உலக செவிலியர் நாள் (12-05-2021)

உலக செவிலியர் நாள் (12-05-2021)

மருத்துவத்துறையில் செவிலியர்களின் பங்களிப்பு என்பது உலகளாவிய அளவில் வியந்து பார்க்கக்கூடிய பங்களிப்பாகும். நோய்தீர்க்கும் மருத்துவர் ஒரு நோயாளியிடம் பழகுவதை விட அதிக நேரமும், அதிக கனிவும் எடுத்துக்கொண்டு பழகக்கூடிய மருத்துவத்துறை ஊழியர்கள் செவிலியர்களே ஆவர். அதிலும் குறிப்பாக தற்பொழுது நிகழ்கின்ற கொரோனா பெருந்தொற்று போன்ற காலங்களிலும், இயற்கைப் பேரிடர் மற்றும் பேரழிவு காலங்களிலும் பாதிக்கப்பட்ட மக்களோடு மிக நெருக்கமாக பழகுகின்ற முன்கள பணியாளர்களாக விளங்குபவர்கள் செவிலியர்.

பல்வேறு நேரங்களில் நோய்வாய்ப்பட்டவரின் மனக் கசப்பிற்கும், நோயாளிகளின் உடன் வந்தவர்களின் கசப்பிற்கும் ஆளாகும் செவிலியர்கள், அவற்றையெல்லாம் ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்வதில்லை. மாறாக எவ்வளவு மன வருத்தங்கள் ஏற்பட்டாலும் அந்த நோயாளியின் நோய் குணமாவதற்கு என்னென்ன கட்டுப்பாடுகள் தேவைப் படுகின்றனவோ, அவற்றையெல்லாம் கண்டிப்போடும், மனிதாபிமான உணர்வோடும் செயல்படுத்தி தன் பொறுப்பில் இருக்கும் நோயாளியின் உடல் நலம் சீராவதை மட்டுமே கண்ணும் கருத்துமாய் கொண்டிருக்கும் செவிலியர்கள் சமூகத்தில் போற்றப்பட வேண்டிய உழைக்கும் வர்க்கத்தினர் ஆவர்.

தற்பொழுது உலகம் முழுவதிலும் கடுமையாக பரவிக் கொண்டிருக்கும் கொரோனா பெருந்தொற்று நோயால் அதிகமாக பாதிப்படைந்திருக்கும் முன் களப்பணியாளர்கள் செவிலியர்களும் மருத்துவர்களும். அதிலும் குறிப்பாக செவிலியர்கள் தகுந்த பாதுகாப்பு கருவிகள் இன்றி நோயாளிகளை பராமரிக்கவேண்டிய நிலையும் இருந்தது. பல்வேறு அரசு நிறுவனங்கள் பாதி வேலை ஆட்களோடு இயங்குகின்ற நிலை ஏற்பட்ட போதும், மருத்துவமனைகளில் செவிலியர்களின் பணியானது இரட்டிப்பாகி இருக்கும் காலத்திலும் யாரும் நோய்க்கு பயந்தோ, பணிச்சுமை காரணம் காட்டியோ தனது இச்சேவையில் இருந்து சிறிதும் விலகவில்லை என்பது சமூகத்தின் மீது அவர்கள் கொண்டிருக்கும் பெரும் பற்றை எடுத்துக்காட்டுகிறது.

இப்படிப்பட்ட இக்கட்டான நோய்தொற்று காலச்சூழலில் தன்னலம் பார்க்காது சமூகத்தில் தான் ஏற்றுக்கொண்ட பணியை சேவையாகக் கருதி செய்து வரும் அனைத்து செவிலியர்களுக்கும் மே பதினேழு இயக்கம் உலக செவிலியர் நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.

மே பதினேழு இயக்கம்
9884864010, 9444327010

Leave a Reply