தமிழீழ ஆதரவாளரும், மொழிப்போர் வீரரும், தமிழ்மண் பதிப்பகத்தின் உரிமையாளருமான ஐயா திரு கோ.இளவழகன் அவர்களுக்கு வீரவணக்கம்!

தமிழீழ ஆதரவாளரும், மொழிப்போர் வீரரும், தமிழ்மண் பதிப்பகத்தின் உரிமையாளருமான ஐயா திரு கோ.இளவழகன் அவர்களுக்கு வீரவணக்கம்! – மே பதினேழு இயக்கம்

தமிழ்மண் பதிப்பகத்தின் வழியே மாபெரும் அரிய தமிழ் நூல்களை, நூட்தொகுப்புகளை வெளியிட்டு தமிழ்த் தொண்டாற்றிய ஐயா திரு கோ.இளவழகன் அவர்கள் இன்று (மே 4, 2021) மறைவுற்றார்.

தமிழர்தம் அரசியல், பண்பாட்டு சான்றுகளாய் விளங்கும் பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் பாவேந்தம், திரு கா.அப்பாதுரையாரின் அப்பாதுரையம், மொழிஞாயிறு தேவநேயப் பாவாணரின் தேவநேயம், அறிஞர் அண்ணா அவர்களின் நூல் தொகுப்பு போன்ற பெரும் அரசியல் தொகுப்புகளை வெளியிட்டு தமிழ் தொண்டாற்றியவர் ஐயா கோ.இளவழகன் அவர்கள். தமிழிசை அறிஞர் ஆபிரகாம் பண்டிதரின் கருணாமிருத சாகரம், ந.சி.கந்தையாபிள்ளையின் அனைத்து நூல்கள், சாத்தன்குளம் அ.இராகவன் நூல்கள், என பல்வேறு அரிய நூல்களை வெளியிட்டு தமிழ் பதிப்பகத் துறையில் முத்திரை பதித்தார்.

இயல்பிலேயே தமிழின் மீது பற்றுகொண்ட ஐயா கோ. இளவழகன் அவர்கள் 1965 ஆம் ஆண்டு நடந்த இந்தி எதிர்ப்புப் போரில் 48 நாட்கள் சிறைபட்டு இந்தி திணிப்புக்கு எதிராக நின்றவர். மேலும் தமிழீழ விடுதலை மீது ஆதரவு கொண்ட ஈழப் பற்றாளராக விளங்கியதோடு, தஞ்சாவூர் பகுதியில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் அமைவு பெற பெருமுயற்சி எடுத்துக் கொண்டவர்.

தமிழுக்கும், தமிழர்களுக்கும் ஒப்பற்ற படைப்புகளை தந்தது மட்டுமல்லாமல், தமிழர்களின் இன மொழி உரிமைக்காக குரல் கொடுத்த ஐயா திரு கோ. இளவழகன் அவர்களின் மறைவு தமிழ்நாட்டுக்கு ஒரு மாபெரும் இழப்பாகும். அவர்தம் இழப்பால் வாடும் அவரது குடும்பத்திற்கு இரங்கலை தெரிவித்துக் கொள்வதோடு, அவரது தமிழ்த் தொண்டினை நினைவிலேந்தி மே பதினேழு இயக்கம் தனது வீரவணக்கத்தை செலுத்துகிறது.

மே பதினேழு இயக்கம்
9884864010, 9444327010 

Leave a Reply