மாணவியிடம் அத்துமீறிய பேராசிரியர்; போராடிய மாணவர்கள் மீது நடவடிக்கை! சென்னைப் பல்கலைக்கழக நிர்வாகத்தை வன்மையாக கண்டிக்கின்றோம்!

மாணவியிடம் அத்துமீறிய பேராசிரியர்; போராடிய மாணவர்கள் மீது நடவடிக்கை! சென்னைப் பல்கலைக்கழக நிர்வாகத்தை வன்மையாக கண்டிக்கின்றோம்! – மே பதினேழு இயக்கம்

கடந்த ஜனவரியில் சென்னைப் பல்கலைக்கழக மெரினா விடுதியின் கட்டணக் கொள்ளைக்கு எதிராக தொல்லியல் துறை மாணவர்கள் போராடினர். இதன் காரணமாக துறைத்தலைவர் பேரா.சௌந்திரராஜன் திட்டமிட்டு 8 மாணவர்களை ஃபெயில் ஆக்கினார். மாணவர்கள் போராடியதால், வேறொரு பேராசிரியரை வைத்து திருத்தியதில் விடைத்தாள்களை மாணவர்கள் தேர்ச்சியடைந்திருப்பது தெரியவந்தது.

இதனை அதிகாரப்பூர்வமாக தகவல் பலகையில் அறிவிக்க சென்ற மாணவர்களை மிக மோசமான முறையில் நடத்தியதோடு, உடன் சென்ற மாணவியிடம் தகாத முறையில் அத்துமீறியுள்ளார் சௌந்திரராஜன். பல்கலைக்கழக நிர்வாகத்திடம் புகாரளித்தும் நடவடிக்கை எடுக்காமல் சௌந்திரராஜனுக்கு துணைபோனார் பல்கலைக்கழக பதிவாளர். இதனைக் கண்டித்து 6 நாட்களாக மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வந்தனர்.

பல்கலைக்கழக நிர்வாகமோ, போராடிய மாணவர்களை இடைநீக்கம் செய்து வளாகத்தை விட்டு வெளியேற்ற முயற்சித்துள்ளது. விசாரணைக் குழு பாதிக்கப்பட்ட மாணவியையே குற்றஞ்சாட்டியதால், மனமுடைந்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். இன்று (22-03-21) போராடிய மாணவர்களை காவல்துறையினரை விட்டு வலுக்கட்டாயமாக கைது செய்து அப்புறப்படுத்தியுள்ளனர். அப்போதும் ஆய்வாளர் சீதாராமன் மாணவர்களிடம் காட்டுமிராண்டித்தனமாக நடந்ததோடு, மாணவிகளிடம் அத்துமீறி நடந்துள்ளார்.

மாணவியிடம் அத்துமீறி நடந்துகொண்ட பேரா.சௌந்திரராஜன் மீது நடவடிக்கை எடுக்காத சென்னை பல்கலைக்கழக நிர்வாகத்தையும், மாணவர்களின் புகாருக்கு நடவடிக்கை எடுக்காததோடு, பாதிக்கப்பட்ட மாணவர்களையே குற்றவாளியாக்க முயற்சித்த பதிவாளர் அவர்களையும் மே பதினேழு இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது. மேலும், மாணவர்கள் மீது அடக்குமுறையை ஏவிய ஆய்வாளர் சீதாராமனின் செயல் மிகவும் கண்டிக்கத்தக்கது.

மாபெரும் ஆளுமைகளை உருவாக்கிய சென்னை பல்கலைக்கழகம், ஆளுநர் பன்வாரிலால் காலத்தில் மிக மோசமான நிலைக்கு சென்றுள்ளது. தமிழ்நாட்டின் உயர்கல்வியை சீரழிக்க வேண்டும், வணிகமயமாக்க வேண்டும் என்ற ஆர்எஸ்எஸ்-பாஜகவின் திட்டத்தினை செயல்படுத்தும் நோக்கத்திலேயே, சென்னை பல்கலைக்கழக நிர்வாகம் செயல்படுகிறது. மேலும், சென்னை பல்கலைக்கழகம் போன்ற கல்வி நிறுவனங்கள் சமூகநீதி விவாதங்கள் நடைபெறும் இடமாகவும், பயிலும் மாணவர்களிடையே சமூகநீதி கருத்துக்கள் தாக்கத்தை உண்டாக்கக்கூடியதாக இருப்பதால், அதனை தடுக்கும் முயற்சியே இது போன்ற சம்பவங்கள்.

தலைசிறந்த மாணவர்களை உருவாக்கி தந்த பேராசிரியர்களில் சிலர், தற்போது ஆளும் அரசிற்கு ஆதரவாக மாணவர்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடுவது வருந்தத்தகக்கது. பேரா.சௌந்திரராஜன் போன்ற நபர்கள் துறைத்தலைவராக இருந்து மாணவர்களை வழிநடத்த தகுதியற்றவர். இது போன்ற நபர்களை பல்கலைக்கழக நிர்வாகம் ஆதரிப்பது மிக மோசமான முன்மாதிரியாக இருக்கும். ஆகவே பேரா.சௌந்திரராஜன் மீதான பாலியல் ரீதியான குற்றச்சாட்டிற்கு நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென மே பதினேழு இயக்கம் வலியுறுத்துகிறது.

சுயமரியாதையுடன் போராடும் மாணவர்களின் பக்கம் மே பதினேழு இயக்கம் நிற்கிறது. மாணவர்களின் போராட்டத்தை மே பதினேழு இயக்கம் ஆதரிக்கிறது. மாணவர்கள் மீது அடக்குமுறையை ஏவிய துணைவேந்தர் மீது விசாரணை வைக்க வேண்டும் எனவும், மாணவர்களின் புகாருக்கு நடவடிக்கை எடுக்கத் தவறிய பதிவாளர் மீதும், பாதிக்கப்பட்டவர்களையே குற்றவாளியாக்கிய பேராசிரியர்கள் மீதும், மாணவர்கள் மீது காட்டுமிராண்டித்தனமாக நடந்துகொண்ட காவல் ஆய்வாளர் சீதாராமன் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசிற்கு கோரிக்கை விடுக்கிறோம்.

மே பதினேழு இயக்கம்
9884072010

Leave a Reply