உழைக்கும் மக்கள் அனைவருக்கும் மே பதினேழு இயக்கத்தின் தொழிலாளர் நாள் வாழ்த்துகள்!

உழைக்கும் மக்கள் அனைவருக்கும் மே பதினேழு இயக்கத்தின் தொழிலாளர் நாள் வாழ்த்துகள்!

1860 ஆம் ஆண்டுகளின் இறுதியில் ஸ்காட்லாந்து நீதிமன்றத்திற்கு வந்த ஒரு வழக்கில் 3 தொழிலாளர்கள் ‘ஒரு ரயில் விபத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் இறந்ததற்கு குற்றவாளிகள் இவர்கள்தான்’ என குற்றம் சாட்டப்பட்டு இருந்தனர். ஒருவர் அந்த ரயில் பெட்டி இயக்கியவர், ஒரு அந்த சமிக்கைகளை தர வேண்டியவர், மற்றொருவர் அந்த ரயில் பெட்டிக்கு பாதுகாப்பாக வரவேண்டிய காவலாளி. அந்த வழக்கில் அந்த மூன்று பேரும் வைத்த வாதம் ஒன்றே ஒன்று தான். ஒருநாளைக்கு 14 மணி நேரத்திலிருந்து 20 மணி நேரம் வரை வேலை செய்து வந்த மூவரும், சில நேரங்களில் 40 முதல் 50 மணி நேரம் தொடர்ச்சியாக வேலை செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் இருந்தது. அதன் காரணமாக அவர்கள் மயக்கமடைந்து இந்த விபத்து நேர்ந்தது என்று நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

ஆம், உலகிலேயே நாங்கள் தான் நாகரீகம் அடைந்தவர்கள் என்று பெருமை பேசிய அமெரிக்க ஐரோப்பிய நாடுகளில் தொழில் புரட்சிக்குப் பிறகு, தொழிலாளர்களுக்கு நிகழ்ந்த கொடுமைகளில் ஒன்று தான் மேலே கூறிய வழக்கு. இதுபோன்ற நூற்றுக்கணக்கான நிகழ்வுகளை வரலாறு தனக்குள்ளே ஒளித்து வைத்திருக்கிறது.

உழைக்கும் வர்க்கத்தின் உழைப்பு என்ற உட்பொருள் இல்லாமல் இங்கு எந்த ஒரு உற்பத்தியும் நடப்பதில்லை என்கின்ற அடிப்படை பொருளியல் கோட்பாட்டை மறுத்து வந்த முதலாளித்துவத்தின் கோரப்பிடியில் உலகளாவிய தொழிற்சாலைகளிலும், பண்ணைகளிலும் வேலை செய்துவந்த உழைப்பாளர்கள் தங்கள் உழைப்புக்கான நேரக் கணக்கென்று ஒன்று இல்லாமலும், உழைத்த நேரத்திற்கு கூலியென்று ஒன்று கிடைக்காமலும் இருந்து வந்த காலம் அது.

புரட்சியாளர் மார்க்ஸ், புரட்சியாளர் எங்கல்ஸ் போன்ற மாபெரும் தலைமைகளின் கீழ் புத்துணர்ச்சி பெற்ற தொழிலாளர் வர்க்கம் தங்களுக்கான வேலை நேரத்தை ஒரு நாளைக்கு 8 மணி நேரம் என வகுத்து தருமாறு அரசிடமும், முதலாளிய வர்க்கத்தினிடமும் கோரிக்கை வைத்திருந்தனர். அக்கோரிக்கையின் ஒரு பகுதியாக அமெரிக்காவின் சிக்காகோ பகுதியில் உள்ள ‘ஹே சந்தை ( Hay Market)’ என்னும் பகுதியில் ஒன்றிணைக்கப்பட்ட கூட்டத்தில் நடந்த காவல்துறை துப்பாக்கிச் சூட்டில் 4 தொழிலாளர்கள் படுகொலை செய்யப்பட்டதுடன், தொழிலாளர்களின் தலைவர்களை பொய் குற்றம் சாட்டி தூக்கில் ஏற்றி முதலாளிய வகுப்பு தனது வெறியை தீர்த்துக் கொண்டது. இந்த மாபெரும் ஈக நிகழ்வை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டதுதான் இன்று உலகம் முழுவதும் உழைக்கும் மக்கள் தங்கள் உரிமையை நாளாக கொண்டாடுகின்ற ‘மே தினம்’ என்று அழைக்கப்படும் ‘உலக உழைப்பாளர் தினம்’ ஆகும்.

இந்திய ஒன்றியத்தை பொருத்தவரை, முதல் மே தினமானது தமிழகத்தில், அன்றைய சென்னை மாகாணத்தில், சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் அவர்களின் முன் முயற்சியால் முதன் முதலில் கொண்டாடப்பட்டது.

இந்திய ஒன்றியத்தில், ஏற்கனவே உழைப்பாளர்களுக்கு மிகக்குறைந்த பாதுகாப்பை மட்டுமே தந்து வந்த உழைப்பாளர் சட்டம் தற்பொழுது ஆட்சி செய்து கொண்டிருக்கும் பாரதிய ஜனதா அரசின் முதலாளித்துவ சார்பின் காரணமாக கடுமையாக நீர்த்துப் போகச் செய்யப்பட்டிருக்கிறது. ஏற்கனவே இருந்த ஓய்வூதியத் திட்டங்கள், மருத்துவ காப்பீட்டு திட்டங்கள் அரசு கொள்கைகளாலும், முதலாளிய வர்க்கத்தாலும் திட்டமிட்டு சிதைக்கப்பட்டு இருக்கின்ற வேளையில், தொழிலாளர்களின் உரிமை நாளாக கருதப்படும் மே தினத்தின் சிறப்பை குலைக்கின்ற முயற்சியில் பாரதிய ஜனதா அரசு ஈடுபட்டது. கடந்த 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் திரிபுராவில் புதிதாக பதவியேற்ற பாஜகவின் மாநில அரசு, தெற்கு திரிபுராவில் பெலோனியாவின் கல்லூரி சதுக்கத்தில் நிறுவப்பட்டிருந்த லெனின் சிலையையும், திரிபுராவில், மாநிலத் தலைநகர் அகர்தலாவில் அருகில் இன்னொரு லெனின் சிலையையும் உடைத்தது. நவம்பர் 2018 ல் அம்மாநிலத்தில் மே தினத்திற்கான கட்டாய விடுமுறையை ரத்து செய்து, அதை விருப்ப விடுமுறையாக மாற்றியது. அதன் அடிப்படையில் மே தினத்தின் அன்று நிறுவனங்கள் கட்டாயம் தங்கள் வேலையாட்களுக்கு விடுப்பு அளிக்க தேவையில்லை என்கின்ற வகையில் மாற்றம் செய்யப்பட்டது.

தங்களுக்கு கிடைக்கும் வழிகளிலெல்லாம் தொழிலாளர் வர்க்கத்தை சுரண்டி, முதலாளிய வர்க்கத்திற்கு தரகு வேலை பார்க்கும் பாரதிய ஜனதா அரசு போன்ற பாசிச சக்திகளை எதிர்க்கும் பொருட்டு, தொழிலாளர் உரிமை தினமான மே தினத்தை கொண்டாடுவோம் என கேட்டுக் கொள்வதோடு உலகத் தொழிலாளர்கள் அனைவருக்கும் உழைப்பாளர் தின வாழ்த்துக்களை மே பதினேழு இயக்கம் தெரிவித்துக் கொள்கிறது.

மே பதினேழு இயக்கம்
9884864010, 9444327010

Leave a Reply