டிசம்பர் 6, பாபர் மசூதி இடிக்கப்பட்ட நாள்! பாசிசத்தை வீழ்த்த உறுதியேற்போம்!

டிசம்பர் 6, பாபர் மசூதி இடிக்கப்பட்ட நாள்! பாசிசத்தை வீழ்த்த உறுதியேற்போம்!

ஆர்எஸ்எஸ் மற்றும் அதன் துணை அமைப்புகளை சேர்ந்த காவித் தீவிரவாத கூட்டத்தினரால் 1992 டிசம்பர் 6 ம் நாள் அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டது. இந்த குற்றச்செயலில் ஈடுபட்டவர்களை இந்திய நீதித்துறை இதுவரை தண்டிக்கவில்லை. பாதிக்கப்பட்ட இசுலாமியர்களுக்கு நீதி வழங்க வேண்டிய நீதிமன்றமோ, இடிக்கப்பட்ட பாபர் மசூதி இருந்த இடத்தை, இந்துத்துவவாதிகளிடமே வழங்கியது. அதில் ராமனுக்கு கோவில் கட்டிக்கொள்ளவும் அனுமதித்து பாதிக்கப்பட்ட இசுலாமியர்களையே மேலும் வஞ்சித்தது.

இந்தியாவில் இசுலாமிய சிறுபான்மையினருக்கு நீதி கிடைக்காது என்பது மட்டுமல்ல, அவர்களை இந்தியா ஜனநாயகமே ஒடுக்கும் என்பதை பாபர் மசூதி இடிப்பு வழக்கில் நாம் காண முடிகிறது. இந்தியாவில் இசுலாமிய சிறுபான்மையினர் மூன்றாம் தர குடிமக்களாக நடத்தப்படுவதையும், அதனை இந்திய ஜனநாயகமும், நீதித்துறையும் அனுமதிப்பதை நம் கண்கூடாக காணமுடிகிறது. இதனை இந்தியாவின் அனைத்து சமூகமும் அமைதியாக கடந்து செல்வது என்பது ஜனநாயகத்தின் மிக ஆபத்தான போக்காகவும் பார்க்க முடிகிறது.

இந்தியாவின் ஜனநாயகம் சீர்கெட்டு, இந்துத்துவ தீவிரவாத கும்பலின் ஆட்சியில் பாசிசம் தலைவிரித்தாடுகிறது. இந்த பாசிசத்தின் ஒடுக்குமுறையை ஜனநாயக ரீதியாக எதிர்கொள்வது கூட இன்று சாத்தியமானதாக இல்லை. மதச்சார்பின்மை என்பது இன்றைய ஆட்சியில் வெறும் சொல்லாக மட்டுமே உள்ளது. ஜனநாயகத்தின் அனைத்து தூண்களும் சிதைவுற்ற நிலையில், பாசிசத்தின் பிடியிலிருந்து நம்மை காத்துக்கொள்ள வேண்டியதன் அவசியத்தை பாபர் மசூதி இடிப்பு வழக்கு நமக்கு உணர்த்துகிறது.

பாபர் மசூதி இடிக்கப்பட்ட இன்றைய நாளில், ஜனநாயக முற்போக்கு சக்திகள் அனைத்தும் இணைந்து பாசிசத்தினை எதிர்கொள்ள அணியமாவோம். இடிக்கப்பட்ட பாபர் மசூதி இருந்த இடத்தை மீண்டும் இசுலாமியர்களிடமே வழங்க வேண்டும் என்றும், பாபர் மசூதியை இடித்த இந்துத்துவ தீவிரவாத கும்பலை கடுமையாக தண்டிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கிறோம். ஜனநாயகம் வீழ்த்தப்பட்ட இன்றைய நாளில், பாசிசத்தை வீழ்த்த உறுதியேற்போம்!

மே பதினேழு இயக்கம்
9884072010

Leave a Reply