தமிழ் உணர்வாளரும், சென்னை உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞருமான ஐயா திரு. கலைமணி அவர்கள் இன்று உடல்நலக்குறைவால் மறைவு

தமிழ் உணர்வாளரும், சென்னை உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞருமான ஐயா திரு. கலைமணி அவர்கள் இன்று உடல்நலக்குறைவால் மறைவுற்றார்.

ஈழவிடுதலையின்பாலும், தந்தை பெரியார் வழிநின்று தமிழ் தேசிய விடுதலையிலும் அளவற்ற ஈடுபாட்டை கொண்டவர். இதற்காக பல களப் பணிகளை நேரடியாக செய்தவர். அதனால் பல கடுமையான இன்னல்களை சந்தித்தவர்.

சர்வதேச கடற்பரப்பில் பயணம் மேற்கொண்ட தலைவர் பிரபாகரன் அவர்களின் உற்ற தோழன் மாவீரன் கிட்டு அவர்களை இந்திய அரசு விதிமுறைகளை மீறி கைது செய்தபோது, அதற்கான போராட்டங்களையும், வழக்குகளையும் நடத்தியவர். ஈழ விடுதலையின் பால் கொண்ட பற்றுறுதிக்காக தனது சொத்துக்களை பெருமளவில் இழந்தவர்.

தமிழ் தேசிய விடுதலைக்காக போராடிய எண்ணற்ற போராளிகளுக்காக யாருமே முன்வராத போது தாமாக முன்வந்து சென்னை உயர் நீதிமன்றத்தில் பல வழக்குகளை நடத்திய ஆகச்சிறந்த தமிழ் தேசியவாதி.

வாழ்வின் இறுதி கட்டத்தில் இருப்பது தெரிந்த பின்னும் தலைவர் பிரபாகரன் தந்தை பெரியார் வழியில் தமிழ்தேசியம் அடைவது ஒன்றே தமிழர்களுக்கு ஒரே தீர்வு என்று உறுதிபட இருந்தவர்.

மே17 இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அரசால் சிறையில் அடைக்கப்பட்டபோது எங்களோடு அவரே தொடர்பிற்கு வந்து ஆலோசனை வழங்கிய பெருந்தகையாளர்.

இப்படிப்பட்ட சீரிய பண்பாளர் கடந்த ஒரு வருடங்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு கடந்த ஒருமாதமாக மருத்துவமனையிலேயே இருந்து வந்தார். இந்நிலையில் இன்று 25.08.20 செவ்வாய்க்கிழமை அதிகாலை 5 மணியளவில் மருத்துவமனையிலேயே அவரது உயிர் பிரிந்தது.

அன்னாரின் உடல் கிழக்கு கடற்கரை சாலை உத்தண்டியில் உள்ள ஐயா அவர்களது இல்லத்தில் இறுதி மரியாதைக்காக வைக்கப்பட்டுள்ளது. இறுதி நிகழ்வு நாளை 26.08.20 புதன்கிழமை காலை 11 மணி அளவில் ஈஞ்சம்பாக்கம் சுடுகாட்டில் நடைபெறும்.

மே17 இயக்கம்
9884072010

Leave a Reply