நீட் தேர்வால் தற்கொலைக்குத் தள்ளப்பட்ட அனிதாவின் மூன்றாம் ஆண்டு நினைவு நாள்

நீட் தேர்வால் தற்கொலைக்குத் தள்ளப்பட்ட அனிதாவின் மூன்றாம் ஆண்டு நினைவு நாள் – மே17 இயக்கம்

2017 செப்டம்பர் ஒன்றாம் தேதி இதே நாளில் தான் ஒரு மருத்துவர் ஆவதற்கு என்னென்ன தகுதிகள் வேண்டுமோ அவை அனைத்தையும் பெற்று பன்னிரண்டாம் வகுப்பு தேர்வில் 1176/1200 மதிப்பெண்கள் பெற்று முழுத் தகுதியோடு இருந்த ஒரு பெண்ணின் மருத்துவ கனவை பிஜேபி அரசு நீட் எனும் தேர்வு மூலம் நிர்மூலமாக்கியது. இதனை எதிர்த்து இந்தியாவின் உச்சபட்ச அதிகார மையம் வரை சென்று போராடி பார்த்தாள் அந்த சிறுமி.

அவளின் போராட்டத்தின் நியாயத்தை பேசவேண்டிய அதிகார மையம். ஒரு ஏழைப்பெண் எப்படி இவ்வளவு தூரம் வர முடியும் என்று எகத்தாளம் பேசியது ஏளனம் செய்தது. விளைவு தன் மருத்துவ கணவு தன் முன்னாலேயே அழிந்துப்போவதை காணமுடியாமல் தற்கொலை செய்து கொண்டால் அனிதா.

அனிதாவை தொடர்ந்து விழுப்புரம் பிரதீபா உள்ளிட்ட பல உயிர்கள் தமிழகத்தில் இந்த நீட் தேர்வால் போயிருக்கிறது.ஆனாலும் இதைப் பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல் மத்திய மாநில அரசுகள் இருக்கின்றன.

இந்த 2020- 2021 ஆம் ஆண்டிற்கான நீட் தேர்வு கொரோனா என்ற மிகக் கொடுமையான இந்த காலகட்டத்தில் மாணவர்களின் கடுமையான எதிர்ப்புகளை மீறி நடத்தியே தீருவோம் என்று மத்திய மாநில அரசுகள் இன்று தேர்வையும் நடத்தவிருக்கிறது. முந்தைய வருடங்களை விட இந்த வருடம் தமிழகத்திலிருந்து நீட் தேர்வு எழுதுவோரின் எண்ணிக்கை 13.9% குறைந்திருக்கிறது என்று புள்ளிவிவரங்கள் சொல்கிறது.

மருத்துவத்துறையில் இந்தியாவிலேயே சிறப்பான மாநிலமாக இருக்கும் தமிழ்நாட்டின் மருத்துவ கட்டமைப்பை எப்படியாவது உடைத்து விடவேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு மத்திய மாநில அரசுகள் வேலை செய்கிறது.

நம் எதிர்கால தலைமுறையின் சுகாதாரத்தை கணக்கில் கொண்டு நாம் ஒன்றிணைந்து இந்த நீட் என்னும் அரக்கனை எதிர்த்துப் போராடி வெற்றி பெற்று ஆக வேண்டும் என்பதுதான் அனிதாவிற்கு நாம் செலுத்தும் வீர வணக்கமாக இருக்க முடியும்.

வாருங்கள் தமிழர்களே! நீட் எனும் அரக்கனை எதிர்த்து ஒன்றிணைந்து போராடுவோம்.

மே17 இயக்கம்
9884072010

Leave a Reply