தமிழக அரசே, தந்தை பெரியார் சிலையை அவமதித்தவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடு!

தமிழக அரசே, தந்தை பெரியார் சிலையை அவமதித்தவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடு!

கோயம்புத்தூர் சுந்தராபுரத்தில் அமைந்துள்ள தந்தை பெரியார் அவர்களின் சிலை மீது, அடையாளம் தெரியாத சிலர் இன்று (17-07-2020) அதிகாலை இருளில் காவி நிற சாயத்தை ஊற்றிச் சென்றுள்ளனர். தமிழ்நாட்டு மக்களிடையே மதரீதியிலான பிளவை உண்டாக்கி கலவரம் செய்ய திட்டமிடும் இந்துத்துவ காவி கூட்டங்களின் ஒரு செயலாகவே பார்க்கப்படுகிறது. இந்துத்துவ சக்திகள் தமிழ்நாட்டில் காலூன்றுவதற்கு, பெரியாரின் சமூகநீதி தத்துவங்கள் தடையாக இருப்பதும், பெரியாரியவாதிகள் இந்துத்துவத்தை தோலுரித்துக் காட்டுவதை சகித்துக்கொள்ள இயலாமல் இருப்பதும் இது போன்ற பெரியார் சிலை அவமதிப்பை செய்யத் தூண்டுகிறது. கறுப்பர் கூட்டத்தின் மீதான அடக்குமுறையும் இதன் பின்னணியில் தான் உள்ளன.

இந்துத்துவ சக்திகளின் பெரியார் சிலை அவமதிப்பு என்னும் இந்த கீழ்த்தரமான செயலை மே பதினேழு இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது. சகிப்புத்தன்மையற்ற, கருத்தை கருத்தால் வெல்ல இயலாத காவி கூட்டத்தின் இது போன்ற செயல்கள் தமிழ்நாட்டின் அமைதியை சீர்குலைக்கும் முயற்சியே. பாஜகவின் எச்.ராஜா போன்றோர் பெரியார் சிலையை உடைக்க தூண்டிய போதே தமிழ்நாடு அரசு தக்க நடவடிக்கை எடுத்திருந்தால் இது போன்ற சம்பவம் அரங்கேறியிருக்காது. பெரியாரின் வழித்தோன்றல் கட்சி எனவும், திராவிட கட்சி எனவும் சொல்லிக்கொள்ளும் அதிமுக அரசு, இது போன்ற செயல்களை அனுமதிப்பது எந்தவகையிலும் ஏற்புடையதல்ல.

தமிழக அரசே! பெரியார் சிலையை அவமதித்தவர்களை உடனடியாக கைது செய்து சிறையிலடை. குற்றவாளிகளுக்கு பின்னால் இருந்து இயக்கியவர்களையும், உந்துசக்தியாக இருந்தவர்களையும் இணைத்தே கைது செய். அமைதிப்பூங்காவாம் தமிழ்நாட்டை சீர்குலைக்க முயலும் மதவாத அமைப்புகளை உடனடியாக தடை செய். அரசு சார்பில் தந்தை பெரியாரின் சிலையை சீர் செய்து, புதுப்பொலிவோடு அமைத்து கொடு.

தந்தை பெரியாரின் கருத்தியலால், மதநல்லிணக்கத்திற்கு பெயர் போன மாநிலம் என்ற கருதப்படும் தமிழ்நாட்டை, சில மதவாதிகளின் குறுகிய கண்ணோட்டத்தால் அழிந்துவிட அனுமதிக்காதே. பொறுப்பை தட்டிக்கழித்தோ, பெயரளவிற்கு நடவடிக்கை எடுத்தோ உண்மையான குற்றவாளிகளை தப்புவிக்க முயற்சித்து தமிழ்நாட்டு மக்களின் கடுமையான எதிர்ப்புக்குள்ளாகாதே!

கோவை மற்றும் கள்ளக்குறிச்சியில் பெரியார் சிலைகளை சேதப்படுத்திய சமூக விரோதிகளை கண்டித்தும், பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் மருத்துவ கனவை சிதைக்கும் பிஜேபியை கண்டித்தும் மே17 இயக்கத்தின் சார்பாக ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி வெளியிட்டுள்ள கானொளி

மே பதினேழு இயக்கம்
9884072010

Leave a Reply