பற்றி எரியும் தாய்லாந்து மாணவர் போராட்டம் திகைத்து நிற்கும் ஆட்சியாளர்கள்

பற்றி எரியும் தாய்லாந்து மாணவர் போராட்டம் திகைத்து நிற்கும் ஆட்சியாளர்கள்.

உலக மாந்தன் தொடர்ந்து அடக்குமுறைகளுக்கும், ஒடுக்குமுறைகளுக்கும் எதிராக போராடிக் கொண்டேயிருக்கிறான். இதனால் மாற்றங்கள் உடனடியாக இல்லையென்றாலும் என்றாவது வருமென்று போராட்டம் நடந்துகொண்டே இருக்கிறது. அப்படி நடந்துகொண்டிருக்கும் போராட்டம் தான் தாய்லாந்தில் நடக்கும் மாணவர் போராட்டம்.

தாய்லாந்தில் ஆட்சியாளர்களின் சர்வாதிகார போக்காகட்டும், இராணுவத்தை வைத்து ஆட்சி நடத்தும் அவலமாகட்டும், நாட்டின் வளங்கள் கொள்ளையடிக்கப்படுவதை கண்டும் காணாமல் இருப்பதாகட்டும்,தவறுகளை சுட்டிக்காட்டும் மனித உரிமை செயற்பாட்டாளர்கள்,ஊடகவியலாளர்களை மிரட்டுவதாகட்டும் அவர்களை பணியிலிருந்து தூக்குவதாகட்டுமென்று நாளுக்கு நாள் தாய்லாந்து ஆட்சியாளர்களின் ஆட்டுழியங்கள் அதிகரித்து ஒரு கட்டத்தில் மக்கள் இதற்கெதிராக போராட்டத்தில் இறங்கிவிட்டார்கள்.

சில நுறு பேர் போராடுவார்கள் பின்னர் கலைந்து சென்றுவிடுவார்களென்று நினைத்த ஆட்சியாளர்களுக்கு கல்லூரி மாணவர்கள் இந்த போராட்டத்தில் பங்கு பெற்றது இன்று மிகுந்த பதற்றத்தை உருவாக்கியிருக்கிறது. கடந்த ஞாயிறு அன்று 10,000க்கும் அதிகமான மாணவர்கள் தாய்லாந்து தலைநகர் பாங்காங்கில் ஒன்றுகூடி உடனடியாக தாய் அரசு பதவிவிலக வேண்டுமென்றும், புதிய அரசியலமைப்பு சட்டம் எழுதப்படவேண்டுமென்றும் கோரிக்கை வைத்தார்கள்.

போராட்டக்காரர்களின் கோரிக்கைக்கு செவிமடுக்காத ஆட்சியாளர்கள் அடக்குமுறையை கையாள அதுமேலும் மிகப்பெரிய போராட்டத்தை நோக்கி நகர்ந்துவிட்டது. இன்று காலை தாய்லாந்து பள்ளி மாணவர்கள் போராட்டத்தில் இறங்கியிருக்கிறார்கள்.அவர்கள் பள்ளிக்குள் நுழைந்தவுடன் தேசியகீதம் பாடிமுடித்தவுடன் ’போராட்ட முத்திரையான மூன்று விரலை உயர்த்தி’ வகுப்புகளை புறக்கணித்து தங்களது போராட்டத்தை ஆரம்பித்திருக்கிறார்கள். போராட்டக்காரர்களை கட்டுபடுத்த முடியாமல் இத்துணை நாள் அரச அதிகாரமே பெரிது என்று நினைத்துக்கொண்டிருந்த ஆட்சியாளர்கள் திணறுகிறார்கள்.

அரச அடக்குமுறைகளுக்கும் ஒடுக்குமுறைகளுக்கும் எதிராக போராடுவது ஒன்றே ஒரே வழி என்று மக்கள் தீர்மானிக்கும் போது எப்பேற்ப்பட்ட ஆதிக்கசக்திகளும் மக்கள் சக்திமுன் மண்டியிட்டு தான் ஆக வேண்டுமென்பதை தாய்லாந்து மாணவர் போராட்டம் உலகுக்கு மீண்டும் ஒருமுறை உணர்த்தியிருக்கிறது.

போராட்டம் இன்பமயமானது: அதனை ஆடிப்பாடி கொண்டாடி வென்றிடுவோம் விடுதலையை என்பதை போல விரைவில் சனநாயகத்திற்கான தாய்லாந்து மாணவர் போராட்டம் வெல்லட்டும்.

மே17 இயக்கம்
9884072010

Leave a Reply