தமிழீழ இனப்படுகொலையை கண்டித்து தீக்குளித்த ஈகியர்கள் கடலூர் நா.ஆனந்த் மற்றும் அரியலூர் ராஜசேகர் ஆகியோரின் நினைவுநாள்

தமிழீழ இனப்படுகொலையை கண்டித்து தீக்குளித்த ஈகியர்கள் கடலூர் நா.ஆனந்த் மற்றும் அரியலூர் ராஜசேகர் ஆகியோரின் நினைவுநாள் (17.03.2009)

தமிழீழ இனப்படுகொலை கண்முன்னே நடப்பது கண்டும், இனப்படுகொலைக்கான இந்திய ஒன்றியத்தின் ஆதரவு மற்றும் உலக நாடுகளின் ஆதரவை கண்டித்தும் தமிழகத்தில் மாவீரர் முத்துக்குமார் உட்பட பல்வேறு தமிழர்கள் தங்கள் இன்னுயிர் ஈந்த வரலாறு 2009 ஆம் ஆண்டு முற்பகுதி முழுவதும் நிரம்பி இருந்தது.

2009 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 15ஆம் தேதி, கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த திரு நாகலிங்கம் அவர்களின் மகன் திரு. ஆனந்த் (23 வயது) என்கிற இளைஞர் ஈழத்தில் நடந்த போரிலே கொல்லப்படும் தமிழீழத் தமிழர்களுக்காகவும், இந்தியாவின் இலங்கைக்கான ஆதரவை கண்டித்தும் தனக்குத் தானே தீ வைத்துக் கொண்டார். இரு தினங்கள் கழித்து தமிழீழ உறவுகளுக்காக தன்னுயிர் ஈந்து தழல் ஈகியரானார்.
அதே நாளில் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த திரு. இராஜசேகர் (24 வயது) என்கிற இளைஞர் தமிழீழத்தின் நிலைகண்டு தன் உடலுக்கு தீ வைத்துக் கொண்டார். அவரும் இரு தினங்கள் கழித்து உயிர் துறந்து தழல் ஈகியரானார். ஈகியர் ராஜசேகர் அவர்களுக்கு ஒரு குழந்தை இருந்தது என்பது இங்கே குறிப்பிடப்பட வேண்டிய ஒன்று.

தன் குடும்பம், குழந்தை, தாய் தந்தையர் அனைவரையும் துறந்து தமிழீழத்திற்காக ஈகியர்கள் ஆன தமிழர்கள் யாவரும் வெறும் உணர்ச்சி வேகத்தில் இத்தகைய முடிவுகளை எடுத்ததில்லை. தமிழீழம் என்பது தமிழர்களின் வரலாற்று, கலாச்சார மற்றும் மரபு சார்ந்த உரிமை என்பதை உணர்ந்து அத்தகைய உரிமை உலக வல்லாதிக்க அரசுகளாலும், சிங்கள இனவெறி அரசினாலும், இந்திய ஒன்றியத்தின் ஏகாதிபத்திய ஆசையினாலும் சிதைக்கப் படுவதைக் கண்டு தங்களால் தர முடிந்த அதிகபட்ச எதிர்ப்பை காட்டவும், அரசியல் சூழ்ச்சியினால் சிதறியும், சிதைந்தும், சிந்தை தெளிவின்றியும் இருந்த தமிழினத்தின் உரிமை உணர்ச்சியை தட்டி எழுப்பவும் தங்கள் இன்னுயிரை ஈகம் செய்தனர்.

இனப்படுகொலை நடந்து 10 ஆண்டுகள் கழித்து, இன்று தமிழீழத்தின் நிலையை செய்திகளில் படித்த பின்பும், தமிழீழத்தில் இருந்து அகதிகளாய் வந்தவர்களின் வாய்வழியே கேட்ட பின்பும், ஒரு இனப்படுகொலையை கண் முன்னே கண்ட பின்பும் தமிழர்களின் ஈகத்தினை “உணர்ச்சிவயப்பட்ட முடிவு” என்று கூறுகின்ற கயவர்களையும், தமிழீழத்தில் தமிழர்களின் மரபு உரிமையை மறுக்கின்றவர்களையும் தமிழின விரோதிகள் என்று பறைசாற்றுவது சாலச் சிறந்ததாக இருக்கும்.

இன்று பெரியாரிய, அம்பேத்கரிய மார்க்சிய மற்றும் தமிழ் தேசிய இயக்கங்களில் களம் காணும் தமிழர்கள் ஈழத்தின் வரலாற்று தேவையையும் , உரிமையையும் புரிந்து வைத்திருக்கும் காரணத்தினால்தான் இதுவரை ஈழ உரிமையை ஆதரிக்காத பல்வேறு தேர்தல் கட்சிகளும் கூட தமிழ் ஈழ இனப்படுகொலையை சர்வதேச அரங்கில் எடுத்துரைக்க ஆவன செய்யவும், இலங்கையின் மீது தற்சார்பான சர்வதேச விசாரணை மேற்கொள்ளவும் கோரிக்கைகள் வைக்க தொடங்கியுள்ளன.

இவ் ஈகியர்களின் நினைவு நாளில் தமிழீழத்திற்காக தன்னுயிர் நீத்த அத்துணை ஈகியர்களுக்கும் தமிழர்களின் சார்பாக மே பதினேழு இயக்கம் தனது வீரவணக்கத்தை செலுத்துகிறது.
வெல்லும் தமிழீழம்!

மே பதினேழு இயக்கம்
98840 72010

Leave a Reply