ஓபிசி (OBC) மாணவர்களுக்கு 50% இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த மறுக்கும் தமிழர் விரோத பாஜக அரசை வன்மையாக கண்டிக்கிறோம்!

ஓபிசி (OBC) மாணவர்களுக்கு 50% இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த மறுக்கும் தமிழர் விரோத பாஜக அரசை வன்மையாக கண்டிக்கிறோம்! – மே பதினேழு இயக்கம்

மருத்துவ படிப்பில், பிற்படுத்தப்பட்ட (BC), மிகவும் பிற்படுத்தப்பட்ட (MBC) சமூகத்தினருக்கான 50% இடஒதுக்கீட்டை இந்த ஆண்டே நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற தமிழ்நாடு அரசின் கோரிக்கை மீதான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் இன்று (26-10-20), பாஜகவின் மோடி தலைமையிலான இந்திய ஒன்றிய அரசு இடஒதுக்கீடு வழங்க மறுத்ததன் அடிப்படையில், உச்சநீதிமன்றம் 50% இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த உத்தரவிட முடியாது என்று தீர்ப்பளித்துள்ளது. உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு அதிர்ச்சியளிக்கிறது. தமிழ்நாட்டின் பெரும்பான்மை சமூகத்தினர் பயன்பெறும் வகையிலான இந்த இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த மறுத்த மக்கள் தமிழர் விரோத இந்துத்துவ பாஜகவின் இந்திய ஒன்றிய அரசை மே பதினேழு இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது.

நீட் தேர்வு அடிப்படையில் மருத்துவப் படிப்பிற்கான இடங்கள் நிரப்ப துவங்கிய பிறகு, தமிழ்நாடு அரசின் மருத்துவ கல்லூரிகளிலிருந்து இந்திய தொகுப்பிற்கு வழங்கப்படும் இடங்களில் ஓபிசி பிரிவினருக்கான 50% இடஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் தமிழ்நாடு அரசு கோரியிருந்தது. பாஜகவின் மோடி அரசு அதனை மறுத்த நிலையில், தமிழர்களிடம் எழுந்த எதிர்ப்பின் காரணமாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு தொடுத்தது. உயர்நீதிமன்றத்திலும் மோடியின் பாஜக அரசு ஓபிசி பிரிவினருக்கு இந்த ஆண்டே இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த முடியாது என்று மறுத்த நிலையிலும், சென்னை உயர்நீதிமன்றம் அதனை நடைமுறைபடுத்த வேண்டும் என்று மோடி அரசிற்கு எதிராக தீர்ப்பளித்தது. உடனடியாக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த மோடி அரசு, ஓபிசி பிரிவினருக்கான 50% இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த தேவையில்லை என்று இன்று தீர்ப்பை வாங்கியுள்ளது.

50% இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த இயலாத நிலையில் குறைந்தபட்சம் நடைமுறையில் இருக்கும் 27% இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையையும் தமிழர் விரோத மோடியின் பாஜக அரசு புறந்தள்ளியுள்ளது. மேலும், மருத்துவ படிப்பில் ஓபிசி பிரிவினருக்கான இடஒதுக்கீட்டில் கொள்கை முடிவு எடுக்கும் வரை, இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த முடியாது என்று கூறியுள்ளதன் மூலம், அடுத்த ஆண்டிலாவது நடைமுறைப்படுத்தப்படும் என்ற எதிர்பார்ப்பை உடைத்துள்ளது. அதாவது மோடி அரசு கொள்கை முடிவு எடுக்கும் வரை ஓபிசி பிரிவினருக்கு 50% இடஒதுக்கீடு மட்டுமல்ல 27% இடஒதுக்கீடு கூட கிடைக்காது. அதனையே உச்சநீதிமன்றமும் வழிமொழிந்துள்ளது.

மோடியின் பாஜக அரசு பெற்றுள்ள இந்த தீர்ப்பு தமிழ்நாட்டின் பெரும்பான்மை சமூகத்தவர்களுக்கு இழைத்துள்ள துரோகம் ஆகும். இந்துக்களின் நலனுக்காக பாடுபடுவதாக சொல்லிக்கொள்ளும் பாஜக, ஓபிசி பிரிவில் பெரும்பான்மையாக இருக்கும் இந்துக்களுக்கு நியாயமாக சேர வேண்டிய 50% இடஒதுக்கீட்டை மறுத்துள்ளது. இல்லை, ஓபிசி பிரிவில் இடம்பெற்றுள்ள, தங்களை இந்துக்களாக கருதிக்கொள்பவர்களை பாரதிய ஜனதா கட்சி இந்துக்களாக கருதவில்லையா? இல்லை இச்சமூகத்தவர்கள் மருத்துவம் படித்து மருத்துவராக வருவதை பாஜக அரசு விரும்பவில்லையா?

இடஒதுக்கீடு என்பது இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள சமூகநீதி உரிமை. மக்களை பிறப்பின் அடிப்படையில் ஏற்றத்தாழ்வு மிக்க சமூகமாக பிரித்து, பார்ப்பனர்களுக்கு அடிமை சேவகம் செய்ய வலியுத்தும் வர்ணாசிரம, மனுதர்ம ஆட்சியை நிலைநாட்ட துடிக்கும் பாஜக அரசு, இந்திய அரசியலமைப்பு சட்டம் வழங்கும் இடஒதுக்கீடு உரிமையை மறுக்கிறது. இதனால், பாஜக அரசு சமூகநீதிக்கு எதிரான கட்சி என்பதை நிருப்பித்துள்ளது. சமஸ்கிருதம் படித்தவர்கள், அதாவது பார்ப்பனர்கள் மட்டுமே மருத்துவர்களாக முடியும் என்று பண்டைய முறையை மீண்டும் கொண்டுவரவே ஆர்எஸ்எஸ்-பாஜக முயற்சிக்கிறது. பட்டியலினத்தவர்கள் மட்டுமல்லாது, தங்களை ஆண்டைகளாக கருதிக்கொள்ளும் சாதி இந்துக்களும் மருத்துவம் படித்து உயர்ந்துவிடக் கூடாது என்பது தான் ஆர்எஸ்எஸ்-பாஜகவின் கொள்கையாகும்.

ஏற்கனவே அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு வழங்கும் தமிழ்நாடு அரசின் சட்ட மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்காமல் இந்திய ஒன்றிய அரசின் எடுபிடியாக செயல்படும் தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தடுத்து வைத்துள்ளார். இந்த நிலையில் ஓபிசி பிரிவினருக்கான இடஒதுக்கீடும் வழங்க இந்திய ஒன்றிய அரசு மறுத்துள்ளது, மோடியில் தலைமையிலான இந்திய ஒன்றிய அரசு தமிழர்களை வஞ்சிக்கும் செயலே.

இந்திய ஒன்றிய அரசின் செயல்களை தமிழ்நாடு அரசு கடுமையாக கண்டித்து, பாஜக அரசிற்கு ஒத்துழைக்க மறுக்க வேண்டும். நீட், இடஒதுக்கீடு போன்றவற்றில் பாஜக அரசு தமிழர்களுக்கு இழைக்கும் துரோகத்தை அனைத்து கட்சிகள், அமைப்புகளை ஒன்றுதிரட்டி எதிர்கொள்ள வேண்டும். 50% இடஒதுக்கீட்டை பெற்றிட தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனுதாக்கல் செய்ய வேண்டும்.

மே பதினேழு இயக்கம்
9884072010
26/10/2020

Leave a Reply