விடுதலைப் பெற்ற தனித் தமிழீழமே ஒரே தீர்வு என பறைசாற்றிய வட்டுக்கோட்டை தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நாள் இன்று (14.5.1976)

- in ஈழ விடுதலை

விடுதலைப் பெற்ற தனித் தமிழீழமே ஒரே தீர்வு என பறைசாற்றிய வட்டுக்கோட்டை தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நாள் இன்று (14.5.1976)

தமிழீழ விடுதலைப் போராட்டத்தைப் பற்றி பேசும்பொழுது நம் கண் முன்னே வந்து போகும் தருணம் வட்டுக்கோட்டை தீர்மானம் இயற்றப்பட்ட தருணம்தான். ஆங்கிலேயர்களின் ஆட்சிக்கு பிறகு இலங்கையில் ஆண்ட சிங்கள இனவெறி அரசு தொடர்ச்சியாக தமிழர்களின் மரபுவழி மற்றும் வரலாற்று நிலப் பகுதியான இலங்கையின் கிழக்கு மற்றும் வடக்கு பகுதிகள் இணைந்த ஈழ நிலத்தில் கொஞ்சம் கொஞ்சமாக சிங்களவர்களை குடியேற்ற செய்து அங்கு வாழ்ந்து வந்த தமிழர்களின் வாழ்விடங்களை அழிக்கத் தொடங்கினர். தமிழர்களை இரண்டாம் தர குடிமக்களாக கையாண்ட இலங்கை அரசு, ‘சிங்களம் மட்டும் சட்டம்’ போன்ற மக்கள் ஆட்சிக்கு எதிரான செயல்பாடுகளை முன்னெடுத்தது.

இதற்கிடையில் தமிழர்களின் உரிமைகளை மக்களாட்சியின் அடிப்படையில், அமைதி வழியில் மீட்டுவிடலாம் என்று எண்ணிக்கொண்டிருந்த பல்வேறு தலைவர்களில் மிக முக்கியமானவரான தந்தை செல்வா என்ற திரு.செல்வநாயகம் அவர்கள் தேர்தல் முறையில் இலங்கை நாடாளுமன்றத்திற்கு போட்டியிட்டு, ஒவ்வொரு முறையும் இலங்கை அரசால் ஏமாற்றப் பட்டார். எண்ணற்ற ஒப்பந்தங்களையும், வாக்குறுதிகளையும் வெறும் காகித அளவில் மட்டும் கொடுத்துக் கொண்டிருந்த சிங்கள இனவெறி அரசு ஒருமுறை கூட அவற்றை செயல்படுத்தாமல் தமிழர்களை, தமிழர் நலன் பேசிய அரசியல்வாதிகளை ஏமாற்றி வந்ததை புரிந்து கொண்ட தந்தை செல்வா அவர்கள் 1976 ஆம் ஆண்டு, அடுத்து நடைபெற இருந்த இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் பங்கு பெற முன்வந்த தமிழர் சார் அரசியல் கட்சிகள் அனைத்திற்கும் பொதுவான ஒரு தீர்மானத்தை இயற்ற முன்வந்தார். வட்டுக்கோட்டை என்ற இடத்தில் இயற்றப்பட்ட அந்த தீர்மானம் கீழ்க்கண்ட முன்னெடுப்புகளை உள்ளடக்கியது.

– இலங்கைத் தீவின் வடக்கு, கிழக்கு மாகாணங்களை உள்ளடக்கிய பாரம்பரிய, சுதந்திரம் மற்றும் இறையாண்மை கொண்ட தமிழர் தாயகம் வேண்டும்.
– அதில் ஒரு தேசிய இனமாக தமிழரின் அரசியல் இலக்கை அவர்களே தீர்மானித்துக் கொள்ளும் தன்னாட்சி உரிமை வேண்டும்.
– அதற்காக முழுமூச்சான பயணத்தை அஞ்சாத அர்ப்பணிப்புக்களோடு நாம் முன்னெடுக்கவேண்டும்

இந்தத் தீர்மானத்தின் மூலம் அதுவரை ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழர்களின் உரிமைகளை மீட்டு எடுப்பது என்ற நிலைக்கு இனி வாய்ப்பு இல்லை என்று உறுதி செய்யப்பட்டு, விடுதலை பெற்ற தனித் தமிழீழமே தமிழர்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற கூடியதாக அமையும் என பறை சாற்ற பட்டது. 1977 ஆம் ஆண்டு இந்த தீர்மானத்தை முன்வைத்து தேர்தலை சந்தித்த தமிழர் விடுதலைக் கூட்டணி பெரும் வெற்றியை பெற்று நாடாளுமன்றத்திற்குள் நுழைந்தன. அதன் அடிப்படையில் தமிழீழத்தில் வாழும் தமிழர்கள் தங்களுக்கென்று தனி நாடு கோரிக்கையை மனதார ஏற்றுக் கொண்டனர் என்பதை உலகெங்கும் வாழ்ந்து கொண்டிருந்த தமிழர்களும், இலங்கை பேரினவாத அரசும் உணர்ந்து கொண்டது.

தமிழீழ விடுதலைக்காக 30 ஆண்டுகளுக்கு மேலாக போரிட்டு வந்த தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தொடக்கம் இந்த தீர்மானம் தான் என்று கூறினால் அது மிகையாக இருக்காது. பல்வேறு தருணங்களில் இலங்கை பேரினவாத அரசு தொடர்ச்சியாக தமிழர்களையும், தமிழர் நலன் பேசும் அரசியல் கட்சிகளையும் ஏமாற்றுவதை உணர்ந்துகொண்ட தமிழீழத் தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்கள் ஒரு கட்டத்தில் தமிழீழ விடுதலைக்கு ஆயுதப் போராட்டமே சரி என்று முடிவு செய்திருந்தார். இத்தகைய சூழ்நிலையில் தந்தை செல்வா அவர்களின் தலைமையில் ஏற்றப்பட்ட வட்டுக்கோட்டை தீர்மானம் அவரது முடிவை மேலும் உறுதிபடுத்தியது.

தமிழீழத்தில் தந்தை செல்வா உள்ளிட்ட தமிழர் சார் அரசியல் தலைவர்களும், விடுதலைப் புலிகள் அமைப்பும் முன்னெடுத்த தனிஈழக் கோரிக்கையை நாம் வெளியே இருந்து விமர்சனம் செய்வது சரியாக இருக்க முடியாது. தினம் தினம் சிங்கள இனவெறி அரசின் காவல்துறையிலும், ராணுவத்தினாலும், பௌத்த பேரினவாத வன்முறைக் கும்பல்களின் அடக்கு முறையாலும் அவதிப்பட்டு வந்த ஈழ மக்களுக்கு தீர்வாய், ஈழத்தமிழர்கள் ‘விடுதலை பெற்ற தனித் தமிழ் ஈழமே ஒரே தீர்வு’ என்கின்ற வட்டுக்கோட்டை தீர்மானத்தை ஒருமனதாக ஆதரித்ததிலிருந்தே இதை நாம் புரிந்து கொள்ள முடியும்.

தமிழீழ இனப்படுகொலை நடந்து 12 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் தந்தை செல்வா அவர்களும், விடுதலைப் புலிகள் இயக்கமும் தனிஈழக் கோரிக்கையில் ஏன் அவ்வளவு உறுதியாக நின்றார்கள் என்பதை நம்மால் நிச்சயம் புரிந்து கொள்ள முடியும். இப்பொழுதும் கூட தமிழகத்திலும், இந்திய ஒன்றியத்தில் இருக்கும் ஒரு சிலர் ஒன்றுபட்ட இலங்கைக்குள் தான் தமிழர்கள் இணைந்து வாழ வேண்டும் என்று கூறுவதும் தமிழீழத்தின் வரலாறு, தமிழீழ தமிழர்கள் எதிர்கொண்ட கொடுமைகள் ஆகியவற்றை அறியாமல் கூறுகின்றனர் என்றோ அல்லது சிங்கள அரசிற்கு ஆதரவாக உள்நோக்கத்துடன் செயல்படுகின்றனர் என்றுதான் விமர்சிக்க வேண்டியிருக்கிறது.

ஒன்றரை லட்சம் ஈழத் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்ட இதே மாதத்தில் தனித் தமிழீழமே அங்கு தற்போது வாழ்ந்து கொண்டிருக்கும் ஈழத்தமிழர்களின் வாழ்க்கைக்கு நிரந்தர அரசியல் தீர்வாக அமையும் என்பதை மே பதினேழு இயக்கம் வலியுறுத்துகிறது.

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் .

மே பதினேழு இயக்கம்
9884864010, 9444327010

Leave a Reply