திருச்சி மாவட்டம் இனாம் குளத்தூர் பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் உள்ள பெரியார் சிலை மீது காவி சாயம் பூசப்பட்டதை மே பதினேழு இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது

திருச்சி மாவட்டம் இனாம் குளத்தூர் பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் உள்ள பெரியார் சிலை மீது காவி சாயம் பூசப்பட்டதை மே பதினேழு இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது.

பெயரில் உள்ளது போல, சமத்துவத்தை விரும்பிய பெரியாரின் சிலையை அவமதித்ததன் மூலம், அவமரியாதை செய்தவர்கள் சமத்துவத்தை விரும்பாதவர்களாக தங்களை அடையாளப்படுத்திக்கொள்ள விரும்புகின்றனர் என்று புரிந்துகொள்ள முடிகிறது. மேலும் காவி நிறம் என்ற அசிங்கத்தை கொண்டு கறைபடுத்தியதன் மூலம், காவி என்பது சமத்துவத்திற்கு எதிரானது என்றும் கூற விளைகின்றனர்.

பாஜகவின் எச்.ராஜா, பெரியார் சிலை குறித்த பேசிய பின்பு தொடங்கிய பெரியார் சிலை மீதான அவமதிப்பு என்பது தற்போது வரை தொடர்கிறது. அப்போதே எச்.ராஜா மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால் இன்று இத்தகைய அத்துமீறல்கள் தொடர்ந்திருக்காது. ஒவ்வொரு முறை பெரியார் சிலை அவமதிக்கப்படும் போதும், சிலை அவமதிப்பு செய்தவர்கள் மீது மட்டுமல்லாது அதன் பின்னணியில் செயல்படுபவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மே பதினேழு இயக்கம் வலியுறுத்தி வருகிறது.

இந்த சம்பவத்திற்கு பின்னால் யார் இருப்பார்கள் என்று அரசுக்கும், உள்ளூர் காவல்துறையினருக்கும் தெரிந்த பின்பும் எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளாது இருப்பது, அதிமுக அரசு இத்தகைய செயலை ஊக்குவிக்க விரும்புகிறதோ என்ற கேள்வி எழுகிறது. சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட வேண்டிய காவல்துறையினரோ, இத்தகைய சமூக விரோத கும்பலை ஒடுக்காமல் விட்டுவைப்பதன் மூலம், கலவரத்தை தூண்ட நினைக்கும் காவி கும்பலுக்கு துணை போகிறதோ என்ற கேள்வியும் எழுகிறது.

பெரியாரின் வாரிசான அண்ணாவின் பெயரைக் கொண்ட கட்சியை வைத்திருக்கும் ஆளும் அண்ணா திமுக அரசு, சந்தர்ப்பவாத அரசியலுக்கு அண்ணாவையும், பெரியாரையும் விட்டுக்கொடுப்பது என்பது கொள்கையை விட்டுக்கொடுப்பது என்பதாகும். பெரியார் சிலைகள் தொடர்ந்து அவமதிக்கப்படுவதை தமிழ்ச் சமூகம் இனியும் அனுமதிக்காது. சட்டம் ஒழுங்கை நிலைநிறுத்த வேண்டிய அரசும் காவல்துறையும் இனியும் இச்செயலை கடந்து செல்லுமானால், மே பதினேழு இயக்கம் தமிழகத்தின் அனைத்து ஜனாநாயக அமைப்புகளை ஒன்றுதிரட்டி ஜனநாயக முறையில் எதிர்ப்பினை பதிவு செய்வோம்.

மே பதினேழு இயக்கம்
9884072010

Leave a Reply