தமிழக அரசே! நீலகிரியின் சுற்றுச்சூழலை அழிக்கும் மிகப்பெரிய நிர்மின் திட்டத்தை கைவிடுக.

தமிழக அரசே! நீலகிரியின் சுற்றுச்சூழலை அழிக்கும் மிகப்பெரிய நிர்மின் திட்டத்தை கைவிடுக. – மே பதினேழு இயக்கம்

இயற்கை இயல்பாகவே பல சிறப்பம்சங்களை தமிழகத்திற்கென்று தந்திருக்கிறது. அதை நமது சுயநலத்திற்காகவும், அரசுகளின் தவறான பொருளாதார கொள்கைகளாலும் பலவற்றை இழந்துவிட்டோம். எஞ்சியிருப்பதையாவது காப்பாற்ற வேண்டுமென்பதற்காகத்தான் நாம் காவிரி படுகையில் மீத்தேன் எடுப்பதையும் கூடங்குளத்தில் ஆபத்தான அணுவுலைகள் வைப்பதையும் இன்னும் பல தீமையான திட்டங்களையும் கடுமையாக எதிர்க்கின்றோம். ஆனால் அரசுகள் புதுப்புது வழிகளில் புதுப்புது அழிவுத் திட்டங்களை செயல்படுத்திக் கொண்டேதான் இருக்கிறது. அந்த வகையில் தற்போது நீலகிரியில் சுற்றுச்சூழலை கடுமையாக பாதிக்கக்கூடிய நீர்மின்நிலையத்தை அமைக்க தமிழக அரசு முயலுகிறது.

தமிழகம்,கேரளம்,கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களின் பருவநிலையை தீர்மானிக்கக்கூடிய மிகமுக்கியமான இடமான நீலகிரி மலைப்பகுதியில் 4200கோடிசெலவில் 4X250MW =1000MW மின்சாரம் தயாரிக்கும் மிகப்பெரிய நீர்மின்திட்டத்தை நீலகிரி மாவட்டத்திலுள்ள சில்ஹல்லா ஆற்றின் குறுக்கே செயல்படுத்த தமிழக அரசு முடிவு செய்திருக்கிறது.

இந்த திட்டதிற்காக 777ஹெக்டேர் பரப்பளவுள்ள நிலம் கையகப்படுத்தப்படவுள்ளது. இதில் 445ஹெக்டேர் இடம் வனப்பகுதிக்கு சொந்தமானது. இந்த திட்டத்திற்கு மிக அருகில் அதாவது 3.9கி.மீ அருகில் முகூர்த்தி தேசிய பூங்காவும், 4.18கி.மீ அருகில் முதுமலை மூகூர்த்தி புலிகள் வழித்தடமும் இருக்கிறது. மேலும் ஏற்கனவே குந்தா நதியின் குறுக்கே 535MW நீர்மின்திட்டம் செயல்பட்டுக் கொண்டிருக்கும்போது, இப்போது குந்தா நதியின் கிளைநதியான சில்ஹல்லா நதியின் நடுவேயும் அணைகட்டினால் குந்தா நதியின் வழித்தடத்தையே இது முற்றிலும் மாற்றிவிடும். மேலும் மிகப்பெரிய பாதிப்பென்பது இந்த பகுதி என்பது அடிக்கடி நிலச்சரிவு ஏற்படும் பகுதியும் கூட இங்கே வந்து அணைகட்டி அது சேதமடைந்தால் இங்குவாழுகிற பல்வேறு பழங்குடியினர் கூண்டோடு அழிந்துபோகும் சூழல் ஏற்படும். தற்போது கேரள மாநிலம் இடுக்கியில் நிலச்சரிவு என்ற செய்தி வருவது இதை ஒத்தது தான்.

இப்படிப்பட்ட மோசமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய திட்டத்திற்கு மிகக்கடுமையான எதிர்ப்பு இருந்த நிலையில் இத்தனைநாள் இதனை செயல்படுத்த அரசுகள் தயங்கிக்கொண்டிருந்தது. இப்போது மத்திய அரசு பெரிய திட்டங்களுக்கு சுற்றுச்சுழல் அனுமதியோ அல்லது பொதுமக்கள் கருத்து கேட்போ கேட்கத்தேவையில்லை என்று சுற்றுப்புறச்சூழல் தாக்க அறிக்கை 2020 தாக்கல் செய்தபின் முடங்கியிருந்த நீலகிரி நீர்மின்திட்டப் பணிகள் மும்முரமாக நடக்க ஆரம்பித்திருக்கிறது. கடண்டஹ் ஒருவாரத்திற்கு முன்பு அதாவது ஜீலை 29இல் இந்த திட்டத்தை நிறைவேற்றுவதற்காக நிபுணர்குழுவின் கூட்டம் நடைபெற்றிருக்கிறது.

ஆகவே தமிழக அரசு இந்த நீலகிரி நீர்மின் திட்டத்தை உடனடியாக கைவிடவேண்டும். மக்களுக்கும் இயற்கைக்கும் பாதகமில்லாத மாற்று எரிசக்திவழிகளில் கவனத்தை செலுத்தி அதன் மூலம் மக்களும் இயற்கையையும் பயன்பெறும் திட்டங்களை செயல்படுத்தவேண்டும்.

மே பதினேழு இயக்கம்
9884072010

Leave a Reply