தமிழக அரசே! பாரி ஆண்ட பறம்புமலையினை தனியாருக்கு தாரை வார்ப்பதா! பிரான்மலைக்குன்றுகள் உடைக்கப்படுவதை உடனடியாக தடுத்து நிறுத்து!

தமிழக அரசே! பாரி ஆண்ட பறம்புமலையினை தனியாருக்கு தாரை வார்ப்பதா! பிரான்மலைக்குன்றுகள் உடைக்கப்படுவதை உடனடியாக தடுத்து நிறுத்து! – மே பதினேழு இயக்கம்

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி தாலுகாவில் வரலாற்றுச் சிறப்புமிக்க பிரான்மலை எனும் கிராமத்தில், 2300 ஆண்டுகளுக்கு முன்பு பாரி மன்னர் ஆண்டு வந்த “பறம்பு நாட்டின் தலைநகரம்” பாரிமலை எனும் கொடுங்குன்றம் மலையும், தொடர்ச்சியாக கிழக்குத் தொடர்ச்சி மலைகளும் உள்ளன. அந்த மலையில் காலம்காலமாக ஊராருக்குச் சொந்தமான மலையாண்டி கோவிலும், மலையின் உச்சியில் ஆன்மீகத் தளங்களான முருகர் கோவிலும், முசுலீம்கள் மட்டுமல்லாது இந்துக்களும் வணங்கி கந்தரி கொடுக்கும் தர்காவும் உள்ளன. மேலும் மலை உச்சியில், வெள்ளையர்களை எதிர்த்து தமிழ் மன்னர்கள் போராடியதற்குச் சான்றாக பீரங்கி ஒன்றும் உள்ளது. இந்த மலையின் உச்சிக்கு செல்வதற்கு 7 கிமீ தூரத்திற்கு பாதையும் காலம்காலமாக இருந்துவருகிறது.

மேலும் நான்காம் நூற்றாண்டு குகைக்கோவிலும், 7ஆம் நூற்றாண்டில் திருஞானசம்பந்தரால் பாடல்பெற்ற திருத்தலமான திருக்கொடுங்குன்ற நாதர் கோவிலும், பல வரலாற்று கல்வெட்டுகளும் இங்கு உள்ளன. பாரி மன்னர் வாழ்ந்ததற்கு அடையாளமாக இன்றும் பாரிவிழா, பாரிவேட்டை போன்ற நிகழ்வுகளும் நடந்து வருகின்றன. மேலும் இந்த கொடுங்குன்றம் மலை பார்ப்பதற்கு கயிலாயம் போன்றே காட்சிதருவதால், இது “தென் கயிலாயம்” என்றும் பாடப்பெற்றுள்ளது. இந்த மலை உச்சியில் தீபம் ஏற்றிய பிறகே, சுற்றியுள்ள கிராமங்களில் கார்த்திகை தீபம் ஏற்றப்படுவது காலம்காலமாக வழக்கத்தில் உள்ளது. அந்த மலைப்பகுதிகளில் மிக அபூர்வமான மருந்துச் செடி கொடிகளும், நரி, மான் போன்ற விலங்குகளும் வனத்துறை கட்டுப்பாட்டு பகுதியும் உள்ளன.

இத்தகைய வரலாற்றுச் சிறப்புமிக்க கொடுங்குன்றம் மலையின் பாதி மலைப்பகுதி தற்போது தனியாருக்கு தாரை வார்க்கப்பட்டிருக்கிறது. 2000 ஆண்டுகளாக உச்சி மலைக்கு கோட்டைக்கு, ஆன்மீகப்பயணமாகவும், சாமி கும்பிடவும், கந்தரி கொடுக்கவும், சுற்றிப்பார்க்கவும் பயன்படுத்திய வழி, தற்போது தனியார் சொந்தம் கொண்டாடுவதால் அவர்களின் அனுமதியின்றி மலைக்குச் சென்று சுற்றிப்பார்க்கவோ, சாமி கும்பிடவோ, ஊரார் கோவிலான மலையாண்டி கோவிலுக்கு செல்வதோ மறுக்கப்படுகிறது. மேலும் காலம்காலமாக ஊரார் வணங்கி வந்த மலையாண்டி கோவிலும் இப்போது தனியார் வசம் உள்ளன. இதன் அருகிலுள்ள பல குன்றுகளையும் சேர்த்து ஏறக்குறைய 1500 ஏக்கர் பரப்பளவிற்கு தனியாருக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் இப்போது உண்மைகளை மறைத்து சட்டத்திற்கு புறம்பாக குவாரிகள் அமைத்து கிழக்குத் தொடர்ச்சி மலைகளை வெட்டி உடைத்து வருகின்றனர்.

இப்பகுதி தனியார்வசம் சென்றபின், இருபோகம் செழித்து விளைந்த விவசாய நிலங்கள் தரிசாகியுள்ளன. இவர்கள் தோண்டிய குழியினால் நீர்வரத்து தடைபட்டு கண்மாய்கள் வறண்டுபோய்யுள்ளன. நாளொன்றுக்கு நூற்றுக்கணக்கான லாரிகள் வந்து செல்வதால் பல விபத்துகளும் உயிரிழப்பும் ஏற்படுகின்றன. இவர்களின் மலை உடைக்கும் செயலால் “கிழக்குக் தொடர்ச்சி மலையினால் உருவாகும் மழை” பாதிக்கப்படுவதோடு, அதிர்வின் காரணாமாக மலைமேல் ஆங்காங்கே நிற்கும் பெரிய கற்கள் உருண்டோடி வந்தால் பல வீடுகளும் மக்களும் பாதிக்கக்கூடும். ஏற்கனவே மலையிலிருந்து உருண்ட மிகப்பெரிய கல்லொன்று கிராமங்களின் பக்கம் விழாமல் மறுபக்கம் உருண்டோடியதால் மக்கள் தப்பியதாக சொல்லப்படுகிறது.

எனவே வரலாற்றுச் சிறப்புமிக்க பாரிமலையை தனியார் ஒருவருக்கு பட்டா வழங்கியதை ரத்து செய்து அதனை அரசு மீட்டெடுக்கும்படியும், உடனடியாக கிழக்குத் தொடர்ச்சி மலை உடைக்கப்படுவதை நிறுத்தும்படியும் மே பதினேழு இயக்கம் அரசினை வலியுறுத்துகிறது. மேலும், காலம்காலமாக மக்கள் கட்டுப்பாட்டில், பயன்பாட்டில் இருக்கும் பகுதிகளை எவ்வித இடையூறும் இல்லாமல் பயன்படுத்த ஆவன செய்யவும் வலியுறுத்துகிறது. இது தொடர்பாக பரம்பு மலை பாதுகாப்பு இயக்கம் வரும் ஞாயிறன்று (02-08-20) முன்னெடுக்கும் இணையவழி போராட்டத்திற்கு மே பதினேழு இயக்கம் ஆதரவளிக்கிறது.

மே பதினேழு இயக்கம்
9884072010

Leave a Reply