தமிழ்நாட்டு அரசே! மாற்றுத்திறன் மாணவர்களுக்கு கல்வி பயிற்சியளிக்கும் சிறப்பு பயிற்றுநர்கள் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்று!

தமிழ்நாட்டு அரசே! மாற்றுத்திறன் மாணவர்களுக்கு கல்வி பயிற்சியளிக்கும் சிறப்பு பயிற்றுநர்கள் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்று! – மே பதினேழு இயக்கம்

தமிழ்நாட்டு பள்ளிகளில் பயிலும் மாற்றுத்திறன் மானவர்களிகளுக்கு கல்வி கற்பிக்கும் 1761 சிறப்பு பயிற்றுநர்கள் உட்பட 3000 பணியாளர்கள் பள்ளிக்கல்வித் துறையில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டத்தில் உள்ளடக்கிய கல்விக்கூறில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக எவ்விவத பணிப் பாதுக்காப்புமின்றி பணிபுரிந்து வருகின்றனர். ஊதிய உயர்வு கோரியும், பணி நிரந்தரம் வழங்க கோரியும், ஜனவரி 29 முதல் சென்னை பள்ளிக் கல்வி இயக்க வளாகத்தில் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களது 20 ஆண்டுகால மனிதநேய சேவையை கருத்தில் கொண்டு, இவர்களது கோரிக்கையை நிறைவேற்றிட தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும் என மே பதினேழு இயக்கம் வலியுறுத்துகிறது.

கடந்த 1998 முதல் மாற்றுத்திறன் மாணவர்களுக்கு கல்வி பயிற்றுவித்து வரும் பயிற்றுனர்கள், கடந்த 2018 முதல் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மூலம் மத்திய மாநில அரசுகளின் நிதியுதவியுடன் செயல்பட்டு வருகின்றனர். இவர்கள் மனவளர்ச்சி குறை, ஆட்டிசம், குறை பார்வை, காது கேளாமை, கற்றல் குறைபாடு உள்ளிட்ட பல்வேறு உடல்-மன ஊனத்துடன் தமிழ்நாடு முழுக்க பல்வேறு பள்ளிகளில் கல்வி பயின்று வரும் மாற்றுத்திறன் மாணவர்களுக்கு, தமிழ்நாடு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாற்றுத்திறன் மாணவர்களுக்கான சிறப்பு பயிற்றுநர்கள் கல்வி பயிற்றுவித்து வருகின்றனர். இந்த பயிற்றுநர்கள், இல்லம்சார் மாற்றுத்திறன் மாணவர்களின் இல்லங்களுக்கே சென்று பயிற்சியளித்து வருகின்றனர்.


இவ்வாறு கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக மாற்றுத்திறன் மாணவர்களுக்கு பயிற்சியளித்து, அவர்களை சமூகத்தில் குறிப்பிடத்தக்க இடத்திற்கு கொண்டு சென்று அவர்கள் வாழ்வியலை உயர்த்திய பெருமை இந்த பயிற்றுநர்களையே சாரும். இத்தகைய மனித நேயத்துடன் செயல்படும் இந்த பயிற்றுநர்கள் தற்போது வரை குறைந்த ஊதியத்தில் தற்காலிக பணியிலேயே நீடித்து வருகின்றனர். இவர்களுக்கான பணி பாதுகாப்பு ஏதும் இல்லை. மருத்துவ விடுப்பு, மகப்பேறு போன்ற முறையான விடுப்புகளோ, இபிஎஃப், இஎஸ்ஐ, ஊர்தி படி போன்ற ஊதிய பலன்களோ இவர்களுக்கு வழங்கப்படுவதில்லை. கிட்டத்தட்ட கொத்தடிமைகளைப் போல் கடந்த 20 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகின்றனர்.

கடந்த பத்தாண்டுகளாக பணிப்பாதுகாப்பு கோரி போராடியும், உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தும் தமிழ்நாடு அரசு இவர்களது கோரிக்கைக்கு செவிசாய்க்கவில்லை. இதனால் தற்போது சென்னை டிபிஐ வளாகத்தில் இன்று 13வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களின் போராட்டத்திற்கு மே பதினேழு இயக்கம் சார்பாக தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் இன்று (10-02-21) நேரில் சென்று ஆதரவளித்து அவர்களிடையே உரையாடினார். தற்போது போராட்டத்தை நசுக்கும் விதமாக, தண்ணீரை நிறுத்துவது, மின்சாரத்தை தடை செய்வது என அரசு அடக்குமுறையை அவிழ்த்துவிடுகிறது, அரசின் இந்த செயலை மே பதினேழு இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது.

மாற்றுத்திறன் மாணவர்களுக்கான பயிற்றுநர்களின் சேவை ஆசிரியர் பணிக்கும் மேலானது. இவர்களது மனிதநேய சேவையை அரசே சுரண்டுவது மனித உரிமை மீறல் ஆகும். போராடும் பயிற்றுநர்கள் மீது அடக்குமுறையை ஏவுவதை விட்டுவிட்டு, அவர்களின் கோரிக்கைக்கு அரசு செவிசாய்க்க வேண்டும். இவர்களுக்கு பணிப்பாதுகாப்பு வழங்கும் விதமாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும் எனவும், ஏனைய அரசு ஊழியர்களை போல ஊதிய உயர்வும், பணிக்கொடையும் வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசை மே பதினேழு இயக்கம் வலியுறுத்துகிறது.

மே பதினேழு இயக்கம்
9884072010
10/02/2021

Leave a Reply