நர்ஸிங், சித்தா, ஆயுர்வேதம், ஹோமியோபதி, யுனானி பயில நீட் நுழைவுத்தேர்வு! ஏழை எளிய மாணவர்கள் மருத்துவம் படிப்பதை தடுக்கும் செயல்!

நர்ஸிங், சித்தா, ஆயுர்வேதம், ஹோமியோபதி, யுனானி பயில நீட் நுழைவுத்தேர்வு! ஏழை எளிய மாணவர்கள் மருத்துவம் படிப்பதை தடுக்கும் செயல்! – மே பதினேழு இயக்கம்

எம்பிபிஎஸ் படிக்கவும், பல் மருத்துவ படிப்பிற்கும் ஏற்கனவே நீட் (NEET) என்னும் தேசிய நுழைவுத் தேர்வு உள்ள நிலையில், வரும் கல்வியாண்டு முதல் நர்ஸிங், சித்தா, ஆயுர்வேதம், ஹோமியோபதி, யுனானி உள்ளிட்ட அனைத்து மருத்துவம் சார்ந்த படிப்பிற்கும் நீட் நுழைவுத் தேர்வை கட்டாயமாக்கியுள்ளது மோடியின் பாஜக அரசு. இது ஏழை, எளிய குடும்பத்தை சேர்ந்த மாணவர்கள் மருத்துவம் பயில்வதை அடியோடு தடுத்தும் நிறுத்தும் செயலாகும். இந்திய ஒன்றிய பாஜக அரசின் இந்த செயலை மே பதினேழு இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது.

சமூகநீதியின் முன்னோடியான தமிழ்நாடு மாவட்டந்தோறும் அரசு மருத்துவ கல்லூரிகளையும், இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையில் மருத்துவக் கல்விக்கான இடங்களையும், தலைசிறந்த மருத்துவ கட்டமைப்பையும் கொண்டு இந்தியாவின் மருத்துவ தலைநகராக திகழ்கிறது. அனைத்து சமூகத்திலிருந்தும் மருத்துவர்கள் உருவாவதும், பெண்கள் மருத்துவ துறை சார்ந்த பணிகளில் முக்கிய பங்கு வகிப்பதும், ஏழை, எளிய, கிராமப்புற, அரசுப்பள்ளி மாணவர்கள் அதிகளவில் மருத்துவராவதும் இதன் மூலம் சாத்தியமாயிற்று. மேலும், கிராமப்புறங்களில் பணியாற்றுவதும் எளிய மக்களும் அணுக்கக்கூடிய வகையில் குறைந்த கட்டணத்தில் தரமான மருத்துவம் வழங்கும் மக்களுக்கான மருத்துவர்களையும் உருவாக்கியது.

இதனை சீரழிக்கும் விதமாகவும், மருத்துவ கல்வியை மாநில அரசின் கட்டுப்பாட்டிலிருந்து முற்றிலும் விலக்கி ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் வைப்பதும், அதன் மூலம் மருத்துவக்கல்வியை முற்றிலும் தனியார்மயமாக்கும் வேலையையும் மோடி அரசு செய்து வருகிறது. பணம் கொழிக்கும் மருத்துவ கல்வியை வியாபாரமாக்கும் முயற்சியாகவே, உயர்சாதி, பணக்காரர்கள் மட்டுமே பயிலும் வகையில் நீட் (NEET) என்னும் நுழைவுத்தேர்வு புகுத்தப்பட்டது. இதன்மூலம் இலட்சக்கணக்கில் பணம் செலவு செய்து பயிற்சி மையங்களில் ஓராண்டு பயிலும் மாணவர்கள் மட்டும் மருத்துவராகும் சூழல் உண்டானது. இதன் காரணமாகவே, பன்னிரெண்டாம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற தங்கை அனிதா போன்ற மாணவர்கள் தகுதி இருந்தும் மருத்துவ படிப்பு மறுக்கப்பட்டது நம் கண் முன்னால் நடந்தேறியது.

நுழைவுத்தேர்வு மூலம் மருத்துவ கல்வியை வணிகமயமாக்கும் நோக்கம் இருந்தாலும், இன்னொரு பக்கம் மருத்துவம் போன்ற உயர் படிப்புகளை உயர்சாதியினர் மட்டுமே படிக்க வேண்டும் என்ற மனுதர்மத்தை நிலைநாட்டும் செயலாகும். சூத்திரர்கள் கல்வி கற்க கூடாது என்று மனுதர்மம் கூறுவதை நடைமுறைப்படுத்தவே புதிய கல்விக் கொள்கை கொண்டுவரப்படுகிறது. SC/ST, OBC பிரிவினருக்கு இடஓதுக்கீட்டை நசுக்கி வரும் அதே வேளையில், உயர்சாதி ஏழைகள் என்ற பெயரில் உயர்சாதி பார்ப்பனர்கள் பலனடையும் வகையில் பொருளாதார அடிப்படையிலான 10% இடஒதுக்கீடு கொண்டுவந்தது மோடி அரசு. அதன் தொடர்ச்சியாக தற்போது நர்ஸிங், சித்தா, ஆயுர்வேதம், ஹோமியோபதி, யுனானி உள்ளிட்ட மருத்துவம் சார்ந்த அனைத்து படிப்புகளும் ஏழை, எளிய, கிராமப்புற மாணவர்களுக்கு மறுக்கப்பட்டு, உயர்சாதி பணக்காரர்கள் மட்டும் படிக்கும் வண்ணம் நீட் நுழைவுத் தேர்வை கட்டாயமாக்கியுள்ளது மோடியின் பாஜக அரசு.

ஏற்கனவே எம்பிபிஎஸ் மற்றும் பல் மருத்துவ படிப்பில் மட்டுமே உள்ள நீட் நுழைவுத்தேர்வு தமிழ்நாட்டு மருத்துவ கல்வியை சீரழித்து வரும் நிலையில், மருத்துவம் சார்ந்த அனைத்து படிப்பிற்கும் நீட் தேர்வு கட்டாயம் என்பது தமிழ்நாட்டின் சமூகநீதியை குழி தோண்டி புதைத்துவிடும். கல்வி என்பது ஒரு மாணவரை தகுதியுடையவனாக மாற்றுவதற்கு தானே தவிர, தகுதியுடையவன் மட்டும் கல்வி கற்க வேண்டும் என்பது மடைமைத்தனம். அனைத்து மாணவர்களும் விரும்பும் படிப்பை பயில்வதற்கான கல்வி கட்டமைப்பை உருவாக்கி, தரமான கல்வி வழங்குவதன் மூலம் அரசு தகுதியுடையவர்களை உருவாக்க வேண்டும். கல்லூரி இறுதித் தேர்வுகளில் அந்த மாணவர் தேர்ச்சி பெற்று அவர் அந்த துறையில் பணிபுரிய தகுதியுடையவரா என்பதை உறுதி செய்யட்டும். அரசு அதற்கான வாய்ப்புகளை வழங்கட்டும்.

அதன்படி, தற்போது அறிவிக்கப்பட்டுள்ள மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வு உட்பட ஏற்கனவே உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வுகளை உடனடியாக ரத்து செய்ய வேண்டுமென மே பதினேழு இயக்கம் வலியுறுத்துகிறது. நீட் தேர்வை ரத்து செய்யும் வகையிலான புதிய சட்டத்தை கொண்டு வர வேண்டும் எனவும், இனி எந்த ஒரு நுழைவுத்தேர்வும் புகுத்தப்படாது என்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும், மருத்துவம் போன்ற உயர் கல்விகள் உட்பட அனைத்து கல்வியையும் மாநில அரசின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் புதிதாக அமையவுள்ள தமிழ்நாடு அரசினை மே பதினேழு இயக்கம் கேட்டுக்கொள்கிறது.

மே பதினேழு இயக்கம்
9884072010 

Leave a Reply