அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% மருத்துவ படிப்பில் இட ஒதுக்கீடு கொடுக்கும் சட்ட மசோதாவை நிறுத்தி வைத்திருக்கும் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித்தின் நடவடிக்கை சட்டவிரோதமானது

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% மருத்துவ படிப்பில் இட ஒதுக்கீடு கொடுக்கும் சட்ட மசோதாவை நிறுத்தி வைத்திருக்கும் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித்தின் நடவடிக்கை சட்டவிரோதமானது.

இந்தியாவிலேயே சிறந்த மருத்துவ கட்டமைப்பை வைத்திருக்கிற தமிழகத்தில் நீட் என்னும் கொலைகார தேர்வினை புகுத்தி தமிழக சுகாதார கட்டமைப்பைச் சீர்குலைக்கும் நடவடிக்கையை மத்திய அரசு எடுத்தது. அதாவது கிராமப்புற பள்ளி மாணவர்கள் இனிமேல் மருத்துவராக முடியாது என்ற நிலையை இந்த நீட்தேர்வு உருவாக்கிவிட்டது.

இதனை தமிழகத்தில் இருக்கிற அனைத்து ஜனநாயக சக்திகளும் எதிர்த்து போராடியதன் விளைவாக தமிழக அதிமுக அரசு கடந்த மார்ச் மாதம் பேராசிரியர் கலையரசன் அவர்கள் தலைமையில் இதற்கென ஒரு குழு அமைத்து விசாரணை நடத்தியது. அந்த குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% மருத்துவ படிப்பில் இட ஒதுக்கீடு வழங்கவேண்டும் என்பதை தமிழக அரசு சட்டமன்றத்தில் அமைச்சரவையை கூட்டி ஒருமனதாக ஒரு சட்டத்தை நிறைவேற்றியது. அந்த மசோதாவை ஆளுநருக்கும் அனுமதிக்காக அனுப்பி வைத்தது. ஆனால் இந்த சட்ட மசோதாவின் மீது எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்காமல் காலம் தாழ்த்தி கொண்டிருக்கிறார் ஆளுநர். இதனால் இந்த ஆண்டு நீட் தேர்வில் அரசு பள்ளி மாணவர்களுக்கு கிடைக்க வேண்டிய 300 மருத்துவ இடங்கள் கிடைக்காமல் போகும் அவல நிலை ஏற்பட்டிருக்கிறது.

ஏற்கனவே இப்படித்தான் அப்பாவி ஏழு தமிழர்களை விடுதலை செய்ய சட்டமன்றத்தைக் கூட்டி ஒருமனதாக நிறைவேற்றிய தீர்மானத்தின் மீது இதுவரை ஆளுநர் நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தி கொண்டிருக்கிறார். அதேபோல இப்போது தமிழக கிராமப்புற மாணவர்களின் மருத்துவர் கனவிலும் மண்ணை அள்ளிப் போட்டு வருகிறார் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்.

தமிழக சட்டமன்றம் அமைச்சரவையை கூட்டி ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் மீது நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்துவது சட்டவிரோதமாகும். ஆகவே உடனடியாக 7 தமிழர் விடுதலையை அறிவிப்பதோடு, அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீட்டை வழங்கும் சட்ட மசோதாவிற்கு உடனடியாக அனுமதி வழங்க வேண்டும். இல்லையென்றால் ஒட்டுமொத்த தமிழ் மக்களின் கோபத்திற்கு மத்திய மாநில அரசுகளும் ஆளுநரும் ஆளாக வேண்டிய சூழ்நிலை வரும்.

மே17 இயக்கம்
9884072010

Leave a Reply