தமிழ்நாட்டு ஊடகங்களை ஆக்கிரமிக்க நினைக்கும் சனாதன சதியை முறியடிப்போம்!

தமிழ்நாட்டு ஊடகங்களை ஆக்கிரமிக்க நினைக்கும் சனாதன சதியை முறியடிப்போம்! – மே பதினேழு இயக்கம்

தமிழ்நாட்டு ஊடகங்களில் பணிபுரியும் தலைசிறந்த சில ஊடகவியலாளர்கள் பெயர்களை பட்டியலிட்டு, அவர்கள் பணியிலிருந்து வெளியேற்றப்பட வேண்டும் என்றும் அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், கடந்த சில வாரங்களுக்கு முன்பு இந்துத்துவ தீவிரவாத நபர்கள் சமூக வலைத்தளங்களில் பேசிவந்தனர். அதன்படியே தற்போது நியூஸ் 18 தமிழ்நாடு செய்தி தொலைகாட்சியின் தலைமை பொறுப்பிலிருந்த ஹஃசீப் முகமது அவர்கள் பணியிலிருந்து விலக நிர்பந்திக்கப்பட்டதும், மூத்த செய்தியாசிரியர் குணசேகரன் அவர்களது அதிகாரங்கள் பறிக்கப்பட்டதும் அரங்கேறியுள்ளது. அதேபோல் மேலும் பல்வேறு ஊடகங்களில் பணியாற்றும் ஊடகவியாலளர்கள் சிலரின் பணிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் அறியமுடிகிறது. நியூஸ் 18 தமிழ்நாடு செய்தி நிறுவனத்தின் இந்த நடவடிக்கையை மே பதினேழு இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது.

வலதுசாரி உயர்சாதி ஊடகவியாலளர்கள் மத்தியில் பிற்படுத்த மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பிலிருந்து முதல் தலைமுறை ஊடகவியலாளர்கள் தமிழ்நாட்டு ஊடகங்களில் உயர் பொறுப்புகளுக்கு வந்துள்ளனர். நடுநிலை என்பது ஒடுக்கப்பட்டோரின் பக்கம் நின்று பேசுவது தான் என்பதை உரக்க சொல்கின்றனர். எளிய மக்களின் குரலை நாடறிய செய்கின்றனர். அப்படியிருக்கும் நிலையில், இதுநாள் வரை பார்ப்பனிய சிந்தனை கோலோச்சிய ஒரு துறையில், இடதுசாரி சிந்தனையுடன் கூடிய சமூகநீதிக்கான குரல்களை இந்த ஊடகவியலாளர்கள் எழுப்பியது, உயர்சாதி ஊடகவியலாளர்களின் இருப்பிடத்தை கேள்விகுறியாக்கியுள்ளது. மத்தியில் ஆளும் பாஜக அரசு பாசிச கரங்களை வீசிக்கொண்டிருக்கும் இவ்வேளையில், அதனை பிடித்துக் கொண்டு தமிழ்நாட்டின் ஊடகங்களை மீண்டும் கைப்பற்றத் துடிக்கின்றனர்.

இந்நிலையில், அடுத்த ஆண்டு தமிழ்நாட்டிற்கான பொதுத்தேர்தல் வரவுள்ள நிலையில், தமிழ்நாட்டு ஊடகங்களை கைப்பற்றுவதன் மூலம் தன் விசக் கருத்துகளை தமிழ்நாட்டு மக்களிடையே திணிக்கும் திட்டத்தோடு, ஆஎஸ்எஸ் தற்போது அதற்கான செயலில் இறங்கியுள்ளதாகவே தெரிகிறது. அதன் தொடர்ச்சியாகவே இடதுசாரி ஊடகவியலாளர்கள் மீதான தற்போதைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்பது ஊகிக்கக்கூடியதே. அறத்துடன் கூடிய சமூகநீதி கருத்துகள் முன்னணி ஊடகங்களில் பேசப்படுவதை தடுக்கவும், அரசின் பாசிச நடவடிக்கைகள் மக்களை சென்றடைவதை தடுக்கவும், அதேவளை தீவிர இந்துத்துவ கருத்துகளை பெரும்பான்மையோரின் கருத்துகளாக மக்களிடையே திணிக்கவும், சனாதன சக்திகள் திட்டமிட்டுள்ளன.

ஆர்எஸ்எஸ்-இந்துத்துவ கூட்டத்தினரின் இந்த சதியினை தமிழக மக்களாகிய நாம் புரிந்துகொண்டு, அதனை முறியடிப்பதற்கான செயலில் உடனடியாக ஈடுபட வேண்டுமென மே பதினேழு இயக்கம் கோரிக்கை விடுக்கிறது. அதன்படி, இந்துத்துவ கூட்டத்தினரின் இது போன்ற நடவடிக்கைகளை அடையாளம் காண்பதோடு, அத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் தடுக்க நிர்வாகத்திற்கு அழுத்தங்களை அளிப்பதோடு, மக்களிடையே அம்பலப்படுத்தவும் முனைய வேண்டும். மீறி, பாசிச சக்திகளின் கட்டளைக்கு இணங்கி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் ஊடகங்களை மக்கள் புறக்கணிக்க பரப்புரை மேற்கொள்ள வேண்டும். அதன்படி, அந்த ஊடகங்களின் சந்தாவினை நிறுத்துவதோடு, அவற்றின் சமூக வலைத்தளங்களை பின்தொடர்வதையும் நிறுத்தி ஒட்டுமொத்தமாக புறக்கணிக்க மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வலியுறுத்துகிறோம்.

ஜனநாயகத்திற்கு எதிரான இந்த பாசிச போக்கினை அனைத்து ஜனநாயக கட்சிகளும், அமைப்புகளும் கண்டிப்பதோடு, அதனை தடுத்து நிறுத்துவதற்கான வேலைகளையும் மேற்கொள்ள வேண்டுகோள் விடுக்கின்றோம். இதற்கான முன்னெடுப்புகளை மேற்கொள்ளும் ஜனநாயக அமைப்புகளோடு இணைந்து செயல்பட மே பதினேழு இயக்கம் தயாராக உள்ளது. தமிழ்நாட்டினை ஆக்கிரமிக்க வரும் வலிமைமிக்க சனாதன கூட்டத்தின் சதியினை ஒற்றுமையோடு அறத்தின் வழியில் நின்று இணைந்து முறியடிக்க உறுதியேற்போம்!

மே பதினேழு இயக்கம்
9884072010

Leave a Reply