நெய்வேலி NLCIL நிறுவனத்தில் ஐடிஐ-அப்ரண்டிஸ் பயிற்சி முடித்தவர்களுக்கு உடனடியாக வேலை வழங்கு!

நெய்வேலி NLCIL நிறுவனத்தில் ஐடிஐ-அப்ரண்டிஸ் பயிற்சி முடித்தவர்களுக்கு உடனடியாக வேலை வழங்கு! – மே பதினேழு இயக்கம்

இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான நெய்வேலி என்எல்சி (NLCIL) நிறுவனம் ஐடிஐ படித்த இளைஞர்களுக்கு அப்ரண்டிஸ் (Apprenticeship) என்னும் தொழில் பழகுநர் பயிற்சி அளித்து அதன் நிறுவனத்திலேயே பணிக்கு அமர்த்தி வந்தது. ஆனால் 1994-க்கு பிறகு காலிப்பணியிடங்களை நிரப்பாமல், அப்ரண்டிஸ் பயிற்சி முடித்தவர்களை வேலைக்கு எடுத்துக்கொள்வதை என்எல்சி நிறுவனம் நிறுத்திவிட்டது. அதேவேளையில் ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்களை நியமித்து வருகிறது. இதனால் 1994 முதல் பயிற்சி முடித்து 24 ஆண்டுகளுக்கு மேலாக வேலைக்காக காத்திருக்கும் 8000-த்திற்கும் மேற்பட்டோரின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.

என்எல்சி நிறுவனம் வழங்கும் அப்ரண்டிஸ் பயிற்சி தனது பணிக்கான வடிவமைக்கப்பட்டது. இப்பயிற்சி முடித்து பெறப்படும் சான்றிதழை ஏனைய நிறுவனங்கள் அங்கீகரிப்பதில்லை. இதனால் என்எல்சியில் பயிற்சி பெற்றவர்கள் வேறு பணிகளுக்கு செல்ல இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட நிறுவனமே அப்ரண்டிஸ் தொழிலாளர்களை நியமித்துக்கொள்ளலாம் என்று மத்திய தொழில்முனைவோர் அமைச்சகம் 1961 அப்ரண்டிஸ் சட்டத்தை 2015ல் மாற்றியதன் அடிப்படையிலும், அமைச்சக்கங்கள் இடையிலான குழு, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை இயக்குநர்கள் ஆகியோர் கூடிய 2014 மத்திய அப்ரண்டிஸ் ஆணைய கூட்டத்தின் முடிவின்படியும் அப்ரண்டிஸ் பயிற்சி முடித்தவர்களுக்கு பணி வழங்க வேண்டும்.

மேலும், அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்களின் முன்னிலையில் போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் அப்ரண்டிஸ் பயிற்சி முடித்தவர்களுக்கு வேலை வழங்கப்பட வேண்டும். ஆனால் தொடர்ச்சியாக கடைநிலை தொழில்நுட்ப பணிகளுக்கு என்எல்சியில் அப்ரண்டிஸ் பயிற்சி முடித்து ஆண்டுகணக்கில் காத்திருப்பவர்களுக்கு வழங்காமல், ஒப்பந்த அடிப்படையில் பணி வழங்கி வருகிறது. இவ்வாறு பயிற்சி பெறாத வட இந்திய ஒப்பந்த தொழிலாளர்களை பணியில் ஈடுபடுத்துவதால் தான் சில மாதங்கள் முன்பு 17 பேர் இறக்க காரணமான அனல் மின் நிலைய கொதிகலன் வெடி விபத்து போன்றவை ஏற்படுகின்றன.

என்எல்சி நிறுவனம் நிலக்கரி எடுப்பதற்காக அப்பகுதியை சேர்ந்த பல கிராமங்களை சேர்ந்த மக்களின் நிலங்களை கையக்கப்படுத்திய அரசு, அம்மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் வேலைவாய்ப்பை வழங்காமல், அரசிற்கான நிதியை பெருக்க பங்குசந்தையில் வெளியிட்டுள்ளது. நிலம் கையகப்படுத்திய குடும்பத்தினருக்கு வேலை வழங்க வேண்டும் என கடந்த 2017ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

என்எல்சி நிர்வாகத்தின் இந்த அணுகுமுறை, மத்திய அரசின் நிதியை பெருக்குவதற்காக பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்கும் முடிவின்படி, பொதுத்துறை நிறுவனமான என்எல்சியை தனியார்மயமாக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக பார்க்கப்பட வேண்டியதாக உள்ளது. தனியார்மயமாக்குவதனால் இடஒதுக்கீடு மறுக்கப்படுகிறது. எனவே, இச்செயல் OBC (BC, MBC), SC/ST இட ஒதுக்கீட்டை மறுத்துவரும் மோடி அரசின் செயல்பாடுகளின் தொடர்ச்சியாகும். மேலும், இந்தியாவின் ஒட்டுமொத்த நிலக்கரி, மின்சார தொழிலை கைக்குள் வைத்திருக்கும் மோடியின் நண்பரான அதானியிடம் என்எல்சி நிறுவனத்தை கையளிக்கும் நடவடிக்கையின் ஒரு செயலோ என்று சந்தேகிக்கத்தை உண்டாக்குகிறது.

என்எல்சி நிர்வாகத்தின் இந்த செயலை கண்டித்து ஐடிஐ-அப்ரண்டிஸ் பயிற்சி முடித்தோர் 1994 முதல் தொடர்ந்து போராடி வருகின்றனர். தற்போது குடும்பத்தோடு காத்திருக்கும் போராட்டத்தை துவங்கியுள்ளனர். அவர்களின் போராட்டத்திற்கு மே பதினேழு இயக்கம் ஆதரவளிக்கிறது. பயிற்சி, அனுபவம் இல்லாத ஒப்பந்த பணியாளர்களை பணியமர்த்துவதை தவிர்த்து, அப்ரண்டிஸ் பயிற்சி முடித்தவர்களுக்கு, பயிற்சி மூப்பின் அடிப்படையிலும், இட ஒதுக்கீட்டின் அடிப்படையிலும் உடனடியாக பணி வழங்க வேண்டுமெனவும், என்எல்சி நிறுவனத்தை தனியார்மயமாக்கும் நடவடிக்கைகளை முற்றிலும் கைவிட வேண்டுமெனவும் மே பதினேழு இயக்கம் வலியுறுத்துகிறது.

மே பதினேழு இயக்கம்
9884072010 

Leave a Reply