தமிழக அரசே! மேலநீலிதநல்லூர் கல்லூரியை மீட்க நடவடிக்கை எடு!

தமிழக அரசே! மேலநீலிதநல்லூர் கல்லூரியை மீட்க நடவடிக்கை எடு! – மே பதினேழு இயக்கம்
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகிலுள்ள மேலநீலிதநல்லூர் அமைந்துள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் (பிஎம்டி) கல்லூரி, அவ்வட்டாரத்தை சேர்ந்த பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின மக்களின் முன்னேற்றத்திற்காக 1970 முதல் செயல்பட்டு வருகிறது. முன்னாள் சட்டமன்ற தலைவர் செல்லப்பாண்டியன் தலைமையில் செயல்பட்ட இந்த கல்லூரிக்கு, அப்பகுதியை சேர்ந்த பட்டியலின சமூக மக்கள் உட்பட பல்வேறு சமூகத்தவர்கள் நிலம், நிதி போன்றவற்றை நன்கொடையாக அளித்து உருவாக்கினர்.
முன்னாள் சட்டமன்ற தலைவர் செல்லபாண்டியன் தலைமையிலான, தேவர் எஜுகேஷனல் சொசைட்டி, திருநெல்வேலி என்னும் சங்கத்திற்கு, பிஎம்டி கல்லூரியை நிர்வகிக்க 1969-ல் வழங்கப்பட்ட உரிமத்தை, 1971-ல் பதியப்பட்ட தேவர் எஜுகேஷனல் சொசைட்டி, மேலநீலிதநல்லூர் என்னும் சங்கத்திற்கு வழங்கப்பட்டதாக கூறி, அக்கல்லூரி நிர்வாகம் மோசடி கும்பலால் கைப்பற்றப்பட்டது. செல்லபாண்டியன் நிர்வாக குழுவில் செயல்பட்ட பொன்னையாவும், அவரது மறைவுக்கு பின் அதே கல்லூரியில் பணியாற்றிய இரமாதேவியும் மற்றும் அவரது மகன் பிரபு ரஞ்சித் ஆகியோரால் இன்றளவும் தவறாக நிர்வகிக்கப்பட்டு வருகிறது.
கேரளாவை சேர்ந்த மலையாளியான இரமாதேவி, கல்லூரி நிர்வாகத்திலிருந்து சிறிது சிறிதாக தமிழர்கள் அனைவரையும் நீக்கிவிட்டு, இன்று முழுவதுமாக மலையாளிகளை கொண்டு நிர்வகித்து வருகிறார். பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின மக்களின் முன்னேற்றத்திற்காக உருவாக்கப்பட்ட ஒரு கல்லூரி, இன்று முழுமையாக வணிக நோக்கத்துடன் மட்டுமே செயல்படுகிறது. மேலும், அவ்வளாகத்திலுள்ள 600க்கும் மேற்பட்ட பழமையான மரங்களையும் முறைகேடாக வெட்டி வீழ்த்தியுள்ளார்.
இரமாதேவி தன் மீதான புகார்களை தடுக்க, ஆர்எஸ்எஸ்.-பாஜகவினரை கைக்குள் போட்டுக்கொண்டு சட்டத்தை மீறி செயல்பட்டு வருகிறார். அவர்களிடமிருந்து இந்த கல்லூரியை மீட்க அப்பகுதி மக்களும், மாணவர்களும் கடுமையாக போராடி வருகின்றனர். அதற்காக பரப்புரை மேற்கொள்பவர்களையும், புகாரளிப்பவர்களையும் ஆஎஸ்எஸ்-பாஜகவினர் துணை கொண்டு மிரட்டப்பட்டு வருகின்றனர். சில வேளைகளில் இந்துத்துவ குண்டர்களால் தாக்கப்பட்டும் வருகின்றனர். தற்போது பிஎம்டி கல்லூரி தவறான நிர்வாகத்தினரிடமும், இந்துத்துவ சக்திகளிடமும் சிக்கி சீரழிந்து வருகிறது.
இதனால், அந்த வட்டாரத்திலுள்ள நூற்றுக்கணக்கான பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின மாணவர்களின் கல்வி சீரழிக்கப்பட்டு அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது. பிஎம்டி கல்லூரி சிக்கலில் தமிழ்நாடு அரசு உடனடியாக தலையிட்டு மாணவர்களின் எதிர்காலத்தை காக்க வேண்டுமென மே பதினேழு இயக்கம் வலியுறுத்துகிறது. கல்லூரி நிர்வாகம் தொடர்பான புகார்களை ஏற்கவும், வழக்கை விரைந்து நடத்தவும், நிர்வாகம் தொடர்பான சிக்கல் தீரும் வரை அரசே கல்லூரியை எடுத்து நடத்த வேண்டும் என்றும் கோருகிறோம். மேலும், கல்வி விவகாரங்களில் தலையிட்டு மாணவர்களையும், மக்களையும் மிரட்டியும் துன்புறுத்தியும் வரும் சமூக விரோத ஆர்எஸ்எஸ்-பாஜக கும்பலை உடனடியாக கைது செய்து தண்டிக்கப்பட வேண்டும் என மே பதினேழு இயக்கம் வலியுறுத்துகிறது.
மே பதினேழு இயக்கம்
9884072010

Leave a Reply