புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் 57 வது வீரவணக்க நாள்!

புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் 57 வது வீரவணக்க நாள்!

நமத டாஇந் நாடு – என்றும்
நாமிந் நாட்டின் வேந்தர்
சமம்இந் நாட்டு மக்கள் – என்றே
தாக்கடா வெற்றி முரசை!

தமிழன்னைக்கு தாகம் எடுக்கும் போதெல்லாம் அவள் அள்ளிப் பருகுவது பாவேந்தர் பாரதிதாசன் அளித்துச் சென்ற கவிதைகளாகத்தான் இருக்கும் என்று சொன்னால் அது மிகையாகாது. அத்தகைய பெரும் கவிதைக் கடலை தமிழ் மக்களுக்காக அர்ப்பணித்துச் சென்றவர் புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள்.

தமிழ்நாடு இந்திய ஆதிக்கத்திலிருந்து விடுபட வேண்டும் என்பது தொடங்கி, இந்திய ஒன்றியத்தின் ஏகாதிபத்திய ஆட்சியால் தமிழர்களும், தமிழ் நாட்டின் இறையாண்மையும் எவ்வாறெல்லாம் பாதிக்கப்படுகிறன என்பது வரை கவிதைகளாகவும், கட்டுரைகளாகவும் எழுதி தமிழர்களுக்கு தன்மான உணர்ச்சியை ஊட்டியவர்தான் பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள். இன்றளவும் அரசியல் மேடைகளில் அதிக அளவிற்கு எடுத்துக்காட்டாக கூறப்படும் தமிழ் கவிதைகள் பெரும்பாலும் பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள் இயற்றியவை தான்.

இந்தி-சமஸ்கிருத திணிப்பு எதிர்ப்பு, கல்வி வேலைவாய்ப்பு மற்றும் வரி விதிப்பு பொருளாதாரங்கள் போன்றவற்றில் டெல்லி அரசின் ஆதிக்க எதிர்ப்பு, அடிப்படை சமூக பிரச்சனைகளான சாதி, மதம், பெண்ணடிமைத்தனம், குழந்தை திருமணம், கைம்பெண்களின் கையறுநிலை என்பதில் தொடங்கி தமிழ், தமிழர், தமிழர் கலாச்சார மாண்பு, திராவிடம், பொதுவுடமை என்பது வரையிலும் பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள் இயற்றாத கவிதைகளே இல்லை என்று சொல்லலாம்.

இன்றும் தமிழக அரசியலில் ‘தமிழ் வேறு திராவிடம் வேறு’ என்று கூறி குழப்பம் விளைவிக்கும் கருத்து குருடர்களுக்கு பதில் கூறும் விதமாய் “தமிழ்நாடு வேறு திராவிடநாடு வேறல்ல என்றும் இரண்டும் ஒன்றுதான். திராவிடத்தின் நீட்சியே தமிழகத்தின் மீட்சி” என்று அன்றே ‘சில கேள்விகட்கு விடை’ என்ற தலைப்பில் அமைந்த கவிதையில் பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள் பதில் கூறிவிட்டு சென்றுள்ளார்.

திராவிட நாடே தமிழ்நா டன்றோ
திருத்தமிழ்நாடே திராவிட மன்றோ!
திராவிடம் மீட்பவர் தமிழ்நாடு மீட்பவர்.
தமிழ்நாடு மீட்பவர் திராவிடம் மீட்பவர்.

தந்தை பெரியார் மீது பெரும் மதிப்பும், அசைக்க முடியாத நம்பிக்கையும் கொண்டிருந்த பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள் பெரியாரின் தொண்டு பற்றி பல்வேறு கவிதைகளை எழுதியுள்ளார். பெரியார் அவர்களை பற்றி குறிப்பிடும் போது “கொடுங்கோல் முறிக்கும் பெரியார் வாழ்க” என்று கூறுகிறார். மேலும் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் பெரியார் உட்பட பலரும் சிறை பட்டதை எண்ணி மனம் வருந்தி பாடுகின்ற பொழுது

“வருக! வருக! வண்டமிழ் நாட்டின்
பெருகுசீர்த் தந்தையே பெரியாரே வருக!”

என்று பெரியாருக்கு புகழ் மாலைச் சூட்டுகிறார் பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள்.

அன்றைய இந்திய ஒன்றியத்தின் டெல்லி காங்கிரஸ் அரசின் ஒவ்வொரு தமிழர் விரோத திட்டங்களையும் கடுமையாக சாடி இருக்கும் பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள், தன்னுடைய எல்லா பாடல்களிலும் இந்திய ஒன்றியமே தமிழர்களின் முதன்மை எதிரி என்பதை தெள்ளத்தெளிவாக பறைசாற்றி உள்ளது தமிழர்கள் புரிந்து கொள்ள வேண்டிய நுண்ணரசியல் ஆகும்.

தமிழர்களுக்காகவே தன் வாழ்நாளெல்லாம் கவிதை பாடி புரட்சிக் கருத்துகளை பதிவேற்றி சென்றுள்ள புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் நினைவு நாளான இன்று (21.04.1964) மே 17 இயக்கம் தனது வீரவணக்கத்தை செலுத்துகிறது.

மே 17 இயக்கம்
9884072010 

Leave a Reply