இந்தி மொழி போர் ஈகியர் தாளமுத்து அவர்களின் நினைவு நாளில் மே பதினேழு இயக்கத்தின் வீரவணக்கம்

இந்தி மொழி போர் ஈகியர் தாளமுத்து அவர்களின் நினைவு நாள் (13.மார்ச்.1939)

சென்னை மாகாணத்தின் முதல்வராக பதவி ஏற்றுக்கொண்ட ராஜாஜி, 1938 ஆம் ஆண்டு 6, 7, 8 வகுப்புகளில் இந்தி கட்டாய பாடம் என்கின்ற இந்துத்துவவாதிகளின் நெடுநாள் கனவை சட்டம் ஆக்கினார். இந்த அறிவிப்பைத் தொடர்ந்து தமிழ்நாடு எங்கும் பெரும் போராட்டங்கள் வெடித்தன. போராட்டங்களை தொடர்ந்து கைது செய்யப்பட்ட பலரும் சிறையில் சொல்லமுடியாத உடல் உபாதைகளுக்கும் பிரச்சனைகளுக்கும் உள்ளானார்கள். பலர் சிறையில் தங்கள் இன்னுயிரையும் தந்து ஈகியர் ஆயினர்.

அவ்வாறு உயிர் நீத்த தமிழ் பெருமக்களில் ஒருவர்தான் தாளமுத்து அவர்கள். இந்தி மொழிப் போரில் உயிர் நீத்த இரண்டாவது தமிழரும் அவர்தான். வெறும் 24 வயதே அடைந்திருந்த ஈகியர் தாளமுத்து அவர்கள் ராஜாஜியின் இந்தித் திணிப்பை எதிர்த்து சிறை கண்டு 1939 ஆம் ஆண்டு மார்ச் 13-ஆம் தேதி சிறைக் கொடுமைகள் தாளாமல் சிறையிலேயே உயிர் நீத்தார். அவருக்கு முன்னாள் 9ஆம் ஆண்டு ஜனவரி 15-ம் தேதி 20 வயதேயான நடராசன் அவர்கள் சிறையில் தனது உயிரை நீத்தார். இவர்களை “கூலிக்காக வைக்கப்பட்ட அடியாட்கள்” என்றும், “கல்வி அறிவற்றவர்கள்” என்றும் ராஜாஜி விமர்சித்தது மேலும் அனைவரையும் சினம் அடையச் செய்தது.

இவ்விரு ஈகியர்களின் உடலும் சென்னை மூலகொத்தளம் பகுதியில் அருகருகே அடக்கம் செய்யப்பட்டு இன்றும் இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் அடையாளமாக, இந்துத்துவ ஆதிக்க சக்திகளின் வெறியாட்டத்திற்கு ஒரு எடுத்துக்காட்டாக காலம் தாண்டி நின்று கொண்டிருக்கிறது. ‘தாளமுத்து – நடராசன்’ என்கின்ற பெயர்கள் இன்றளவும் இந்தி மொழியின் திணிப்பை எதிர்க்கும் தமிழர்களுக்கு ஒரு மாபெரும் எழுச்சி முகமாகவே இருக்கிறது என்றால் அது மிகையில்லை.

இப்படிப்பட்ட ஈகத்தை புரிந்து இந்தி திணிப்பு எதிர்ப்பை தமிழ்நாட்டின் அடையாளமாக மாற்றியவர்களில் ஒருவரான இந்தி எதிர்ப்பு போர் ஈகியர் ஐயா தாளமுத்து அவர்களின் நினைவு நாள் இன்று . அவரது நினைவு நாளில் மே பதினேழு இயக்கம் வீரவணக்கம் செலுத்துகிறது

Leave a Reply