காவல்நிலையப் படுகொலைகள் குறித்து தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு இயக்கங்களின் கூட்டறிக்கை

தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு இயக்கங்களின் கூட்டறிக்கை
தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பில் இடம்பெற்றிருக்கும் சில இயக்கங்களின் தலைவர்கள் சூலை 1, 2020 அன்று மாலை 6 மணிக்குத் தோழர் வேல்முருகன் தலைமையில் அவசரமாகக்கூடி காவல்நிலையப் படுகொலைகள் குறித்து விவாதித்தோம்.
அந்தக் கூட்டத்தில் கீழ்க்காணும் ஆளுமைகள் கலந்துகொண்டு தங்கள் கருத்துகளைத் தெரிவித்தனர்.
தோழர் இரா. முத்தரசன், இந்தியப் பொதுவுடைமைக் கட்சி,
தோழர் மல்லை சத்யா (துணைப் பொதுச்செயலாளர், மதிமுக)
தோழர் வன்னியரசு (துணைப் பொதுச்செயலாளர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி)
தோழர் வேல்முருகன், தமிழக வாழ்வுரிமைக் கட்சி,
தோழர் ஜவாகிருல்லா, மனிதநேய மக்கள் கட்சி,
தோழர் நெல்லை முபாரக், SDPI கட்சி,
தோழர் கொளத்தூர் மணி, திராவிடர் விடுதலைக் கழகம்,
தோழர் கு. இராமகிருட்டிணன், தந்தை பெரியார் விடுதலைக் கழகம்,
தோழர் கே. எம். செரீப், தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சி,
தோழர் நாகை திருவள்ளுவன், தமிழ்ப் புலிகள் கட்சி,
தோழர் பொழிலன், தமிழக மக்கள் முன்னணி,
தோழர் திருமுருகன் காந்தி, மே 17 இயக்கம்,
தோழர் சுப. உதயகுமாரன், பச்சைத் தமிழகம் கட்சி.
கூட்டத்தின் முடிவில் கீழ்க்காணும் தீர்மானங்கள் எடுக்கப்பட்டன:
1) சாத்தான்குளம் காவல் நிலைய இரட்டைக்கொலை வழக்கில் கொலைவழக்குப் பதிவுசெய்ய முகாந்திரம் இருக்கிறது என்று உயர்நீதிமன்றக் கிளை கருத்துத் தெரிவித்தபிறகும், தமிழகக் காவல்துறை சில குற்றவாளிகளைக் காப்பாற்றும் விதத்தில் செயல்படுவதைக் கண்டிக்கிறோம்.
ஆறு பேர் மீது வழக்குப் பதியப்பட்டிருப்பதாகவும், சிரீதர் ஆய்வாளருடன் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன் ஆகிய உதவி ஆய்வாளர்களும், முருகன், முத்துராஜ் ஆகிய இரண்டு தலைமைக் காவலர்களும் கைது செய்யப்பட்டிருப்பதாகவும், பால்ராஜ் எனும் துணை உதவி ஆய்வாளர் அரசுத்தரப்பு சாட்சியாக ஏற்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வரும் நிலையில், இந்தக் கொலைபாதகம் தொடர்புடைய காவல்துறை நண்பர்கள் (சேவா பாரதி) கணபதி, கண்ணன், ஜேக்கப், எலிசா ஆகிய நால்வரும், சிறைத்துறையினர், மருத்துவர் உள்பட அத்தனை பேரும் கைதுசெய்யப்பட வேண்டும், அனைவர் மேலும் கொலைவழக்குப் பதியப்படவேண்டும் என்றும் வலியுறுத்துகிறோம்.
2) திரு. ஜெயராஜ், திரு. பென்னிக்ஸ் ஆகியோரை முறைப்படி பொறுப்புணர்வுடன் பரிசோதிக்காத சாத்தான்குளம் அரசு மருத்துவரான வெண்ணிலா, சாத்தான்குளம் நீதித்துறை நடுவர் பி. சரவணன், கோவில்பட்டி கிளைச் சிறையில் பொறுப்பிலிருந்த காவலர் அழகர்சாமி, கிளைச் சிறையின் சப்-ஜெயிலரான சங்கர், கோவில்பட்டி அரசு மருத்துவமனையின் மருத்துவரான வெங்கடேஷ் ஆகியோரையும் இந்தக் கொலைவழக்கில் குற்றவாளிகளாகச் சேர்த்துக்கொள்ள வேண்டும். அதேபோல, இந்த வழக்கின் உண்மைகளை மறைத்து மக்களைத் திசைதிருப்பும் முயற்சியில் ஈடுபட்ட தூத்துக்குடி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அருண் பாலகோபாலன், சாத்தான்குளம் காவல்நிலையத்துக்கு நேரடிப் பொறுப்பாளராக இருந்த துணைக் கண்காணிப்பாளர் சி. பிரதாபன் ஆகியோரும் இந்த வழக்கில் குற்றவாளிகளாகச் சேர்த்துக்கொள்ளப்பட வேண்டும் என்று வற்புறுத்துகிறோம்.
3)சாத்தான்குளம் காவல் நிலையத்தில் குற்றம்நிகழ்ந்த இரவன்று என்ன நடந்தது என்று சாட்சியம் அளித்திருக்கும் தலைமைக் காவலர்கள் திருமதி. ரேவதி மற்றும் பால்துரைக்கும், கோவில்பட்டி நீதித்துறை நடுவர் திரு. எம். எஸ். பாரதிதாசன் ஆகியோருக்கு உரிய பாதுகாப்பு வழங்கவேண்டுமென்று தமிழக அரசைக் கேட்டுகொள்கிறோம்.
4)சாத்தான்குளம் வழக்குக்கு அதாவது காவல்துறை மீதான வழக்குகளுக்குத் தனித்த விரைவு நீதிமன்றம் ஒன்றை அமைக்கவேண்டும் என்றும், அதன் மூலம் வழக்கு விரைந்து நடத்தப்பட்டுப் பாதிக்கப்பட்டவர்களுக்கும், ஒட்டுமொத்த தமிழ் மக்களுக்கும் நீதி வழங்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கிறோம்.
5)காவலர்களின் நண்பர்கள் (Friends of Police) என்கிற சட்டவிரோத அமைப்பு தமிழகம் முழுவதும் இயங்கிவருவதும், அந்த அமைப்பில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் துணை அமைப்பான ‘சேவா பாரதி’ உறுப்பினர்கள் அதிகம் பேர் பங்கு வகிப்பதும், இவர்கள் காவல் நிலையங்களில் விசாரணைக் கைதிகளை அடித்துச் சித்திரவதை செய்வதும் வெளிச்சத்துக்கு வந்திருக்கின்றன. எனவே காவலர்களின் நண்பர்கள் (Friends of Police) என்கிற அமைப்பையும், சேவா பாரதி என்கிற அமைப்பையும் முழுவதுமாகத் தடைசெய்ய வேண்டும் என்று தமிழக அரசை வற்புறுத்துகிறோம்.
6)சாத்தான்குளம் படுகொலைக்குப் பிறகு வீரகேரளம்புதூர் காவல்நிலையத்தில் முருகேசன் என்கிற இளைஞர் அடித்துச் சித்திரவதை செய்யப்பட்டதும், காயல்பட்டினம், எட்டையபுரம், பேய்க்குளம் உள்ளிட்ட தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களிலும் மற்றும் தமிழகம் முழுவதும் பற்பல காவல்நிலையங்களில் சித்தரவதைகள், பாலியல் வன்கொடுமைகள், அடக்குமுறைகள் அடுக்கடுக்காக நடப்பது தெரியவருகிறது. எனவே காவல்துறை அத்துமீறல்களை விசாரிக்கத் தனிப்பிரிவு ஒன்று அமைக்கப்பட வேண்டுமென்று கோருகிறோம்.
7)சாத்தான்குளம் பகுதி மக்கள் நம்பிக்கையிழந்து கடும் மனஉளைச்சலில் தவிக்கும் இத்தருணத்தில் எங்கள் கூட்டமைப்பின் தலைவர்கள் அனைவரும் ஒன்றாக சாத்தான்குளம் போய் திரு. ஜெயராஜ், திரு. பென்னிக்ஸ் குடும்பத்தாரைச் சந்தித்து ஆறுதல் தெரிவிக்க விழைகிறோம். எனவே எங்கள் அனைவருக்கும் இ-பாஸ் வழங்கவேண்டுமென்று தமிழக அரசைக் கேட்டுகொள்கிறோம்.

Leave a Reply