நீட் எனும் நுழைவுத்தேர்வு குறித்து காங்கிரஸ் கட்சி தனது நிலைப்பாட்டை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்

- in கல்வி, நீட்

நீட் எனும் நுழைவுத்தேர்வு குறித்து காங்கிரஸ் கட்சி தனது நிலைப்பாட்டை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்- மே 17 இயக்கம்

’நீட்’ எனும் நுழைவுத்தேர்வை இரத்து செய்ய வேண்டுமென்று தமிழகமே போராடிக் கொண்டிருக்கும் போது, அதுகுறித்து கிஞ்சித்தும் கவலைப்படாமல் மத்தியில் ஆளும் பிஜேபி அரசு நேற்று நீட் தேர்வை நடத்தி மக்களை அவமானப்படுத்தியிருக்கிறது. இந்நிலையில் மத்திய எதிர்கட்சியான காங்கிரசோ பிஜேபியை ஆட்சி, அதிகாரம் என்றளவில் எதிர்க்கிற மாதிரி காட்டிக் கொள்கிறதே தவிர, பிஜேபியின் மக்கள் விரோத கொள்கையை நேரடியாக ஏனோ எதிர்ப்பதில்லை.

இதே நிலைப்பாடு தான் தற்போது நீட் எனும் கொலைகாரத்தேர்விலும் காங்கிரஸ் கட்சி நடந்து கொள்கிறது. காங்கிரஸ் கட்சியின் சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியின் உறுப்பினர் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் அவர்கள் நேற்று 14.09.20 சென்னை விமான நிலையத்தில் ஊடகங்களுக்கு கொடுத்த நேர்காணலில் நீட் தேர்வு வேண்டாமென்று சொல்லாமல் ’’நீட் தேர்வை இப்போது நடத்தியது சரியல்ல’’ என்று பேசுகிறார். அதேபோல இதற்கு முன் இதே விமான நிலையத்தில் பேசும்போது நீட் தேர்வு அவசியமென்று பேசிய காணொளியும் இருக்கிறது.

ஆக காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் வெளிப்படையாக நீட் தேர்வுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகிறார். அதேநேரத்தில் தமிழகத்தில் நீட் எதிர்ப்பு தெரிவிக்கும் கட்சிகளின் போராட்டத்திலும் காங்கிரஸ் இணைந்து கொள்கிறது. ஏன் இந்த இரட்டை நிலைப்பாடு. யாரை ஏமாற்ற இந்த இரட்டை சவாரி.

’நீட்’ தேர்வு இதுவரை தமிழகத்தில் 12 மாணவர்களின் உயிரை காவு வாங்கியிருக்கிறது. இறந்த உயிர்களை வைத்து ஓட்டுவேட்டை நடத்தலாமென்று கண் துடைப்பு நாடகத்தை எப்படி 2009இல் ஈழத்தமிழர் இன அழிப்பின்போது செய்தீர்களோ அதே போல செய்து விடலாமென்று நினைக்கிறீர்களா?

உங்களின் நோக்கத்தை புரிந்து கொண்டு தான் தமிழர்கள் இந்திய தேசிய கட்சிகளான பிஜேபியையும், காங்கிரசையும் நோட்டாவுக்கு கீழே வைத்திருக்கிறாரகள் என்பதை மறந்துவிட வேண்டாம். நீங்கள் போடும் நாடகத்தை நம்ப இது வடநாடுமல்ல; நாங்கள் இந்திக்காரர்களும் அல்ல என்பதை புரிந்துகொண்டு, நீட் விவாகாரத்தில் காங்கிரஸ் கட்சியின் நிலைபாடு என்ன என்பதை வெளிப்படையாக அறிவியுங்கள். இல்லையேல் பிஜேபியோடு சேர்த்து உங்கள் நாடகத்தையும் அம்பலப்படுத்துவோம்.

மே 17 இயக்கம்
9884072010

Leave a Reply