போராடும் இராஜா முத்தையா மருத்துவ கல்லூரி மாணவர்கள் மீதான அடக்குமுறையை வன்மையாக கண்டிக்கின்றோம்!

போராடும் இராஜா முத்தையா மருத்துவ கல்லூரி மாணவர்கள் மீதான அடக்குமுறையை வன்மையாக கண்டிக்கின்றோம்! – மே பதினேழு இயக்கம்

கடலூர் மாவட்ட அரசு மருத்துவ கல்லூரியாக செயல்படும் இராஜா முத்தையா மருத்துவ கல்லூரி மற்றும் பல் மருத்துவ கல்லூரியின் கல்வி கட்டணங்களை, அரசு மருத்துவ கல்லூரிகளுக்கு இணையாக நிர்ணயிக்க கோரி பல்வேறு வகையில் முயற்சித்தும், அரசு நடவடிக்கை எடுக்காத நிலையில், மாணவர்கள் கடந்த டிசம்பர் 9 முதல் போராடி வருகின்றனர். அரசு நடவடிக்கை எடுக்காத நிலையில், ஜனவரி 20 முதல் காலவரையற்ற அறப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தற்போது போராடும் மாணவர்களை ஒடுக்கும் விதமாக, விடுதி கட்டணம் செலுத்தியிருந்தும் விடுதியில் தங்கியிருக்கும் மாணவர்களை கல்லூரி நிர்வாகம் வலுக்கட்டாயமாக வெளியேற்றுகின்றன. மேலும், மின்சாரத்தை தடை செய்தும், உணவுக்கூடத்தை மூடியும் தடை ஏற்படுத்தி வருகின்றன. இதனால் மாணவிகள் கடுமையான சிக்கலை சந்தித்து வருகின்றனர். போராடும் மாணவர்கள் மீது அடக்குமுறை ஏவும் கல்லூரி நிர்வாகத்தை வன்மையாக கண்டிக்கின்றோம்.

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் இராஜா முத்தையா மருத்துவ கல்லூரி மற்றும் பல் மருத்துவகல்லூரி, நிர்வாக முறைகேடுகள் காரணமாக கடந்த 2014 முதல் அரசு கட்டுப்பாட்டில் கடலூர் மாவட்ட அரசு மருத்துவ கல்லூரியாக செயல்பட்டு வருகிறது. 2014 முதல் 2021 வரை, ஒவ்வொரு ஆண்டும் அரசு நிதி ஒதுக்கி வருகிறது. இதுவரை ரூ.1281.87 கோடி ஒதுக்கியுள்ளது. ஆனால் கல்லூரி நிர்வாகமோ தனியார் கல்லூரி கட்டணத்தை விட அதிகமாக, அரசுக் கல்லூரிகட்டணத்தை விட ஏறத்தாழ 30 மடங்கு அதிகமாக கட்டணம் வசூலித்து வருகிறது. கொரானா ஊரடங்கில் கல்லூரி செயல்படாத போதும் அதே கட்டணத்தை கட்ட சொல்லி வற்புறுத்துகிறது. 2021 முதல் எம்ஜிஆர் பல்கலைக்கழகத்துடன் இணைக்கபடும் என்று அரசு கூறிய நிலையில் அதற்கான முயற்சிகள் ஏதும் முன்னெடுக்கப்படவில்லை.

அரசுக்கல்லூரி என்ற அடிப்படையில் மற்ற அரசு கல்லூரிகளை போன்ற கல்வி கட்டணம் தான் இருக்கும் என்று இராஜா முத்தையா மருத்துவ கல்லூரியில் சேர்ந்த மாணவர்கள், அங்கு தனியார் கல்லூரியை விட அதிகமாக கட்டணம் வசூலித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரசுப்பள்ளி மாணவர்களுக்கான 7.5% இடஒதுக்கீட்டில் மருத்துவம் படிக்கும் மாணவர்களுக்கான கல்விக்கட்டனத்தை எதிர்க்கட்சி ஏற்றுக்கொள்ளும் என்று கூறிய பிறகு, அரசே ஏற்றுக்கொள்ளும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் கூறியுள்ள நிலையில், கடலூர் அரசு மருத்துவ கல்லூரியாக செயல்படும் இராஜா முத்தையா மருத்துவ கல்லூரிக்கான கட்டணத்தை மட்டும் தனியார் கட்டணத்தை விட அதிகளவில் வசூலிக்க அனுமதிப்பது அரசின் நோக்கத்தை சந்தேகிக்க வைத்துள்ளது.

மேற்கூறிய காரணங்களை சுட்டிக்காட்டி அரசை கண்டித்தும், உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள கோரியும் சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் சார்பாக 10-01-2021 அன்று சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் நடைபெற்ற தொடர் முழக்கப் போராட்டத்தில் மே பதினேழு இயக்கம் பங்கேற்று போராடும் மாணவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்தது. அரசு எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளாமல், கல்லூரி நிர்வாகம் மாணவர்கள் மீது அடக்குமுறை ஏவுவதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பதே மாணவர்களின் போராட்டம் தீவிரமடைய காரணமாக அமைந்துள்ளது.

அரசு இனியும் தாமதிக்காமல், போராடும் மாணவர்களின் கோரிக்கைகளை கவனத்தில்கொள்ள வேண்டுமெனவும், கல்லூரி நிர்வாகம் மாணவர்கள் மீது ஏதும் அடக்குமுறையை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டுமெனவும் மே பதினேழு இயக்கம் வலியுறுத்துகிறது. இராஜா முத்தையா மருத்துவ கல்லூரி மற்றும் பல் மருத்துவ கல்லூரியை எம்ஜிஆர் பல்கலைக்கழகத்துடன் உடனடியாக இணைத்து, ஏனைய அரசு மருத்துவ கல்லூரிகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட கல்வி கட்டணத்தையே வசூலிக்க வேண்டுமென மே பதினேழு இயக்கம் வலியுறுத்துகிறது.

மே பதினேழு இயக்கம்
9884072010

Leave a Reply