கொரோனா காலத்தில் அரசால் கைவிடப்பட்ட சாமானிய தொழிலாளர்கள்: பாகம் 02

சலவை தொழிலாளர்கள்:

இந்த கொரோனா ஊரடங்கால் வெளியில் தெரியாத அளவுக்கு மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பது சலவை தொழிலாளர்கள் தான். தமிழ்நாடு முழுக்க சற்றேறக்குறைய 50ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் துணிகளை துவைப்பது மற்றும் துணிகளை அயர்ன் பண்ணித்தரும் வேலைகளில் இருக்கிறார்கள்.

சென்னை போன்ற பெரிய நகரங்களில் தெருவுக்கு ஒருவர் வண்டிகளில் அயர்ன் பண்ணித்தரும் நபர்கள் இருப்பார்கள். இவர்களை தவிர பெரிய பெரிய லாண்டிரி கடைகளை வைத்திருப்பவர்களும் இருக்கிறார்கள். இவர்களில் அரசின் நலவாரியத்தில் பதிவு செய்தவர்கள் மிகச்சொற்பமே. இவர்கள் அனைவரும் இந்த கொரோனா காலத்தில் மிகக் கடுமையாக பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

உதாரணமாக கொரோனாவுக்கு முன் மக்கள் வெளியில் செல்வது அதிகமாக இருந்தது, இதனால் ஒரு குடும்பத்தில் வாரத்திற்கு இரண்டு முறையாவது தங்களது துணிகளை துவைக்க அல்லது அயர்ன் பண்ண கொடுத்துக்கொண்டு இருந்தார்கள். ஆனால் கொரோனா காலம் முழுவதும் வீட்டிலேயே மக்கள் இருந்ததினால் அவர்கள் சாதாரண ஒன்று அல்லது இரண்டு உடையை மட்டுமே மாறி மாறி பயன்படுத்தியிருப்பார்கள். இதனால் துணிகளை அயர்ன் செய்வது மற்றும் துவைக்க வெளியில் கொடுப்பது இயல்பாகவே குறைந்திருக்கும்.

அதேபோல தற்போது இன்னும் ஊரடங்கு முழுமையாக நீங்காமல் இருப்பதாலும் வெளியில் கொரோனா பயம் இருப்பதாலும் பெரும்பாலானவர்கள் வெளியில் செல்ல அஞ்சும் சூழலே நிலவுகிறது. ஆகவே சலவை தொழிலாளர்களின் நிலைமை இன்னும் மோசமாகவே இருக்கிறது.

அரசு சலவை தொழிலாளர்கள் நலவாரியம் உள்ளிட்ட 17 அமைப்பு சாரா நலவாரியத்தில் இருக்கும் 73லட்சம் பேருக்கு தலா 1000என 06.04.2020 அன்று அறிவித்தது. இதில் 43லட்சம் பேர் தங்களது நல்வாரிய அட்டையை புதுபிக்கவில்லை என்று சொல்லி நிராகரித்துவிட்டது. மீதமிருப்பவர்களிலும் பல்வேறு காரணங்களை சொல்லி நிராகரித்துவிட்டு வெறும் 14 லட்சத்து 7 ஆயிரத்து 130 தொழிலாளர்களுக்கு மட்டுமே உதவித்தொகை அதாவது ரூ.1000 கொடுக்கப்பட்டது. இதில் சலவை தொழிலாளார் நலவாரியத்தில் இருப்பவர்கள் மிகச்சொற்பமானவர்களுக்கே இந்த உதவி கிடைத்தது.மற்றவர்கள் வறுமையில் வாடும் சூழலே நிலவுகிறது.

ஆகவே அரசு இதனை கவனத்தில் எடுத்துக்கொண்டு இந்த கொரோனா காலத்தில் சமூகத்தில் அடிமட்டத்தில் வறுமையில் இருக்கும் சலவை தொழிலாளர்களின் மேம்பாட்டுக்கு உதவவேண்டும்.

மே17 இயக்கம்
9884072010

Leave a Reply