சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் நாள் (30-08-20) – மே பதினேழு இயக்கம் வேண்டுகோள்!

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் நாள் (30-08-20) – மே பதினேழு இயக்கம் வேண்டுகோள்!

தமிழீழ விடுதலைப் போராட்டம் துவங்கப்பட்ட நாள் முதல் தற்போது வரை, போராடுபவர்கள் கடத்தி செல்லப்பட்டு காணாமல் ஆக்கப்படுவது விடுதலைப் போராட்டத்தை நசுக்கும் ஒரு செயல்திட்டமாக இலங்கை அரசினால் செயல்படுத்தப்படுகிறது. இராணுவத்தினர் விசாரிப்பதற்கு அழைத்து சென்றும், அரசியல் காரணங்களால் கைது செய்யப்பட்டும், வெள்ளை வேன் கடத்தல் என சட்டத்திற்கு புறம்பாக தமிழர்களை கடத்தி சென்று இலங்கை அரசினால் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு, 60,000 முதல் 1 லட்சம் வரையிலான காணாமல் ஆக்கப்பட்டவர்களின் வழக்குகள் நிலுவையில் உள்ளன. அப்படியாக கடத்தி செல்லப்பட்ட பல்லாயிரக்கணக்கான தமிழர்களின் நிலை இன்று வரை என்ன என்று தெரியவில்லை.

ஐ.நா. மனித உரிமை ஆணையம் மூலமாக அழுத்தம் ஏற்பட்டு காணாமல் ஆக்கப்பட்டோர் குறித்த புகார்கள் மீது நடவடிக்கைகள் மேற்கொள்வதாக உறுதியளித்த பிறகும், இலங்கை அரசு ஆக்கப்பூர்வமாக எந்த ஒரு நடவடிக்கைகளும் எடுக்கவில்லை. இதற்காக அமைக்கப்பட்ட ஆணையங்களும் செயல்படாமல் உள்ளன. இதனால் 2017 பிப்ரவரியில், காணாமல் ஆக்கப்பட்டோரின் பெற்றோர்களால், குறிப்பாக பெண்களால், கிளிநொச்சியில் துவங்கி தமிழீழம் முழுவதும் போராட்டம் பரவ, 1000 நாட்களை கடந்தும் தொடர் போராட்டமாக நடைபெற்று வருகின்றன. இதில் 53 பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் நிலை அறியாமலே இறந்தும் போயுள்ளனர். இலங்கை சுதந்திர நாளை கரிநாளாக அனுசரித்து பல்வேறு நாட்களில் பல பேரணிகளை முன்னெடுத்துள்ளனர். கோத்தபாய ராஜபக்சே பதவியேற்ற பிறகு இவ்வாறு போராடுபவர்கள் மிரட்டப்படுவது வாடிக்கையாக உள்ளது. இந்நிலையில் இதனை சர்வதேச சமூகத்தின் கவனத்திற்கு எடுத்து செல்வது தமிழ் சமூகத்தின் கடமையாக உள்ளது.

போர் மற்றும் அரசியல் காரணங்களால் காணாமல் ஆக்கப்படும் மக்களின் மீட்பு நடவடிக்கைகள் சர்வதேச கவனம் பெற, ஆண்டு தோறும் ஆகஸ்ட் மாதம் 30ம் நாள், ஐ.நா.வின் சாவதேச காணாமல் ஆக்கப்பட்டோர் நாள் கடைபிடிக்கப்படுகிறது. இந்த ஆண்டு, தமிழீழத்தில் காணாமல் ஆக்கப்பட்டோர் குறித்து, இலங்கை அரசு ஐநா மனித உரிமை ஆணையத்தில் உறுதியளித்ததிற்கு மாறாக, நடவடிக்கை எடுக்காமல் இருப்பதை சர்வதேச சமூகத்தில் அம்பலப்படுத்தும் விதமாகவும், காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பத்திற்கு நீதி கேட்கவும் சமூக வலைத்தள பிரச்சாரம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, வரும் 30-08-2020 ஞாயிறு அன்று தமிழ்நாட்டு நேரப்படி காலை 9 மணி முதல், #Justice4DisappearedTamils என்ற ஹேஷ்டேக் கொண்டு ட்விட்டர் உள்ளிட்ட சமூகவலைத்தளங்களில் பிரச்சாரம் செய்ய உலகத் தமிழர்கள் அனைவரும் முன்வர வேண்டும் என மே பதினேழு இயக்கம் வேண்டுகோள் விடுக்கிறது. பல்வேறு நாடுகளில் வசிக்கும் புலம்பெயர் தமிழர்கள் உட்பட அனைவரும் ஒரே நேரத்தில் பதிவுகள் இடும்போது, உலகளாவிய ட்ரென்ட்டிங்கில் இடம்பெற முடியும். அப்படி செய்துகாட்ட இயலுமெனில் சர்வதேச கவனத்தை நம் பக்கம் ஈர்க்க முடியும்.

மே பதினேழு இயக்கம்
9884072010

Leave a Reply