ஆக்ஸிஜன் உற்பத்தி என்ற பெயரில் ஸ்டெர்லைட் ஆலையை திறக்கும் முயற்சி! ஸ்டெர்லைட் ஆலை எக்காரணத்திற்காகவும் மீண்டும் திறக்கப்படக் கூடாது!

ஆக்ஸிஜன் உற்பத்தி என்ற பெயரில் ஸ்டெர்லைட் ஆலையை திறக்கும் முயற்சி! ஸ்டெர்லைட் ஆலை எக்காரணத்திற்காகவும் மீண்டும் திறக்கப்படக் கூடாது! – மே பதினேழு இயக்கம்

கொரானா நோய்த்தொற்றின் இரண்டாம் அலை இந்தியாவில் தீவிரமடைய, அதனை எதிர்கொள்ள இந்திய அரசு எந்தவிதத்திலும் தயாராகத நிலையில், மருத்துவ வசதி கிடைக்காததாலும், உயிர் காக்கும் ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டாலும் வடஇந்தியாவில் மக்கள் அதிகளவில் உயிரிழந்து வருகின்றனர். இந்த சூழலை தனக்கு சாதகமாக்கிக்கொள்ள முயற்சிக்கும் வேதாந்தா நிறுவனம், மூடப்பட்ட தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை மூலம் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்து தர முன்வருவதாக மத்திய மாநில அரசுகளிடமும், நீதிமன்றத்திலும் முறையிட்டுள்ளது. விதிமுறை மீறல்கள் மற்றும் மக்கள் பாதுகாப்பு கருதி மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பதற்கான முயற்சியே இது. மக்கள் நலனில் அக்கறையில்லாத, அரசின் விதிமுறைகளை பின்பற்றாத ஸ்டெர்லைட் ஆலை எக்காரணம் கொண்டும் மீண்டும் திறக்கப்படக் கூடாது என்று மே பதினேழு இயக்கம் வலியுறுத்துகிறது.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு விதிமுறைகளை மீறி 2013’ல் கந்தக நச்சு வாயுவை வெளியிட்டு ஆயிரக்கணக்கானோர் பாதிப்படைய காரணமாக இருந்ததால் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையிலும், சுற்றுச்சூழல் மற்றும் மக்களின் பாதுகாப்பு கருதி தமிழ்நாடு அரசு பிறப்பித்த உத்தரவின் அடிப்படையிலும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடப்பட்டது. தற்போது பேசப்படும் ஆக்ஸிஜன் உற்பத்தி நிலையம் உட்பட உரிமம் இல்லாமல் பல கட்டுமானங்களை மேற்கொண்டதை சுட்டிக்காட்டி சென்னை உயர்நீதிமன்றமும் ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடப்படுவதை உறுதி செய்தது. வேதாந்தா நிறுவனம் பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதற்கு கூட டிசம்பர் 2020ல் உச்சநீதிமன்றம் தடைவிதித்துள்ளது. இந்த நிலையில், தற்போதைய ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டை காரணம் காட்டி ஆலை திறக்கும் முயற்சியை வேதாந்தா நிறுவனம் மேற்கொண்டுள்ளது.

தமிழ்நாட்டை பொருத்தளவில் ஆக்ஸிஜன் தேவை நாளொன்றுக்கு தற்போது 250 மெட்ரிக் டன் என்றளவில் உள்ளது. அதேவேளை, 1167 மெட்ரிக் டன் ஆக்சிஜனை சேமித்து வைக்கும் வசதியும், நாள்தோறும் 400 டன் ஆக்சிஜனை உற்பத்தி செய்யும் திறனும் தமிழ்நாடு அரசிடம் உள்ளது. இதனால் தமிழ்நாட்டின் தேவை இரு மடங்காக உயர்ந்தாலும் கூட தமிழ்நாடு தன் தேவையை பூர்த்தி செய்துக்கொள்ள முடியும் என்று உயர்நீதிமன்றத்தில் தமிழநாடு அரசு தகவல் தெரிவித்துள்ளது. அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடக, ஆந்திரபிரதேசம் ஆகியவையும் தேவைக்கு அதிகமாக ஆக்ஸிஜன் உற்பத்தி செய்வதோடு, தெலுங்கானா, மராட்டிய மாநிலங்களுக்கு உதவியும் வருகின்றன.

உண்மையில், வடஇந்தியாவில் நிலவும் ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டிற்கு ஆக்ஸிஜன் உற்பத்தி என்பதை தாண்டி, ஆக்ஸிஜன் பல்வேறு இடங்களுக்கு கொண்டு சேர்க்கும் பிரச்சனை தான் முதன்மை காரணமாக உள்ளது. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை மூலம் உற்பத்தி செய்தாலும், அதனை வடஇந்திய மாநிலங்களுக்கு கொண்டு சேர்க்க ஒரு வாரத்திற்கு மேலாக எடுத்துக்கொள்ளும். இதற்கு மாற்றாக, ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யும் சிறிய ஆலைகளை தேவைப்படும் இடங்களில் ஆங்காங்கே நிறுவுவது தீர்வாக இருக்கும்.

சூழல் இவ்வாறிருக்க, ஆக்ஸிஜன் தட்டுப்பாடு நிலவுவது போலவும், ஸ்டெர்லைட் ஆலை உற்பத்தி செய்யும் ஆக்ஸிஜன் மூலம் தான் அந்த தட்டுப்பாட்டை நீக்க முடியும் என்பது போல பொய்யான தோற்றம் உருவாக்கப்படுகிறது. அதற்கேற்றாற்போல், மத்திய அரசும் அனுமதிக்கலாம் என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கிறது. தமிழ்நாடு அரசு அனுமதிக்க முடியாது என மறுத்தாலும், மக்களுக்கு முறையாக அறிவிக்காமல் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் தலைமையில் அவசர அவசரமாக மக்கள் கருத்துக்கேட்பு கூட்டம் நடத்துகிறது. இதிலும், ஸ்டெர்லைட் ஆலை சார்பாக வேறு ஊர்களிலிருந்து பணம் கொடுத்து அழைத்து வரப்பட்டவர்கள் பிரச்சனை செய்ய அனுமதித்தது. நீட் தேர்வை எதிர்ப்பது போல அனுமதித்த அதிமுக அரசு, மோடி அரசின் நெருங்கிய பெருநிறுவனமான வேதாந்தாவின் ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்படுவதை எதிர்ப்பது போல் எதிர்த்து அனுமதிக்க நடத்தப்படும் நாடகமே இது.

தூத்துக்குடி சுற்றுச்சூழல், மக்களின் வாழ்க்கை சூழல் போன்றவற்றில் ஸ்டெர்லைட் ஆலை ஏற்படுத்திய பாதிப்பு, மாசுக்கட்டுப்பட்டு வாரியம், தமிழ்நாடு அரசின் விதிமுறைகளை சிறிதும் மதிக்காத ஸ்டெர்லைட் ஆலையை பல்வேறு ஆய்வுகளுக்கு பிறகே நிரந்தமாக மூடப்பட்டுள்ளது. இது எதையும் கருத்தில்கொள்ளாத உச்சநீதிமன்றம், தற்போது மோடி அரசின் நிர்வாகத் திறமையின்மையினால் உண்டான நெருக்கடியை காரணம் காட்டி, மோடி அரசினை கேள்விக்குட்படுத்தாமல், ஸ்டெர்லைட் ஆலை திறப்பது குறித்து பேசுவது அதிர்ச்சியளிக்கிறது. ஸ்டெர்லைட் ஆலை வழக்கை 20 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து நடத்திவரும் மதிமுக தலைவர் ஐயா வைகோ அவர்களோடும், போராட்டத்தில் பங்கெடுத்த போராட்ட குழுவினர்களோடும், இதர மீனவர், வணிக, உழைப்பாளர், மாணவர், விவசாய சங்கத்தினர் ஆகியரோடும் தமிழ்நாடு அரசு கலந்தாலோசித்து உச்சநீதிமன்றத்தில் உரிய பதிலை முன்வைக்க வேண்டும் என மே பதினேழு இயக்கம் வலியுறுத்துகிறது.

ஸ்டெர்லைட் ஆலையை குறுக்குவழியில் திறக்க முயற்சிக்கும் வேதாந்தா நிறுவனத்தையும், அதற்கு மக்களின் உயிரை பணயம் வைத்து வழிவகை ஏற்படுத்திக்கொடுக்கும் பாஜகவின் மோடி அரசையும், அதற்கு துணைபோகும் அதிமுக அரசையும் மே பதினேழு இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது. தமிழ்நாட்டிற்கு சேர வேண்டிய ஆக்சிஜனை மோடி அரசு வேறு மாநிலங்களுக்கு திருப்பி அனுப்புவதை தடுத்தி நிறுத்தி, தமிழ்நாட்டிற்கு தேவையான கையிருப்பை உறுதி செய்ய வேண்டும் எனவும், மருத்துவ கல்லூரி மற்றும் மாவட்ட மருத்துவமனைகள் அனைத்திலும் ஆக்சிஜனை உற்பத்தி செய்துகொள்ளும் சிறிய வகை ஆலைகளை உடனடியாக நிறுவ வேண்டும் எனவும், எந்த காரணத்திற்காகவும் ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்படாது என்பதை உறுதி செய்ய வேண்டுமெனவும் மே பதினேழு இயக்கம் வலியுறுத்துகிறது.

மே பதினேழு இயக்கம்
9884864010 | 9444327010

Leave a Reply