மோடி அரசு நாட்டு மக்களுக்கு வைக்கப்போகும் அடுத்த ஆப்பு ‘ஒரே நாடு ஒரே சுகாதார அட்டை’

மோடி அரசு நாட்டு மக்களுக்கு வைக்கப்போகும் அடுத்த ஆப்பு ‘ஒரே நாடு ஒரே சுகாதார அட்டை’

இந்தியா என்பது பல்வேறு மொழி பேசக்கூடிய பல்வேறு கலாச்சாரங்களை கொண்ட பல்வேறு பண்பாடுகளை கொண்ட மக்கள் இணைந்து வாழும் ஒரு கூட்டமைப்பு ஆகும். இப்படிப்பட்ட கூட்டமைப்பை எப்படியாவது ஒற்றை தன்மைக்குள் கொண்டு வந்துவிட வேண்டும் என்கிற அடிப்படையில் தொடர்ந்து பிஜேபி ஆர் எஸ் எஸ் செயல்பட்டு வருகிறது. 2014இல் மோடி பதவி ஏற்றதில் இருந்து இது முன்னை விட மிக வேகமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் தான் ‘ஒரே நாடு ஒரே மொழி’ ‘ஒரே நாடு ஒரே கல்வி’ ‘ஓரே நாடு ஒரே ரேஷன் கார்டு’ என்று தொடர்ச்சியாக திட்டங்கள் நிறைவேற்றப்படுகிறது. இதன் தொடர்ச்சியாகத்தான் வருகிற ஆகஸ்ட் 15ஆம் தேதி இந்திய ஒன்றியத்தின் சுதந்திர தின விழாவின் போது மோடி அறிவிக்கப் போகிற ‘ ஒரே நாடு ஒரே சுகாதார அட்டை’ என்ற திட்டம்.

இந்த திட்டத்தின் கீழ் இந்தியாவில் வாழ்கிற ஒவ்வொரு தனி நபரின் மருத்துவ சிகிச்சை வரலாறுகள், அவர் மேற்கொண்ட அல்லது மேற்கொண்டிருக்கிற சிகிச்சைகள், அவருக்கு போடப்பட்டிருக்கிற தடுப்பூசிகள் குறித்த விவரங்கள் அனைத்தும் ஒரு சுகாதார அட்டையில் பதிவு செய்யப்பட்டு அது டிஜிட்டல் முறையில் மத்திய அரசின் கீழ் சேமிக்கப்படும்.

இப்படி டிஜிட்டல் முறையில் சேமிப்பதால் ஒருவர் எங்கிருந்து வேண்டுமானாலும் எந்த மருத்துவரிடமும் சிகிச்சை எடுத்துக்கொள்ள முடியும் என்று அரசு சொல்கிறது. ஆனால் பிரச்சனை என்பது அதுவல்ல அனைவருக்கும் அடிப்படை சுகாதாரம் அளிக்கப்பட வேண்டும் என்றால் அதற்கு சுகாதார கட்டமைப்பை பலப்படுத்த வேண்டுமே ஒழிய, மக்களின் சுதந்திரத்தில் தலையிடுவது எப்படி சரியாகும்.

அதேபோல இந்த திட்டத்தில் நோயாளி மருத்துவர் மட்டும் இணைக்கப்பட மாட்டார்களாம் கூடுதலாக அடுத்தடுத்த கட்டங்களில் மருந்தகங்கள் மற்றும் மருத்துவ காப்பீட்டு நிறுவனங்களும் இந்த வலைப்பின்னலில் இணைப்பார்களாம். அப்படி என்றால் ஒரு மருத்துவ காப்பீட்டு நிறுவனம் நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் என்னென்ன நோய் இருக்கிறது என்பதை எளிதாக தெரிந்து கொண்டு அதன் அடிப்படையில் அவர்களை எளிமையாக அணுக இந்த திட்டம் வழிவகைசெய்யும். மேலும் நம்மிடம் அனுமதி வாங்காமலே தனியார் காப்பீட்டு நிறுவனங்களுக்கு கீழ் நாம் சென்றுவிடும் அபாயமும் இருக்கிறது. இது திட்டமிட்டு மருத்துவத்துறையை தனியார் ஃமயத்தை நோக்கி நகர்த்தும் மறைமுக வேலை தான்.

மேலும் அனைத்தையும் ஒற்றை தலைமையின் கீழ் மத்திய அரசின் கட்டுப்பாட்டிற்குள் சென்றுவிட்டால் மாநிலம் என்ற ஒன்று இல்லாமல் ஆகிவிடும். ஏனென்றால் சுகாதாரம் என்பது இதுவரை மாநில பட்டியலில் இருக்கிறது அதை திட்டமிட்டு மத்திய அரசு தனது கட்டுப்பாட்டில் எடுப்பதற்காகவே இந்த ஒரே நாடு ஒரே சுகாதார திட்டம்.

அதுமட்டுமில்லாமல் இப்படி டிஜிட்டல் முறையில் சேமிக்கப்படும் தகவல்கள் அனைத்தையும் நிர்வகிக்கும் பொறுப்பு தனியார் மென்பொருள் நிறுவனத்திடம் கொடுக்க இருக்கிறாரார்களாம். ஆக இனி தனி நபர் சுதந்திரம் என்பது காற்றில் பறக்கவிடப்படும். ஏற்கனவே ஆதார் அட்டை என்பதன் மூலம் தனிநபர் சார்ந்த அனைத்து செய்திகளையும் விவரங்களையும் மிக எளிதாக பெற்றுக்கொள்ள முடியும் என்ற சூழ்நிலை இருந்த நிலையில் இப்போது ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கையையும் அவரின் அந்தரங்க செயல்பாடுகளையும் அறிந்து கொள்வதற்கான வாய்ப்பை இந்த திட்டம் உருவாக்கும்.

இப்படிப்பட்ட மோசமான சுகாதார திட்டத்தை நாம் ஆரம்பத்திலேயே எதிர்க்க வேண்டும் இல்லையேல் சுகாதாரம் என்பதை இனி மறந்துவிட வேண்டியதுதான். பணம் இருப்பவர்களுக்கு மட்டுமே வைத்தியமென்கிற ஒரு சுழல் உருவாகும்.

மே17 இயக்கம்
9884072010

Leave a Reply