போராட்டங்களை ஆதரித்த நீங்கள், போராடும் தோழர்களையும் ஆதரித்து மாநாட்டில் கைகோர்த்து நிற்க வாருங்கள்

தமிழ்நாட்டின் அரசியலை நிர்ணயிப்பவை மக்கள் போராட்டங்களே!போராடி நெருக்கடிக்குள்ளாகி நிற்கும் எண்ணற்ற தோழமைகள் ஒன்றிணையும் மாநாடு திருச்சியில் நடக்கிறது. போராட்டங்களை ஆதரித்த நீங்கள், போராடும் தோழர்களையும் ஆதரித்து மாநாட்டில் கைகோர்த்து நிற்க வாருங்கள்.நம் கோரிக்கைகளே நம் அரசியல்!

தமிழர் பண்பாட்டின் மீது தொடுக்கப்பட்ட போர் தான் ஜல்லிக்கட்டு தடை. அதுவே தமிழர்களை ஒன்றிணைத்து தடைக்கு எதிராக போராட வைத்தது. சென்னை மெரினா கடற்கரை துவங்கி, தமிழ்நாடு முழுக்க பல்வேறு இடங்களில் மக்கள் தன்னியல்பாக மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக போராடினர். ஜல்லிக்கட்டு போராட்ட களம் என்பது வெறும் போராட்டக்களமாக மட்டுமல்லாமல் அரசியல் பயிலும் களமாக மாறியது. இதனால் தான் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் அரசுகளுக்கு எதிராக மக்கள் வெல்ல முடிந்தது. அதனாலேயே போராடிய மக்கள் மீது அரசு அடக்குமுறையை ஏவியது. காவல்துறையே கலவரங்களை உண்டாக்கி மக்கள் மீது பழியை போட்டது. போராடிய மக்கள் மீதும், அவர்களுக்கு ஆதரவளித்த மக்கள் மீதும், உறுதுணையாக நின்ற அரசியல் இயக்கங்கள் மீதும் அரசு பொய் வழக்குகளை பதிந்துள்ளது

இந்திய அரசு தமிழின அழிப்பை நேரடியாக மேற்கொண்ட ஒரு செயல் தான், காவிரி ஆற்றுப்படுகையை பாலைவனமாக்கும் மீத்தேன்-ஹைட்ரோகார்பன் திட்டங்கள். இது தமிழ்நாட்டு மக்களுக்கு சொந்தமான வளங்களை வட இந்திய பார்ப்பன-பனியா கூட்டம் கொள்ளையடிக்க கொண்டு வந்ததோடு, தமிழ்நாட்டின் நெற்களஞ்சியத்தை அழிப்பதன் மூலம் தமிழ்நாடு தன்னிறைவு அடைவதை தடுத்து, இந்தி ஒன்றிய அரசின் தயவில் செயலாற்றும் வகையில் கொண்டுவரப்பட்டதாகும். வீரு கொண்ட விவசாய பெருங்குடி மக்கள் டெல்டா முழுவதும் போராட்டத்தை துவங்க, தமிழ்நாடு முழுக்க மக்கள் ஆதரவாக போராட துவங்கினர். இந்த போராட்டத்தையும் நசுக்க அரசு போராடியவர்கள் மீது எண்ணற்ற வழக்குகளை பதிந்தது. மக்கள் போராட்டத்தின் விளைவாக திட்டங்களை தற்காலிகமாக நிறுத்தி வைத்திருந்தாலும், வழக்குகள் மட்டும் விலக்கிக்கொள்ளப்படவில்லை. தமிழ்நாட்டிற்காக போராடிவர்கள் மீதான வழக்குகளை உடனடியாக திருப்பிப் பெற வேண்டும்.

தமிழீழ இனப்படுகொலைக்கு நீதி கேட்டு தமிழர்கள் ஒன்றிணைந்து போராடிய வேளையில், கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டத்தை துவங்க வைத்தது அன்றைய காங்கிரஸ்-திமுக அரசுகள். 1000 நாட்களை கடந்த மிக அமைதியான அறவழி போராட்டத்தை தமிழர்கள் நடத்தி காட்டினர் தலைமுறைகளை பாதித்திடும் அணு உலைக்கு எதிராக போராடிய கூடங்குளம் கிராம மக்கள் மீது உலகிலேயே மிக அதிக வழக்குகள் பதியப்பட்டன. வழக்குகளை திரும்பப் பெற உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியும், இன்றும் பல வழக்குகளை சந்தித்து வருகின்றனர். இன்று மேலும் மேலும் அணு உலைகள் வந்துகொண்டே உள்ளன. ஆட்சி மாறியும் மக்கள் மீதான அடக்குமுறை மட்டும் குறையவே இல்லை. இந்த வழக்குகள் காரணமாக வேலைவாய்ப்புக்காக அந்த மக்கள் வெளிநாடு செல்வது தடைபட்டுள்ளது. இந்த வழக்குகளை நீக்குவதே அம்மக்களுக்கு ஓரளவு நிம்மதியை தரும்.

இது போன்ற பொய் வழக்குகளை திரும்பப் பெற வலியுறுத்தி திருச்சி உழவர் திடலில் மார்ச் 6 சனிக்கிழமை அன்று மாலை 3 மணிக்கு மேல், மக்கள் இயக்கங்களின் உரிமை முழக்க மாநாடு நடைபெறுகிறது. மக்கள் இயக்க உரிமைகளுக்கான கூட்டமைப்பு சார்பாக நடைபெறும் இந்த மாநாட்டில், கட்சி, சாதி, மாத எல்லை கடந்து தமிழினத்தின் உரிமைக்காக போராடிய அனைவரும் திரள்வது மட்டுமல்ல, போராட்டங்களுக்கு ஆதரவளித்த வெகுமக்களும் குடும்பத்தினரோடு பங்கேற்க வேண்டுமென, மே பதினேழு இயக்கம் சார்பாக தோழமையுடன் அழைக்கிறோம்.

மே பதினேழு இயக்கம்
9884072010

Leave a Reply