மக்கள் இயக்க உரிமைகளுக்கான கூட்டமைப்பின் சார்பில் திருச்சியில் நடைபெற்ற மக்கள் இயக்கங்களின் உரிமை முழக்க மாநாடு

உரிமைகள் கோரும் அறவழி போராட்டங்களின் மீதான அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெறுவதற்கு அதிமுக-பாஜக அரசுகளை வலியுறுத்தி மக்கள் இயக்க உரிமைகளுக்கான கூட்டமைப்பின் சார்பில் திருச்சி உழவர் சந்தை திடலில் 06-03-2021 சனி அன்று நடைபெற்ற மக்கள் இயக்கங்களின் உரிமை முழக்க மாநாட்டில் தீர்மானங்கள் இயற்றப்பட்டது.

மக்கள் இயக்கங்களின் உரிமை முழக்க மாநாட்டுத் தீர்மானங்கள்

வீர வணக்கத் தீர்மானங்கள்:

1) தமிழ்மொழிகாப்பு போராட்டம், சாதி ஒழிப்புப் போராட்டம், மக்கள் வாழ்வுரிமைக்கான போராட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் தீரத்துடன் கலந்துகொண்டு அரச அடக்குமுறையால் உயிரிழந்த ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராளி தூத்துக்குடி ஸ்னோலின், நீட் எதிர்ப்பு போராட்டத்தில் உயிரிழந்த அனிதா போன்ற ஈகியர்களுக்கு மக்கள் இயக்கங்களின் உரிமைகளுக்கான கூட்டமைப்பு வீரவணக்கம் செலுத்துகிறது.

2) தமிழகத்திற்கு வெளியே இந்திய ஒன்றியத்தின் தலைநகர் டெல்லியில் 100 நாட்களுக்கும் மேலாக விவசாய விரோத சட்டங்களை எதிர்த்து தீரத்துடன் போராடிவரும் விவசாயிகளுக்கு ஆதரவாக அந்த போராட்டத்தில் கலந்துகொண்டு உயிர்நீத்த விவசாயிகள் 163 பேருக்கும் இந்த மாநாடு வீரவணக்கம் செலுத்துகிறது.

கொள்கைத் தீர்மானங்கள்

3) ஸ்டெர்லைட் எதிர்ப்பு, கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு, குடியுரிமை சட்ட எதிர்ப்பு, தமீழீழ இனப்படுகொலை எதிர்ப்பு, உயர்மின் அழுத்த கோபுர எதிர்ப்பு, கெயில் குழாய் எதிர்ப்பு, முல்லைப் பெரியாறு மீட்பு, எட்டுவழிச்சாலை எதிர்ப்பு, காவேரி உரிமை மீட்பு, நீட் எதிர்ப்பு, சாதி வன்கொடுமை எதிர்ப்பு, புதிய கல்விக்கொள்கை எதிர்ப்பு, தமிழ்நாடு நாள் கொண்டாட்டவிழா, எழுவர் விடுதலை, அத்திகடவு- அவினாசி கூட்டு குடிநீர் திட்ட ஆதரவு, நீயூட்ரினோ எதிர்ப்பு என பலவகைப்பட்ட சனநாயக மக்கள் எழுச்சி போராட்டங்களில் அமைதி வழியில், அறவழியில் போராடிய பொதுமக்களை, அரசியல்- சமூக போராளிகளை, மனித உரிமையாளர்களை பல்வேறு பொய் வழக்குகள், கொடும் சிறைகள், விசாரணைகள் உள்ளிட்ட பல்வேறு சனநாயக விரோத நடவடிக்கைகள் மூலம் முடக்க நினைக்கும் அதிமுக – பாஜகவை இம்மாநாடு வன்மையாக கண்டிக்கின்றது. உடனடியாக இவர்கள் மேல் போடப்பட்ட வழக்குகளை திரும்ப பெற வேண்டுமென்றும் இம்மாநாடு வலியுறுத்துகிறது.

4) தமிழகத்தில் பாசக அரசுக்கு ஏதிராக சனநாயக வழியில் தேர்தலில் வேலை செய்ய கூட்டமைப்பு உருவாக்கினார்கள் என்பதற்காக வேறு காரணங்களை சொல்லி தோழர் பாலன், கோ.சீனிவாசன், தோழர் அனுப்பூர் செல்வராஜ், தோழர் விவேக், தோழர் தருமபுரி சித்தானந்தம், தோழர் சுரேஷ் விஜயராசன் மற்றும் தோழர் கோவை மருத்துவர் தினேஷ் ஆகியோரை ஊபா சட்டத்தில் கைது செய்ததை இம்மாநாடு வன்மையாக கண்டிக்கின்றது. மேலும் கைதுசெய்யப்பட்டவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமென்றும் இம்மாநாடு வலியுறுத்துகிறது.

5) தமிழகத்திற்கு வெளியே பீமாகோரேகான் சதி வழக்கில் கைது செய்யப்பட்டு இரண்டுவருடங்களுக்கு மேலாக சிறையில் இருக்கும் வர வர ராவ், ஆனந்த் டெல்டும்டே, சுஜா பரத்வாஜ், கவுதம் நவ்லகா உள்ளிட்ட அறிவுசீவிகளையும், குடியுரிமை திருத்தச்சட்ட போராட்டத்தின் போது கலவரம் செய்ய தூண்டுதலாக இருந்ததாக போலியாக வழக்கு புனைந்து கைது செய்யப்பட்டிருக்கிற உமர் காலித் உள்ளிட்டவர்கள் மீதான வழக்கையும், சமீபத்தில் விவசாயிகள் போராட்டத்தை ஆதரித்த காரணத்திற்காக தேசதுரோக வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கும் இளம் சூழலியல் போராளி திசா ரவி உள்ளிட்ட அனைவர் கைதையும் இம்மாநாடு வன்மையாக கண்டிக்கின்றது, இவர்கள் மீதான வழக்கை உடனடியாக திரும்ப பெறுவதோடு இவர்கள் அனைவரையும் நிபந்தனையின்றி விடுதலை செய்யவேண்டுமென இம்மாநாடு வலியுறுத்துகிறது.

6) போராடுகின்ற உரிமை அமைதி வழியின் ஒன்று கூடும் உரிமை ஆகியன சர்வதேச மனித உரிமைச் சட்டங்களின் கீழ் மக்களின் அடிப்படை மனித உரிமைகளாக வரையறை செய்யப்பட்டு, அதை இந்திய அரசும் ஏற்றுக்கொண்டுள்ளது. ஆகவே இந்த உரிமைகளின் அடிப்படையில் போராடுவது என்பது நமது அடிப்படை உரிமை. இந்த உரிமையை நிலைநாட்ட தமிழக மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டுமாய் இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.

7) உரிமை போராட்டங்களில் பங்குகொண்டு அரசின் அடக்குமுறைக்கு உள்ளாகி, குறிப்பாக ஸ்டெர்லைட் போராட்டத்தில் உயிரிழந்த போராளிகளுக்கு தக்க இழப்பீடும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டுமென்று இம்மாநாடு வலியுறுத்துகிறது.

8) மக்களின் வாழ்வாதார போராட்டங்களில் பங்கெடுத்ததால் அரசினால் கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்று, வேலைவாய்ப்பை இழந்து, கடவு சீட்டு இழந்து நிற்கும் போராளிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கவேண்டுமென இம்மாநாடு வலியுறுத்துகிறது.

9) அரசியல் செயல்பாட்டாளர்களை ஒடுக்கும் வகையில் – மாநில அரசுகளுக்குள்ள சட்டம் ஒழுங்கு அதிகார வரம்புகளுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தேசிய புலனாய்வு (NIA) முகமையை இரத்து செய்ய வேண்டுமென்று இம்மாநாடு வலியுறுத்துகிறது.

10) அரசின் தவறுகளை சுட்டிக்காட்டுபவர்களை ஒடுக்குவதற்காக கொண்டு வரப்பட்டு நடைமுறையில் இருக்கும் கொடிய மக்கள் விரோத சட்டங்களான குற்றத் தடுப்புச் சட்டம் (UAPA), தேசத்துரோகச் சட்டம், தேசிய பாதுகாப்புச் சட்டம் மற்றும் குண்டர் சட்டம் போன்ற சட்டங்களை திரும்ப பெற வேண்டுமென்று இம்மாநாடு வலியுறுத்துகிறது.

மாநாட்டில் மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி ஆற்றிய உரை

Leave a Reply