சென்னை ஐஐடியில் பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதில் தொடர்ந்து மீறப்படும் இடஒதுக்கீடு நடைமுறை! சமூக நீதியை குழி தோண்டி புதைக்கும் பாஜக அரசின் செயல்! – மே பதினேழு இயக்கம்
இந்திய தொழில்நுட்பக் கழகம் சென்னை (Indian Institute of Technology Chennai [IIT]) கல்வி நிறுவனத்தில், பேராசிரியர், இணைப் பேராசிரியர் மற்றும் துணைப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதில் இடஒதுக்கீட்டு முறை முறையாக பின்பற்றாதது தகவல் உரிமை சட்டத்தின் கீழ் சமீபத்தில் பெறப்பட்ட தரவுகள் காட்டுகின்றன. பட்டியலினத்தவர்கள் (SC), பழங்குடியினர் (ST), BC-MBC மக்களான இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC) ஆகியோரை கொண்டு நிரப்பப்பட வேண்டிய இடங்களை முறையாக நிரப்பாமல், அவர்களுக்கான பணியிடங்களை பொதுப்பிரிவினரை கொண்டே முழுமையாக நிரப்பப்பட்டுள்ளது. சென்னை ஐஐடி நிர்வாகத்தின் இச்செயலை மே பதினேழு இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது.
பழங்குடியினருக்கான பேராசிரியர், இணைப் பேராசிரியர் மற்றும் துணைப் பேராசிரியர் பணியிடங்கள் முறையே 23-இல் 1 இடமும், 13-இல் 1 இடமும், 15-இல் 1 இடமும், அதுவே பட்டியலினத்தவர்களுக்கான பணியிடங்கள் முறையே 47-இல் 5 இடங்களும், 27-இல் 4 இடங்களும், 30-இல் 7 இடங்களும், BC-MBC பிரிவினருக்கான பணியிடங்கள் முறையே 84-இல் 29 இடங்களும், 49-இல் 19 இடங்களும், 53-இல் 18 இடங்களும் நிரப்பப்பட்டுள்ளன. அதாவது சராசரியாக பழங்குடியினருக்கனா மொத்த இடங்களில் வெறும் 6.7% இடங்களும், பட்டியலினத்தவர்களுக்கான மொத்த இடங்களில் 23.3% இடங்களும், BC-MBC பிரிவினருக்கான மொத்த இடங்களில் 33.9% இடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளன (இணைக்கப்பட்டுள்ள படத்தை பார்க்கவும்).
இப்படியாக SC/ST, BC, MBC மக்கள் வஞ்சிக்கப்படும் போது, பொதுப்பிரிவினரின் பேராசிரியர் பணிக்கான 154 பணியிடங்களை 273 பேரை கொண்டும், இணைப் பேராசிரியர் பணிக்கான 90 பணியிடங்களை 156 பேரை கொண்டும், துணைப் பேராசிரியர் பணிக்கான 98 பணியிடங்களை 170 பேரை கொண்டும் நிரப்பியுள்ளனர். இது சராசரியாக 175% ஆகும். அதாவது, பொதுப்பிரிவினருக்கான இடங்களை முழுமையாக நிரப்பியதோடு, SC/ST, BC, MBC மக்களை கொண்டு நிரப்பப்பட வேண்டிய இடங்களை மிக குறைந்த அளவிலேயே இடஒதுக்கீடு முறையில் நிரப்பிவிட்டு, நிரப்பாமல் விட்ட இடங்களை உயர்சாதி பார்ப்பனர்களை கொண்டு பொதுப்பிரிவிலேயே நிரப்பியுள்ளனர். இது இதுஒதுக்கீட்டு நடைமுறையை அப்பட்டமாக மீறிய செயலாகும்.
சென்னை ஐஐடியில் பணியிடங்களுக்கான இடஒதுக்கீடு நடைமுறையை முறையாக பின்பாற்றமல் இருப்பது நீண்டகால குற்றச்சாட்டாகும். பணி நியமனங்களில் மட்டுமல்லாது, பணி உயர்விலும் SC/ST, BC, MBC மக்கள் ஓரங்கட்டப்பட்டுள்ளனர். சென்னை ஐஐடி என்பது உயர்சாதி பார்ப்பனர்களின் கூடாரமாக உள்ளது. இதனால் மாணவர்களிடம் சாதிய பாகுபாடுகளும் காட்டப்படுகிறது. இதனால் தொடர்ந்து மர்மமான முறையில் மரணங்கள் நிகழ்வது வாடிக்கையாகிவிட்டது. சென்ற வருடம் பாத்திமா லத்தீப் என்னும் மாணவி தனது மரணத்திற்கு காரணமாக பேராசிரியர் சுதர்சன பத்மநாபன் என்பவரை அவர் குறிப்பிட்டுள்ளார். அதே போல், சைவம், அசைவம் என தனித்தனியாக தீண்டாமையை கடைபிடிக்கும் வண்ணம் உணவருந்தும் அறை அமைக்கப்பட்டதும் சர்ச்சைக்குள்ளானது.
சென்னை ஐஐடியில் இத்தகைய பாகுபாடு ஏற்பட இடஒதுக்கீடு மீதான இந்திய ஒன்றிய அரசின் அணுகுமுறை மிக முக்கிய காரணமாக உள்ளது. சென்னை ஐஐடி மட்டுமல்லாது இந்தியா முழுவதும் உள்ள அனைத்து ஐஐடி நிறுவனங்களிலும், மத்திய அரசின் அலுவலகங்கள் அனைத்திலும் இடஒதுக்கீடு நடைமுறை முறையாக பின்பற்றப்படுவதில்லை. மோடியின் 6 ஆண்டு கால ஆட்சியில் இது மோசமடைந்துள்ளது. இதற்கு, உயர்சாதி பார்ப்பனர்கள் பயனடையும் வகையில் பொருளாதார அடிப்படையிலான 10% இடஒதுக்கீட்டை கேட்காமலே கொண்டுவந்து உடனடியாக நடைமுறைப்படுத்தியதும், தமிழ்நாட்டின் 69% இடஒதுக்கீட்டிற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வாதாடுவதும் சான்றாக உள்ளது. வங்கிகள் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்கள் அனைத்திலும் இதே நிலையை தான் மத்திய அரசு ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் தொகை கூடுவதற்கு ஏற்ப கல்விக்கூடங்களை அதிகப்படுத்த வேண்டியதன் அவசியத்தை இந்திய ஒன்றிய அரசு உணர்ந்துகொள்ளவில்லை. 1951 முதல் 1961 வரை 5 ஐஐடிக்களும், 1994 மற்றும் 2001-இல் தலா ஒன்றும், 2008 முதல் 2012 வரை 9 ஐஐடிக்களும், 2015-2016 காலகட்டத்தில் 8 ஐஐடிக்களும் உருவாக்கப்பட்டுள்ளன. மக்கள் தொகை பெருக்கம், மக்களின் வளர்ச்சி போக்கு ஆகியவற்றை கணக்கிடும் போது இது போன்று நூற்றுக்கணக்கான நிறுவனங்கள் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும். குறைந்த நிறுவங்களில் அதிக மாணவர்கள் முயற்சிக்க நுழைவுத்தேர்வு முறையை கொண்டு வந்து, இன்று அதற்காகவே 6ம் முதல் மாணவர்களை தயார்படுத்தும் வணிக முறையாகவே மாறிவிட்டது. அதே போன்ற சூழலை தான் தற்போது நீட் தேர்வு முறை மூலம் மருத்துவ கல்வியில் ஏற்படுத்துகிறது மோடி அரசு.
கல்வி, வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு முறையின் பலனை SC/ST, BC, MBC மக்கள் பெறுவதை தடுக்கவும், உயர்சாதி பார்ப்பனர்கள் பெருமளவில் பயனடைவதற்கும் பாஜகவின் மோடி அரசு செயல்படுகிறது. இது, சூத்திரர்கள் கல்வி பெறுவதை, செல்வம் சேர்ப்பதை மறுக்கும், சாதி அடிப்படையிலான பாகுபாட்டை நியாயப்படுத்தும், பெண்களை இழிவாக பேசும் மநு சாஸ்திரத்தின் அடிப்படையிலான இந்துத்துவ ஆட்சிமுறையை நடைமுறைப்படுத்தும் செயலாகவே பார்க்கப்பட வேண்டும். இடஒதுக்கீட்டின் நோக்கத்தை சிதைக்கும் வகையில் கல்வியை வணிகமயமாக்குவதையும், இடஒதுக்கீட்டை தடுக்கும் வகையில் பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்குவதிலும் மோடி அரசு முழு வேகத்தில் செயல்படுகிறது.
பாஜக அரசின் சமூகநீதிக்கு எதிரான போக்கை மே பதினேழு இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது. சென்னை ஐஐடி உட்பட இந்திய ஒன்றிய அரசின் அனைத்து கல்வி, வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு முறை முழுமையாக முறையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என மே பதினேழு இயக்கம் வலியுறுத்துகிறது. பெரியார் மண்ணான தமிழ்நாட்டில் சமூகநீதி நிலைபெறுவதை அனைத்து ஜனநாயக அமைப்புகள், கட்சிகள் உறுதி செய்ய வேண்டும். இதற்காக அணிதிரள்பவர்கள் உடன் மே பதினேழு இயக்கம் உறுதியாக நிற்கும் என்பதையும் கூறிக்கொள்கிறோம்.
மே பதினேழு இயக்கம்
9884072010