மோடி அரசே! தொழிலாளர்களின் வேலை நேரத்தை அதிகப்படுத்தும் ’தொழில் பாதுகாப்பு , சுகாதாரம் மற்றும் பணி நிலைமைகள் 2020’ என்ற சட்டத்தை உடனடியாக திரும்ப பெறு

மோடி அரசே! தொழிலாளர்களின் வேலை நேரத்தை அதிகப்படுத்தும் ’தொழில் பாதுகாப்பு , சுகாதாரம் மற்றும் பணி நிலைமைகள் 2020’ என்ற சட்டத்தை உடனடியாக திரும்ப பெறு – மே 17 இயக்கம்

உலகமெங்குமிருக்கிற தொழிலாளர்கள் இன்று பெற்றிருக்கிற குறைந்தபட்ச உரிமைகள் கூட பல்வேறு தொழிலாளர்களின் உயிர்களை கொடுத்து பெற்றதே. அதுபோலத்தான் இந்தியாவிலும்,தொழிலாளர்கள் நல உரிமைகள் யாவும் எளிதில் கிடைத்ததல்ல. அப்படிப்பட்ட உரிமைகள் அனைத்தையும் இந்திய அரசு பறிக்கின்ற வேலைகள் கடந்த முப்பதாண்டுகளாக தொடர்ச்சியாக நடந்துவருகிறது. அதில் உச்சம் தான் தற்போது ஆட்சியிலிருக்கிற மோடி அரசின் தொழிலாளர் விரோத நடவடிக்கைகள்.

அதாவது தொழிலாளர்களுக்கென்று இருந்த பல்வேறு சட்டங்களை நான்கு சட்டங்களாக மாற்றி நீர்த்துப்போகச் செய்ததாகட்டும், தொழிலாளர்களின் வருங்கால வைப்புநிதிக்கான வட்டியை தொடர்ந்து குறைப்பதாகட்டுமென்று சொல்லிக்கொண்டே போகலாம் அந்த வரிசையில் மிக மோசமாக தொழிலாளர் விரோத சட்டத்தை சத்தமேயில்லாமல் கொரோனா காலத்தில் நிறைவேற்றியிருக்கிறது இந்த மோடி அரசு.

‘தொழில் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் பணி நிலைமைகள் 2020’ என்ற இந்த சட்டத்தை கடந்த செப்டம்பர் மாதம் 19ஆம் தேதி அறிமுகப்படுத்தி, இரண்டு அவைகளிலும் எந்த விவாதமுமில்லாமல் நிறைவேற்றி செப்டம்பர் 29ஆம் தேதி அதை அரசின் அரசாணையிலும் அதிகாரபூர்வமாக வெளியிட்டுவிட்டது இந்த மோடி அரசு. இந்த சட்டத்தின் படி

1. தொழிலாளர்களின் வேலைநேரம் தற்போது இருக்கும் 8மணிநேரத்திலிருந்து 12மணி நேரமாக மாற்றப்படும்.

2. பெண்களும் இனி இரவு பணியில் ( Night Shift) வரவேண்டும்.

3. நிரந்தர/பணி உத்தரவாத தொழிலாளர் முறைகளை ஊக்குவிப்பதை தவிர்த்து, பணி நிரந்தரமில்லாத ஒப்பந்த தொழிலாளர்கள் முறையை ஊக்குவிக்கும் விதமாக அவர்களுக்கான பயணச்செலவு, பயிற்சி சான்றிதழ், அனுபவ சான்றிதழ் என பல்வேறு திருத்தங்கள் என முழுக்க முழுக்க தொழிலாளர் விரோத அம்சங்களை கொண்டதாகவே இந்த சட்டம் தற்போது நிறைவேற்றப்பட்டிருக்கிறது. ஆகவே தொழிலாளர்கள் போராடி பெற்ற உரிமைகளை குழிதோண்டி புதைக்கும் இந்த சட்டத்தை உடனடியாக மக்கள் விரோத மோடி அரசு திரும்பபெற்றுக்கொள்ளவேண்டும்.

மே 17 இயக்கம்
9884072010

Leave a Reply