உழவர்களின் போராட்டதிற்கு ஆதரவாக நாடு தழுவிய பொது வேலை நிறுத்தத்தில் மே பதினேழு இயக்கம் பங்கேற்கிறது!

உழவர்களின் போராட்டதிற்கு ஆதரவாக நாடு தழுவிய பொது வேலை நிறுத்தத்தில் மே பதினேழு இயக்கம் பங்கேற்கிறது!

இந்தியாவின் முதுகெலும்பு எனப்படும் வேளாண்மையை உழவர்களிடமிருந்து பிரித்து, அம்பானி, அதானி போன்ற கார்பரேட்களிடம் கையளிக்கும் விதமாக இந்தியா ஒன்றிய அரசு மூன்று வேளாண் சட்டங்களை கொண்டுவந்துள்ளது. இந்த உழவர் விரோத சட்டங்களை திரும்பப் பெறக்கோரி, டெல்லியை முற்றுகையிடும் போராட்டத்தை பஞ்சாப், ஹரியானா உழவர்கள் துவங்க, இந்தியா பாஜக அரசு அவர்களை டில்லிக்குள் நுழைய விடாமல் தடுத்து மிகக்கடுமையாக ஒடுக்கி வருகிறது. தற்போது டில்லியின் எல்லையில் முகாமிட்டு போராடி வரும் உழவர் சங்கங்கள், டிசம்பர் 8 அன்று பொது வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர். அதன்படி, மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப்பெறக் கோரி , உழவர்களின் போராட்டத்திற்கு ஆதரவளிக்கும் விதமாக நாளை (08-12-2020) நடைபெறும் பொது வேலை நிறுத்தத்தில் மே பதினேழு இயக்கமும் பங்கேற்கிறது.

உழவர்களின் கருப்பு சட்டங்கள் எனப்படும் இந்த வேளாண் சட்டங்கள் குறித்து மே பதினேழு இயக்கம் 2016 முதல் எச்சரித்து வருகிறது. இந்தியா கையெழுத்திட்டுள்ள உலக வர்த்தக கழகத்தின் ஒப்பந்தமே (WTO’s Trade Facilitation Agreement) இன்று உழவர்களுக்கு எதிரான வேளாண் சட்டங்களாக உருவெடுத்துள்ளன. இதனை எளிமையாக மக்களுக்கு புரியும் வகையும் வகையில் மூடப்படும் ரேசன் கடைகள் என்று மே பதினேழு இயக்கம் மக்களிடையே எடுத்து சென்றது. இது குறித்து அப்போதைய ஒன்றிய பொருளாதார அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களிடம் நேரடி விவாதத்திலும் பங்கெடுத்து, மே பதினேழு இயக்கத்தின் கேள்விகளுக்கு இன்றளவும் அமைச்சரால் பதிலளிக்க இயலவில்லை. மே பதினேழு இயக்கம் எச்சரித்ததன் வீரியத்தை வேளாண் சட்டங்களுக்கு எதிரான இன்றைய போராட்டத்தின் மூலம் நாம் அறிந்து கொள்ள இயலும்.

இந்தியா ஒன்றிய அரசின் உழவர் விரோத மூன்று வேளாண் சட்டங்கள் மசோதாவாக அறிமுகப்படுத்திய போதே, மே பதினேழு இயக்கம் மிகக்கடுமையாக எதிர்த்தது. இந்த மசோதாக்கள் சட்ட வடிவம் பெற்றால் வேளாண்மையை அம்பானி, அதானி போன்ற பெருநிறுவனங்கள் கட்டுப்படுத்தும் நிலைக்கு செல்லும் என்றும், உழவர்களை அந்த கார்பரேட் நிறுவங்களிடம் வேளாண் கூலிகளாக மாற்றிவிடும் ஆபத்தையும் விளக்கியிருந்தோம். அதன்படியே மோடி அரசு கார்பரேட் நிறுவனங்களுக்கு பயன்பெறும் வகையில் நிலச் சட்டங்கள் திருத்தம் உட்பட பல்வேறு சலுகைகளை, வசதிகளை உருவாக்கி கொடுத்துள்ளது. அதனை புரிந்துகொண்டே இன்று இந்த வேளாண் சட்டங்களை நீக்கும் வரை போராட்டத்தை நிறுத்தப்போவாதில்லை என்ற நிலைக்கு உழவர்கள் சென்றுள்ளனர்.

உழவர்களின் இந்த நியாயமான கோரிக்கைகளுக்கு ஆதரவளிக்க வேண்டியது நம் அனைவரின் கடமை. போராடும் உழவர்களின் ஒற்றைக் கோரிக்கையான மூன்று வேளாண் சட்டங்களையும் முழுமையாக திரும்பப் பெற வேண்டும் என்பதை மே பதினேழு இயக்கம் வலியுறுத்துகிறது. போராடும் உழவர்களின் சூழலை கருத்தில் கொண்டு, அவர்களை ஒடுக்குவதை கைவிட்டுவிட்டு பாஜக அரசு உழவர்களின் கோரிக்கைக்கு உடனடியாக செவிசாய்க்க வேண்டும். கார்பரேட் வேளாண்மையை ஊக்குவிக்கும் உலக வர்த்தக கழக ஒப்பந்தத்திலிருந்து வெளியேறுவதே நிரந்தர தீர்வு. உழவர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் வகையில், நடைபெறவிருக்கும் பொது வேலை நிறுத்தத்தில் முழு வீச்சோடு பங்கேற்போம்!

மே பதினேழு இயக்கம்
9884072010 

Leave a Reply