடங்கப்பட்ட ‘புதிய தமிழ் புலிகள் இயக்கம்’ தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கமாய் உருவெடுத்த நாள் இன்று.

ஏறத்தாழ 30 ஆண்டுகள், உலக வல்லாதிக்க நாடுகளின் எதிர்ப்பு, அண்டை நாடான இந்தியாவின் துரோகம், சிங்கள இனவெறி அரசின் ராணுவத் தாக்குதல் மற்றும் ஈழத் தமிழர்களின் மீதான மனிதத்தன்மையற்ற கொலைவெறி தாக்குதல்கள் ஆகியவற்றிலிருந்து எல்லாம் மக்களை காப்பாற்றி தமிழீழ அரசை நிறுவி, ஆட்சியும் நடத்திக் காட்டிய விடுதலைப்புலிகளின் பாதை புல்வெளிகளால் செய்யப்பட்டது அன்று. தொடங்கிய நாள் முதலே பல்வேறு துரோகங்களை சந்தித்தும், இந்திய அமைதிப்படை போன்ற அன்னிய நாட்டு சதிகளை முறியடித்தும், சிங்கள இனவெறி அரசின் போர் விதிகளுக்கு புறம்பான தாக்குதல்களை முறியடித்தும், அதே நேரத்தில் ஆளுகைக்கு உட்பட்ட தமிழீழ பகுதியில் சாதியற்ற சமத்துவ சமூகத்தை நிர்வகித்தும் வந்த தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தொடங்கப்பட்ட நாள் இன்று.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் வரலாற்று பாதையில் இருந்து நாம் எதைக் கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது? ‘சாதி ஒழிப்பை, சமரசம் இல்லா போராடும் குணத்தை, சமூக எதிரிகளை இனம் காணும் யுத்தியை, தற்சார்பு பொருளாதார மீட்டெடுப்பு சிந்தனையை, பெண்ணடிமை ஒழிப்பை, ஒரு சமத்துவ சமூகநீதி சமூகத்தின் நிர்வாகத்தை’ என்று தந்தை பெரியார் முதலான மாபெரும் தலைவர்கள் படைக்க விரும்பிய ஒரு சமூகத்தின் கலாச்சார, பண்பாட்டு கூறுகள் அத்தனையும் தமிழீழ விடுதலைப் புலிகளின் வாழ்வியல் நமக்கு கூறி விட்டுச் சென்றிருக்கின்றன. வெறும் போர் செய்யும் ராணுவமாக மட்டும் விடுதலைப்புலிகளை திட்டமிட்டு கட்டமைக்கும் கயவர்களுக்கு இங்கு வேறு நோக்கங்கள் இருக்கின்றன. விடுதலைப்புலிகளின் போராட்ட வரலாறு வெறும் போரை மட்டும் கொண்டதென்று. இதற்கிடையில் தான் அவர்கள் தங்கள் மக்களுக்கு கல்வி அளித்தனர், வங்கிகள் நடத்தினர், நேர்மையான காவல் துறையும் நீதித்துறையும் உருவாக்கினர். போர் ஒருபுறம் நடந்து கொண்டிருந்த தருணத்தில், போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான மறுமலர்ச்சி அமைப்புகளும் உருவாக்கப்பட்டன. உலக நாடுகளே தமிழீழத்தின் மீது பொருளாதார தடை விதித்த போதும் தம் நிலத்திலேயே தனக்கான தேவைகளை, தேவைகளுக்கான உற்பத்திகளை நிர்வகித்த விடுதலைப்புலிகளின் இயக்க வரலாறுதான் வல்லாதிக்க சக்திகளையும், அதிகார வர்க்கங்களையும் எதிர்த்திட நினைக்கும் ஓர் புரட்சிகர இயக்கத்திற்கு படிப்பினையாக அமைய முடியும்.

விடுதலை பெற்ற ஈழ தேசம் என்பது தமிழர்களின் மரபுசார் உரிமை, தமிழர்தம் வரலாற்று உரிமை. அதை பெற்றுத்தர தன் இன்னுயிர் ஈந்த மாபெரும் போராளிகளை வழிநடத்திச் சென்ற தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் தோன்றிய நாளான இன்று மே பதினேழு இயக்கம் தனது செவ்வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறது.

இதோ தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் தாங்கள் எதிர்நோக்கியிருக்கும் தமிழீழம் எப்படி இருக்கும் என்று பதிலளிக்கிறார்.

“எங்கள் ஈழதேசம் விடுதலை பெற்ற சோசலிச தேசமாய் அமையும்”

வெல்லும் தமிழீழம்.

மே பதினேழு இயக்கம்
9884864010, 9444327010

Leave a Reply