நெய்வேலி காவல்துறையின் சாத்தான்குளம் பாணி கொலை! காவல்துறையின் காட்டுமிராண்டித்தனத்தை தடுக்க தமிழ்நாடு அரசு முன்வரவேண்டும்!

நெய்வேலி காவல்துறையின் சாத்தான்குளம் பாணி கொலை! காவல்துறையின் காட்டுமிராண்டித்தனத்தை தடுக்க தமிழ்நாடு அரசு முன்வரவேண்டும்! – மே பதினேழு இயக்கம்

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள காடாம்புலியூர் செல்வமுருகன் என்பவர் கடந்த அக்டோபர் 28 அன்று ஒரு திருட்டு வழக்கில் சந்தேகத்தின் பேரில் விசாரணைக்காக நெய்வேலி காவல்நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார். அங்கு, அவரை உடல் முழுவதும் காயங்கள் ஏற்படும்படியாக மிக மோசமான முறையில் காவல் ஆய்வாளர் ஆறுமுகம் தாக்கியுள்ளார். பின்னர் அங்கிருந்து அருகிலிருந்த காட்டிற்குள் அழைத்து சென்றும், அதன்பின்னர் தனியார் விடுதி ஒன்றிற்கு அழைத்து சென்றும் மிகக் கடுமையாக தாக்கியுள்ளனர். அப்போது அவரது மனைவியிடம் லட்சங்களில் பணமும், 10 பவுன் நகையும் கொடுத்தால் வழக்கு பதிய மாட்டோம் என்று கூறியுள்ளனர்.

செல்வமுருகனை, மறுநாள் காவல்நிலையம் அழைத்து சென்று மீண்டும் தாக்கியுள்ளனர். பின்னர் நீதிமன்றத்தில் முன்னிறுத்தப்பட்டு விருத்தாசலம் கிளைச் சிறையில் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார். நடக்கமுடியாத நிலையில் இருந்த அவரை விருத்தாச்சலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு உடல்நிலையை கருத்தில் கொண்டு அவரை உள்நோயாளியாக அனுமதிக்க அவரது வீட்டார் கோரியும், மீண்டும் சிறையில் அடைத்துள்ளனர். அதன் பின்னர் நவம்பர் 4 அன்று அவர் மீண்டும் மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டுள்ளார். அங்கு செல்வமுருகனை அவரது வீட்டார் பிணமாகவே பார்க்க முடிந்துள்ளது.

செல்வமுருகன் மரணம் தொடர்பான சம்பவங்கள் அனைத்தும், அப்பா-மகன் இருவர் காவலர்களால் சித்திரவதை செய்து கொல்லப்பட்ட சாத்தான்குளம் சம்பவத்தையே நினைவூட்டுகின்றன. நெய்வேலி காவல்துறையினர் செல்வமுருகனை விசாரணைக்கென அழைத்து சென்று, கொடூரமாக தாக்கி, அவர் வீட்டாரிடம் பணம், நகை பறிக்க முயன்று, இறுதியில் கொலையும் செய்துள்ளனர். நெய்வேலி காவல்துறையின் இந்த காட்டுமிராண்டித்தனமான செயலை மே பதினேழு இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது.

நெய்வேலி காவல் ஆய்வாளர் ஆறுமுகம், இது போன்று சிறு சம்பவங்களில் சிக்குபவர்களை கடுமையாக தாக்கி வழக்கு பதியாமல் இருக்க பணம் பறித்து வந்துள்ளதாக அறிய முடிகிறது. அவரது முரட்டுத்தனமான அணுகுமுறையினால் பலர் பாதிப்படைந்துள்ளனர். இக்குற்ற சம்பத்தில் காவல் நிலைய காவலாளிகள் உட்பட, உடற்தகுதி சான்றிதழ் வழங்கிய மருத்துவர், நீதிமன்ற காவலில் அடைத்த நீதிபதி, சிகிச்சையளித்த விருத்தாசலம் மருத்துவர், சிறைத்துறை காவலர்கள் அனைவருமே ஈடுபட்டுள்ளனர். தமிழ்நாடு அரசின் மெத்தன போக்கே காவல்துறையினரின் குற்றங்கள் அதிகரிக்க காரணமாக அமைத்துள்ளது.

சாத்தான்குளம் சம்பவம் காவல்துறையினரின் குற்றங்கள் குறைய முன் உதாரணமாக இருக்கும் என்று எண்ணிய வேளையில், செய்த குற்றத்திலிருந்து தப்பிப்பதற்கு முன் உதாரணமாக காவல்துறையினரால் எடுக்கப்பட்டுள்ளது. இது, சிறையில் குற்றத்தின் தடையங்கள் சிக்கிவிடக்கூடாது என்று காட்டிற்கு கொண்டு செல்லப்பட்டு தாக்கியதும், பொதுமக்களுக்கு அச்சப்பட்டு தனியார் விடுதிக்கு அழைத்து சென்று தாக்கியதும், அந்த விடுதியில் வந்ததும், தங்கி தாக்கியதும், சென்றதும் தெரியாமல் அனைத்து தடையங்களும் அழிக்கப்பட்டுள்ளதன் மூலம் தெரிகிறது. சாத்தான்குளம் குற்றத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டது எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்பதையே நெய்வேலி சம்பவம் நமக்கு உணர்த்துகிறது.

தமிழ்நாடு அரசு உடனடியாக இதில் தலையிட்டு, நெய்வேலி ஆய்வாளர் உட்பட குற்றத்தில் ஈடுபட்ட அனைத்து காவல்துறையினரையும் பணிநீக்கம் செய்து கைது செய்ய வேண்டும். மேலும் செல்வமுருகன் மரணத்திற்கு காரணமாக இருந்த மருத்துவர்கள், சிறைத்துறையினர் மீது உடனடியாக துறைசார்ந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும், பாதிக்கப்பட்ட செல்வமுருகன் குடும்பத்திற்கு ஒரு கோடி உதவிப்பணமும், அரசுப்பணியும் வழங்க வேண்டும் எனவும் மே பதினேழு இயக்கம் வலியுறுத்துகிறது.

தமிழ்நாட்டில் காவல்துறை கஸ்டடி மரணங்கள் சமீபகாலமாக அதிகரித்த வண்ணம் உள்ளன. காவல்நிலைய மரணங்களில் 2018ம் ஆண்டு தமிழ்நாடு முதல் நிலையில் இருந்துள்ளதும், தொடர்ந்து முதன்மை மாநிலமாக இருந்து வருவதும் மனித உரிமைகளுக்கு மதிப்பு கொடுக்கும் தமிழ்நாட்டிற்கு இழுக்கை உண்டாக்கியுள்ளது. சாத்தான்குளம் குற்றத்திற்கு பிறகு தமிழ்நாட்டு காவல்துறையினருக்கு உளவியல், நடத்தை, மனிதஉரிமைகள் குறித்தான பயிற்சிகள் வழங்கி சீரமைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், காவல்துறையில் எவ்வித சீரமைப்பும் நடைபெறவில்லை என்பது காவல்துறையினரின் அணுகுமுறையில் எவ்வித மாற்றத்தையும் ஏற்படாதது உணர்த்துகிறது.

தமிழ்நாட்டு காவல்துறையினை கட்டுக்குள் வைக்க வேண்டிய பொறுப்பு தமிழ்நாடு அரசிற்கு உள்ளது என்பதை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் உணர வேண்டும். அரசியல் பிரச்சனைகளை கூட சட்டம் ஒழுங்கு பிரச்சனையாக அணுகக்கூடிய நிலையில் தான் தமிழ்நாட்டு காவல்துறை உள்ளது. சில நேரங்களில் அரசுடன் முரண்படக் கூடிய சூழலையும் காண்கிறோம். இது, தமிழ்நாடு காவல்துறை தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் தான் உள்ளதா என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது. தமிழ்நாடு காவல்துறை என்பது தமிழ்நாட்டு மக்களை பாதுகாக்கக்கூடிய தமிழ்நாடு அரசிற்கான சமூகக் கட்டமைப்பு என்பதை தமிழ்நாடு அரசு உணர வேண்டும்.

மனித உரிமைகளுக்கு மதிப்பளித்து சமூகத்தை முன்னேற்ற பாதையில் அழைத்து செல்வது மட்டுமே குற்றங்களை குறைக்க உதவும். தமிழ்நாட்டு காவல்துறையும் சமூக சீர்த்திருத்ததிற்கு உட்படுத்தப்பட வேண்டும் என மே பதினேழு இயக்கம் வலியுத்துகிறது. காவல்துறையினரின் குற்றங்களை தடுக்க, காவல்துறையில் சீர்திருத்தம் செய்ய ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும். அதில் காவல்துறையினரின் நீண்டகால கோரிக்கையான சங்கம் அமைத்துகொள்வது, முறைப்படுத்தப்பட்ட வேலை நேரம், பணிவிடுப்பு போன்றவற்றை பரிசீலனை செய்ய வேண்டுமென மே பதினேழு இயக்கம் கோரிக்கை விடுக்கிறது.

மே பதினேழு இயக்கம்
9884072010

Leave a Reply